சென்னை தோழர்களின் இரண்டாம் கட்ட பரப்புரை: மக்கள் பேராதரவு

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித் தன்மை காப்போம்; சமூக நீதி சமத்துவப் பரப்புரைப் பயணம், சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.9.2017 முதல் 28.9.2017 வரை நடைபெற்றது. ஒரு நாளைக்கு நான்கு இடங்களில் என்று நான்கு நாள் இந்த பரப்புரை நடைபெற்றது.

23.9.2017 அன்று காலை 10 மணியளவில் குமணன்சாவடி நிறுத்தம் அருகில் துவக்கப்பட்ட பரப்புரைப் பயணத்தில் பயண துண்டறிக்கை வழங்கிய தோழர்களிடம் சிறீதர் என்பவர் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொடுத்தார். சென்னை மொபைல் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் தோழர்களுக்கு வழங்கினர். பிரகாசு என்பவர் ரூ.500 நன்கொடை வழங்கியதோடு, தங்கள் பகுதியில் பரப்புரை செய்தால் அதற்கான செலவை நானே ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் போரூர் நான்கு முனை சாலையில் பரப்புரை  நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பரப்புரையைப் பார்த்தப் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ரூ.500 நன் கொடை வழங்கினார். கரு. அண்ணாமலை பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். தோழர் களுக்கு மதிய உணவு கழகத் தோழர் துரைராஜ் ஏற்பாடு செய்தார்.

மாலை 3 மணியளவில் இராமாபுரம் அரசமரம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. இந்நிகழ்வில் இராமாபுரம் சுப்ரமணி பங்கேற்றார். கழக வழக்கறிஞர் துரை அருண் உரை நிகழ்த்தினார். உளவுத் துறை அதிகாரி கருத்திருமன் தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்தார். தொடர்ந்து கழக செயல்பாடு களுக்கு உதவி வந்த அவர், செப்டம்பர் 30ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். தபசி குமரன் தலைமையில் அவர்களுக்கு தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின் மாலை 6 மணியளவில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை  நடைபெற்றது. வழக்கறிஞர் துரை அருண் தலைமையில் தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள், தி.க. உள்ளிட்ட தோழர்கள் பயண குழுவிற்கு வரவேற்பு அளித்தனர்.  குணாளன் (தி.மு.க.), சுதன்லீ (தி.க.), சீராளன் (வி.சி.க.), வழக்கறிஞர் துரை அருண், கு. அன்பு தனசேகர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். குகா நன்றி கூறினார். துரை அருண் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்தார். இந்தியன் வங்கி ஊழியர் திருமா வளவன் ரூ.500 நன்கொடை வழங்கினார்.

24.9.2017 அன்று காலை 10 மணியளவில் மேடவாக்கம் குமரன் தியேட்டர் அருகில் பரப்புரை  நடைபெற்றது. போஸ் (தி.மு.க.) ரூ.500, சிவக்குமார் ரூ.500 நன்கொடை தந்தனர். விழுப்புரம் மாவட்ட தோழர்கள் ஊமை துரை, குமரேசன், தங்கராசு பங்கேற்றனர். தொடர்ந்து 12.30 மணியளவில் பள்ளிக்கரனை மார்க்கெட் அருகில் பரப்புரை  நடைபெற்றது. தம்பி மண்டேலா உரை யாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு மாலை 3 மணியளவில் மடிப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற பரப்புரையில் வழக்கறிஞர் துரை அருண் உரையாற்றினார். மாலை 5 மணி யளவில் வேளச்சேரி 100 அடி சாலையில் பரப்புரை நடைபெற்றது. தலைமை குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், இலட்சுமணன், செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.

25.9.2017 அன்று காலை 10 மணியளவில் ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடைபெற்றது. அரசு அடக்கு முறைக்கு எதிரான கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் பார்த்திபன் உரையாற்றினார். 12 மணியளவில் கொட்டிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பார்த்திபன் உரை நிகழ்த்தினார். பெசண்ட் நகர் கழகத் தோழர்கள் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தனர்.

மாலை 4 மணியளவில் திருவான்மியூர் தெப்பக் குளம் அருகில் நடைபெற்ற பரப்புரை யில் காஞ்சி மாவட்ட பொருப்பாளர் இரவி பாரதி உரையாற்றினார். மாலை 6 மணியளவில் திருவான்மியூர் லட்சுமிபுரம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இரவி பரதி உரை நிகழ்த்தினார்.

26.9.2017 அன்று காலை 10.30 மணியளவில் பெசண்ட் நகர் எல்லையப்பன் கோயில் அருகில் நடைபெற்ற பரப்புரையைப் பார்த்த ஒருவர் ரூ.2000 நன்கொடை வழங்கினார். காலை 11.30 மணியளவில் நடேசன் சாலை, இலாயிட்ஸ் சாலை சந்திப்பில் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு மாலை 3 மணியளவில் திருவல்லிக்கேணி நெடுஞ் சாலை, பார்த்தசாரதி கோயில் ஆர்ட்ஸ் அருகில் நடைபெற்றது. அன்று நடந்த மூன்று இடங்களிலும் சாதி ஒழிப்பு  விடுதலை முன்னணி ஒருங்கிணைப்பாளர் செயநேசன் உரையாற்றினார். மாலை 5 மணியளவில் சென்னை மயிலாப்பூர் தோழர்கள் ஏற்பாடு செய்த பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் பரப்புரைப் பயண நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பயணக் குழுவினர் வந்தடைந்தனர்.

பயணத்தின் பரப்புரை விரட்டுக் கலைக் குழுவைச் சார்ந்த குபேந்திரன், கார்மேகம், மதன் ஆகியோர் பறை இசையுடன் துவங்கியது. தோழர்கள் கார்த்திக், பெரியார் யுவராஜ், மதன் சாதி ஒழிப்பு மற்றும் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர். அருண் பரப்புரை வாகனத்தை ஓட்டினார். விவேக் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தார். விழுப்புரம் அய்யனார், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி பயணத்தை தலைமையேற்று நடத்தினர். இந்த நான்கு நாள் பயணத்தில் 5000 துண்டறிக்கை மக்களிடையே வழங்கப் பட்டன. பொது மக்கள் தானாகவே முன் வந்து துண்டறிக்கையை வாங்கிப் படித்தது தோழர் களுக்கு உற்சாகத்தைத் தந்தது. வழக்கம் போல் சிறு வியாபாரிகளும், சாலையோரத்தில் உள்ள கடை வியாபாரிகளிடம் நல்ல ஆதரவு இருந்தது.

இந்த நான்கு நாள் பயணத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் பங்கேற்றனர்: ராஜேஷ், ராஜா, தமிழ்தாசன், பிரகாஷ், ராஜேஷ், காவை கனி, காவை அஜித், சுரேந்தர், விப்பூன், எட்வின் பிரபாகரன், இலட்சுமணன், அருண், ராஜூ, தனஞ்செழியன், முகேஷ், பாரி சிவா,

மா. தேன்ராஜ்.

செய்தி தொகுப்பு : அய்யனார்

பெரியார் முழக்கம் 09112017 இதழ்

You may also like...