நாட்டார் இலக்கியங்களையும் திரிக்கிறது ஜாதி வெறி பழனி கோ. முத்துமாணிக்கம்
சாதிமத வெறியைத் தூண்டிவிடும் அரசுகளையும், பதவிக்காக மனிதநேயத்தைப் பலிகொடுப்போரையும் மீறி இனியாவது புதியதோர் உலகம் செய்யப் புறப்பட வேண்டும். சாதியின் பெயரால் மக்களைத் துண்டாடும் சதிகளை முறியடிக்கும் மகத்தான பணி, முற்போக்காளர்களின் முன் நிற்கிறது.
“தொழிலாளிகள்லாம் வாங்கப்பா” …இடுகாட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது அந்த முதியவரின் குரல். இறந்தவர் ஒருவருடைய உடலைப் புதைத்தபின், வந்த கூட்டம் அந்தக் கிராமத்துச் சலவையாளர் விரித்திருந்த ‘மாத்து’ மேல் (தன்னிடம் சலவைக்கு வந்த சேலைகளைத் திருமணம், பூப்பு நீராட்டு விழா, இறுதிச் சடங்குகளுக்கு வரும் மக்கள் அமர்வதற்காகப் பயன்படுத்தும்போது அவை மாத்தாக மாற்றம் பெறும்) உட்கார்ந்தது. “வேலை செஞ்ச தொழிலாளிகள்லாம் வரிசையா வாங்கப்பா. மயானக் காசை வாங்கிக்குங்க.”
ஊருக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லோருக்கும் காசு வாங்கிக் கொடுப்பதற்காக பெரியவர் முன் நின்று கொண்டிருந்தார். “பாடை காட்டியவங்க வாங்க. இந்தா ஆளுக்கு ஒன்னேகால் ரூபா. குழி தோண்டனவங்க வாங்க.. இந்தா நாலு பேருக்கு அஞ்சு ரூபா.. சங்கு ஊதுனவரு எங்கே.. வாங்க.. வாங்க.. பிடிங்க ஒன்னேகாலை.. அப்பறம், சேதி சொல்லப் போனவங்க ஆரு.? ஓ.. இப்பத்தேன் செல்லு வந்த பெறகு அந்த வேலை இல்லேல்ல.. அம்புட்டுத்தேன்.. எல்லார்க்கும் திருப்திதான”-கூலிப் பட்டுவாடா முடிந்தது எல்லோரும் கிளம்பி விட்டார்கள் இடுகாட்டைவிட்டு. கூலித்தொழிலாளருள் ஒருவர் பிணத்துக்குப் போர்த்தப்பட்டு, பின் எடுத்து வைக்கப்பட்ட கோடித்துணியை எடுத்துக் கொண்டிருந்தார். “என்னங்க நடக்குது இங்க.. எந்த நூற்றாண்டுல இருக்கீங்க… நாள் முழுக்க வேலை செஞ்சவு களுக்கு ஒன்னேகால் ரூபா கூலியா?” உறவினர் ஒருவரிடம் கேட்டேன். “கூலி தனியாக் குடுத்தாச்சு மாப்பிள்ளை…. மயானக் காசு கொடுக்கிறது ஒரு சடங்கு.
இன்னின்ன சாதியைச் சேர்ந்த தொழிலாளிக்கு இன்னின்ன வேலை.. அதுக்கு அந்தக் காலத்துல குடுத்த கூலி ஒன்னேகாலு ரூபா. அந்தச் சடங்கை இந்தக் காலத்திலும் விடாமச் செஞ்சுக்கிட்டு வராங்க.”“எல்லாம் படிச்சு முன்னேறிய காலத்துல இந்தச் சடங்குகளச் செய்யறதுக்குத் தொழிலாளர்க வர்றாங்களா? அதைக் கேவலமா நெனைக்க மாட்டாங்களா ?”“ஏதோ படிச்ச பயக சில பேரு மாறிட்டாங்க. ஆனா இந்தக் கிராமத்துல ஆதிக்கச் சாதி மக்களைச் சார்ந்தே வாழ்க்கை நடத்தும் சிலரால், அவர்களே நினைத்தாலும் சாதியையும் சடங்குகளையும் விடமுடிவ தில்லை,” என்றார் உறவினர்.ஆய்வாளர் தொ. பரமசிவன், “சாதியப் படிவங்களால் ஆனது சமுகம். சாதியம் என்பது ஒரு கொடுமையான சமூகநெறி,” என்று கூறியது நினைவுக்கு வருகிறது. “சமூகம் எப்போதும் வர்க்கங்களை உள்ளடக்கியது. வர்க்கமும் சாதியும் அடுத்தடுத்துள்ள அண்டை வீட்டுக்காரர்கள். அவற்றைப் பிரித்து நிற்பது மிகச் சிறிய இடைவெளி. சாதி என்பது அடைபட்டுள்ள ஒரு வர்க்கமே,” என்பார் அம்பேத்கார்.
சாதியைத் தக்கவைத்துக்கொள்ள நடக்கும் சடங்குகளைப் புறக்கணிக்கப் பெரும்பாலோர் தயங்குகின்றனர். இன்னும் கிராமங்களில் ஆதிக்க இனத்துக்குத் தொண்டாற்றும் தொழிலாளர்களும் சடங்குகளில் பங்கு பெற்றுப் பணியாற்ற மறுக்க முடிவதில்லை.. மறுத்தால் அங்கே வாழ முடிவதில்லை. “சாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும் போதாக் குறைக்குப் பொதுத்தொழிலாளர் சமுகம்மெத்த இழிவென்றும்…” (பாவேந்தர்) -கருதும் மனப்போக்கு இன்னும் மறையவில்லை; மடியவில்லை.செய்யும் தொழில், தொல்குடி அமைப்பின் மிச்ச மீதிகள், பிழைப்புத் தேடி வெளியேறல் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டே இந்தியாவில் உள்ள பல்வேறு சாதிகளும் உருவாக்கப்பட்டன என்பது மேனாட்டு ஆய்வாளர்கள் கருத்து. நால்வருணப் பாகுபாட்டால் இன்னின்னார்க்கு இன்ன தொழில் என்று வரையறுக்கப்பட்டு விட்ட சமுகம் இது. ‘தீண்டப்படாதவர்கள் வரலாறு’ சொல்ல வந்த அம்பேத்கர், ‘தீட்டு முத்திரை’ அவனது நெற்றியில் பதிக்கப்பட்டுள்ளது.
அவனது குருதி நாளங்களில் இரத்தம் ஓடுவது போல்,அந்தக்கறை அவனிடம் உள்ளார்ந்து பொதிந்திருக்கும். இந்தியர்களின் பார்வையில் இழிந்தவனாக, மதிப்பற்றவர் களாகக் காட்சியளிக்கும் அவன், தான் செய்ய வேண்டியிருக்கும் தொழில்கள் காரணமாக மேலும் இழிந்தவனாக, அற்பனாக, நிந்தனைக் குரியவனாக ஆகிறான்,” எனக் கூறுகிறார்.. குலத்தொழிலாய்த் திணிக்கப்பட்டதை இனி செய்யமாட்டோம் எனக் குமுறி எழுந்தால் ஒழிய இந்த இழிநிலை மாறாது. சடங்குகள் செய்விக்க வரமாட்டோம் எனச் சீறி எழுந்தால், தமக்குத் தாமே பூட்டிக்கொண்டிருந்த விலங்குகளை நொறுக்கலாம். சாதியையும் சடங்குகளையும் விடாது பிடித்துக் கொண்டிருப்போர்க்கு, வள்ளலார், பெரியார், பாவேந்தர், அயோத்தி தாசர், அம்பேத்கர் முன்னர் நம் சித்தர்கள் – எனத் தொடரும் சமுகப் போராளிகளின் குரல் கேட்கவே இல்லையா? ஆன்மிகம் பேசிய சித்தர்களுக்குள் இருந்தே பிறந்த ‘சாத்திரக் குப்பையைத் தள்ளுடா தள்ளு’ என்ற சீற்றம் புரியவில்லையா?
நம் தமிழகத்தில் அறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் ஏராளம் உள. கண்ணுக்குத் தெரியாத தீட்டு என்பதைக் கழிக்கிறேன் என்று, முப்புரி நூலோர் செய்த சதியே, சடங்கு களுக்குப் பிறப்பிடமாக அமைந்துவிட்டது. உடல் இயற்கை நிகழ்வான பெண்கள் பூப்பெய்தலை இன்னும் சிலர், தெருவெல்லாம் பதாகை நாட்டி விளம்பரப்படுத்தி விழாக் கொண்டாடு கிறார்கள். அவ்விழாவில் பெண்ணுக்கு அதிரசங்களால் ஆரத்தியும் நலுங்கும் எடுத்து, அந்தப் பலகாரங்களை ஒரு சலவைத் தொழிலாளர்க்குத்தான் கொடுக்க வேண்டும் என்ற எழுதா விதியைக் கடைப் பிடிக்கிறார்கள். புதுமனை கட்டிய உழைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு, புரோகிதர்களுக்குப் பல்லாயிரம் செலவுசெய்து “தீட்டு” கழிக்கிறார்கள். உருவம் இல்லாத தீட்டினைப் பசுவின் கோமியத்தால் விரட்டும் வல்லமை நம் ஊர் அறிவியலாளர் புரோகிதருக்கு இருப்பதாக நம்புவோரை என்ன சொல்லித் திருத்துவதென்று இன்னும் புரியவில்லை.
மேற்சாதி என்று சொல்வோர் அதற்கான அடையாளமாகப் பூணும் முப்புரி நூலை வேறு சில சமூகத்தார் தாமும் அணிந்துகொண்டு, தம் அடிமைத் தனத்தைப் பெருமையாகக் கருது வோர்கள் எப்போது கண் திறப்பார்கள்? சாதி, தீண்டாமை போன்ற கருத்தாக்கங்கள் தோன்றிக் காலூன்றியதற்கான காரணங்களாக 1. புனைதல் 2. போலச்செய்தல். 3. திரிபுபடுத்தல், 4. திரும்பத் திரும்பச் சொல்லுதல்/செய்தல், 5. காலத்தால் பழமையானது என நம்பவைத்தல் ஆகியவற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். ‘அவர்கள்’ முப்புரி நூல் அணிந்தால் நாமும் அணிய வேண்டுமா? கனகலிங்கத்தைப் பிராமணனாக்குகிறேன் என அவருக்குப் பாரதி பூணூல் அணிவித்ததில் எனக்கு உடன்பாடில்லை. நந்தனார் தீக்குளித்துப் புனிதராகித் தில்லைக் கோயிலுக்குள் நுழைந்தார் என்பது அருமையான புனைவு என்பதை நாம் ஊகிக்க முடியாதா? சாதியின் பெயரால் அடங்கி இருந்தவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பவே இல்லையா என்ற வினா எழுவது இயல்பே. நாட்டுப்புறப் பாடல்களில் உழைப்போரின் ஆதங்கம் பதிவாகி இருக்கிறது.
காலமெல்லாம் கொடுமை செய்த ஒரு நிலக்கிழார் இறந்து விடுகிறார். இடுகாட்டுக்கு அவரைச் சுமந்து செல்லும்போது, தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் பாடல் மூலம்: “ஈச்ச நல்ல மரத்தை வெட்டி, அந்த இருஞ்சூடு நாக்கருக்குப் பாடைகட்டி, பாட மேல தூக்கி நாங்க, பாட்டாளிப் பெண் களெல்லாம் பாத்து ரசிப்போம்.” “ஆல நல்ல மரத்தை வெட்டி, அந்த ஆலங்குடி நாக்கருக்குப் பாடகட்டி, பாட மேலே தூக்கி வச்சு, பாட்டாளிப் பெண்களெல்லாம் பாத்து ரசிப்போம்.” (நன்றி: ஆ. சிவசுப்பிரமணியம்)அந்த நிலக்கிழார் எவ்வளவு கொடுமை செய்திருந்தால், உழைக்கும் பெண்கள் இப்படிப் பாடி மகிழ்வை வெளிப்படுத்தி இருப்பார்கள்!ஆதிக்கச் சாதியினர் நாட்டார் இலக்கியங்களையும் திரித்து எழுதி வைத்துள்ளார்கள். மதுரைவீரன் கதை அனைவருக்கும் தெரியும். அருந்ததியர் வீட்டில் பிறந்த வீரப்பன் என்ற வீரையன், கொலையுண்டு மடிகிறான். பின் தெய்வமாக வழிபடப்படுகிறான். மாண்டுபோன முன்னோர்களே சிறு தெய்வங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதில், பல திரிபுகள் நுழைக்கப்பட்டதை ஆய்வாளர்கள் சுட்டு கிறார்கள்:
- காட்டில் விடப்பட்ட காசி மன்னனின் குழந்தையே மதுரைவீரன். அதை எடுத்து வளர்ப்பவள் அருந்ததியப் பெண்; 2. சிவனின் வியர்வையில் தோன்றிய வீரபத்திரரே மதுரை வீரன்; 3. முருகனின் தளபதி வீரபாகுத்தேவர் தான் பார்வதியின் சாபத்தால் மதுரைவீரனாகப் பிறக்கிறார்… இப்படி, கதைகளில் கூடக் கடை நிலை மாந்தர்கள் ஏற்றம் பெற்றுவிடக் கூடாது என “மேலோர்” நினைத் திருக்கிறார்கள். காத்த வராயன் கதையில், தலித் (பறையர்) இன காத்தவ ராயன் தன் உறவில் ஒருத்தியை மணக்கிறான். பட்டரின் மகள் ஆரியமாலா காத்தவராயனைக் காதலிக்கிறாள். பார்ப் பனர்கள் மன்னரிடம் புகார் கொடுக் கிறார்கள். காத்தவராயன் கழுவில் ஏற்றிக் கொல்லப் படுகிறான். அவனுடைய உறவினர்கள் காத்த வராயன், முதல் மனைவி, பட்டர் மகள் ஆரிய மாலை ஆகியோரின் சிலைகளை நிறுவி வழிபடு கிறார்கள். தாழ்த்தப்பட்டவனைத் தெய்வமாக வணங்க விடலாமா எனச் சிந்தித்த “மேலோர்” ஒரு புதிய புனைவைச் செய்தார்கள்: தேவலோக நந்தவனத்தில் காவலராக இருந்த காத்தவராயன், ஏழு கன்னியர் விட்ட சாபத்தால் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தான்;
தேவ கன்னியருள் ஒருத்தி ஆரியமாலை! காத்தவராயனைத் தேவ மைந்தனாக்கி மகிழ்ந் திருக்கிறார்கள். ஆனால் கடைநிலை மனிதனின் எதிர்ப்புக் குரலையும் ஆளுமையையும் முத்துப் பட்டன் கதையில் பார்க்கமுடிகிறது. ஆரிய நாட்டில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவன் முத்துப்பட்டன். காட்டில் வாலப்பகடை என்ற அருந்ததியர் மகள்களான பொம்மக்கா, திம்மக்கா ஆகியோரைச் சந்திக்கிறான். காதல் கொள்கிறான். “பெண்களை மணம் செய்து கொள்கிறேன்” என வாலப் பகடையிடம் முத்துப்பட்டன் கேட்கிறான். “உயர்குலத்தைச் சேர்ந்த உனக்கு என் பெண்களை மணம்செய்து கொடுக்க முடியாது,” என்று வாலப்பகடை கூறுகிறார். மணம் செய்தால் இவர்களைத்தான் மணப்பேன் என்று பிடிவாதமாக நிற்கும் முத்துப் பட்டனுக்குச் சில நெறிமுறைகளை விதிக்கிறார் வாலப்பகடை: “நாற்பது நாளைக்குள் முப்புரி நூலும் குடுமியும்மெய்யுடன் அறுத்தெறிந்து எங்களைப்போல் ஒப்புடன் நீர் செருப்புக்கட்டி வந்தாக்கால் எப்படியாகிலும் மக்களைக் கைப் பிடித்துத் தாரேன்.”
அந்தணர் குல அடையாளங்களைத் துறந்து, முப்புரிநூல் குடுமிகளை அறுத்துவிட்டு, அருந்ததியர் போல் செருப்புத் தைத்து வந்தால் மகள்களைத் திருமணம் செய்துகொடுக்கிறேன் என்ற வாலப்பகடையின் ஆணையேற்று, முத்துப்பட்டன் செருப்புத் தைக்கக் கற்றுக் கொண்டு செருப்பு களோடு வந்து மணம் முடிக்கிறான். பாவேந்தர் படைத்த ‘புரட்சிக்கவி’ காவியத்தின் நாயகன் உதாரன் தன்னைக் காதலிக்கும் மன்னன் மகளான அமுத வல்லியைப் பார்த்து,“காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன் சாதி எனும் சங்கிலி என் தாளைப் பிணித்ததடி” – எனக் காதலுக்குத் தடையாக நிற்கும் சாதியைக் குறிப்பிடுகிறான். காலம்காலமாகக் கனிந்து, வளர்ந்துகொண்டிருக்கும் காதலுக்கு இன்னும் சாதி தடையாக இருப்பதால், ஆணவக் கொலை களுக்கு ஆளாகும் நெஞ்சங்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது. எங்கும் சாதி; எதிலும் சாதி. சாதி என்பது சமுகத்தின் ஒரு வகுப்பு என்பார் அறிஞர் நெஸ்பீல்டு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை உலகுக்கு அறிவித்த நாம் பழமையில் உழன்று கொண்டிருக்கிறோம். சாதிமத வெறியைத் தூண்டிவிடும் அரசுகளையும், பதவிக்காக மனிதநேயத்தைப் பலிகொடுப்போரையும் மீறி இனியாவது புதியதோர் உலகம் செய்யப் புறப்பட வேண்டும்.
‘தீக்கதிர்’ வண்ணக் கதிரில் எழுதிய கட்டுரை
நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்