பெரியார் காந்தி நேரடி விவாதம் இந்து மதத்தை மாற்ற முயற்சித்தால் பார்ப்பனர்கள் உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று பெரியார் காந்தியிடம் எச்சரித்தார்.
சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்திலும் பெரியாருக்கு காந்தி மீதிருந்த மரியாதையும், கதர் பிரச்சாரத்திலிருந்த நம்பிக்கையும் குறைய வில்லை. அவரைப் பொறுத்தவரை மனதளவில் காங்கிரஸ்காரராகவே இருந்தார்.
ஆனால் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியான காந்தியின் உரை ஒன்று, பெரியாரை அதிர்ச்சியடையச் செய்து விட்டது. மைசூரில் காந்தி நிகழ்த்திய அந்த உரையானது பின்வருமாறு இருந்தது:
“ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.”
“பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன்
உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.”
“எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனுடைய முக்கிய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும்போது அவன் மற்றெல் லோரிலும் மேம்பட்டவனாகிறான்.”
“இம்மாதிரியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களைக் கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.”
“இப்படியிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது? வருணாசிரம தர்ம மானது, சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி, ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல.”
காந்தியின் இந்த அறிக்கையைப் படித்த பெரியாருக்கு அவர்மீது பெரும் கோபம் எழுந்தது. தாழ்த்தப்பட்ட மக்களையும் முன்னேற்ற வேண்டும் என்பதை காங்கிரசின் லட்சியங்களில் ஒன்றாக ஆக்கிய மகாத்மாவா இப்படி ஒரு அறிக்கையை விடுவது என்று சினம்கொண்ட பெரியார், இறுதியாக காந்தியை நேரில் கண்டு இந்த அறிக்கையை குறித்து விவாதிப்பது என்று முடிவு செய்தார். தனது நண்பர் எஸ். ராமனாதனை உடன் அழைத்துக் கொண்டு பெங்களூருக்குச் சென்று காந்தியை சந்தித்து உரையாடினார். இருவருக்குமிடையில் ஒருமித்த கருத்து எதுவும் உருவாகவில்லை.
காந்தியுடன் பெரியார் நடத்திய உரையாடல் குறித்து பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் (28.8.1927) எழுதிய ஒரு தலையங்கத்தில் சில செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார். காந்தியுடன் தாம் நிகழ்த்திய சந்திப்பை பெரியார் வெளிப்படுத்தாமல் இருந்தது பற்றி அத்தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“நமது கருத்தையும், மகாத்மா கருத்துக்கும் நமது கருத்துக்கும் மாறுபட்ட கருத்துகளைப் பற்றியும் சென்ற மாதம் மகாத்மா அவர்களிடம் நேரில் கலந்து பேசி நம்மைப் பொருத்த வரையிலும் ஒரு முடிவு கட்டிக் கொண்டே வந்து விட்டோம். “மகாத்மாவிடம் நான் கலந்து பேசினேன்” என்று சொல்லிக் கொள்வதும் எழுதிக் கொள்வதும் இக்காலத்தில் பெரிதும் தற்பெருமைக்கே உபயோகித்துக் கொள்ளக் கூடியதாய் விட்டபடியால் அந்த தற்பெருமை நமக்கு வேண்டாம் என்று கருதியே நாம் அது சமயம் அதை வெளிப்படுத்திக் கொள்ள வில்லை” என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்த உரையாடலை காந்தி வெளியிட வேண்டாம் என்று பெரியாரிடம் கேட்டுக் கொண்ட தாலும் பெரியார் அதை வெளியிடவில்லை என்ற கருத்தையும் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.”
“தவிரவும் அது சமயம் நமக்கும் மகாத்மாவுக்கும் நடந்த சம்பாஷணைகளின் விவரத்தை மகாத்மாவின் சம்மதம் பெற்றே வெளிப்படுத்த வேண்டிய ஒரு நிபந்தனைக்கும் நாம் சம்மதம் கொடுத்து வந்ததால் அதையும் வெளியிடாத நிலையில் இருக்கிறோம்” – என்று குறிப்பிடுகிறார். இதற்குப் பிறகு 1927ஆம் ஆண்டு நடந்த இந்த உரையாடல் காந்தியின் மறைவுக்குப் பிறகுதான் 18.2.1948 ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிடப்
பட்டது.”
“முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியே தான் மகாத்மாவிடம், நாமும், நமது நண்பரான எஸ். ராமநாதனும் சம்பாஷித் தோம். அதாவது என்னுடைய அபிப்பிராய மாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்ன தெல்லாம், இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்க வேண்டு மென்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லையென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கின்றோம் என்பதாகச் சொன்னோம்.”
அதாவது, ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது. இரண்டாவது ஜாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது. மூன்றாவது, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.
இம் மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக் கூடியதாயில்லை என்று சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொணடு வந்து விட்டோம்” என்று பெரியார் பதிவு செய்திருக்கிறார்.
பெரியாருக்கும் காந்திஜிக்குமிடையே நடைபெற்ற உரையாடல் சுவையானதாகும். அதன் ஒரு பகுதியை இங்கே காணலாம்.
பெரியார் : இந்து மதம் மறைய வேண்டும்.
காந்தி : ஏன்?
பெரியார் : இந்து மதம் என்று எதுவும் கிடையாது.
காந்தி : இருக்கிறது.
பெரியார். : அது பிராமணர்கள் உருவாக்கிய பிரமை.
காந்தி : அனைத்து மதங்களும் அதைப் போன்றதுதான்.
பெரியார் : இல்லை. இதர மதங்களுக்கு வரலாறு, லட்சியங்கள், கோட் பாடுகள் உள்ளன. மக்கள் அவைகளை ஏற்றுக் கொண்டிருக் கிறார்கள்.
காந்தி : இந்து மதத்தில் அத்தகையது எதுவும் இல்லையா?
பெரியார் : சொல்வதற்கு என்ன இருக்கிறது? பிராமணன், சூத்திரன், வைசியன் போன்ற சாதீய உட்கூறுகள் தவிர அதில் வேறெந்த விதியோ, சான்றோ கிடையாது.
காந்தி : அது குறைந்தபட்சம் இந்தக் கோட்பாட்டைக் கொண்டுள்ளது.
பெரியார் : இருந்தும் என்ன பயன்? அதன்படி பிராமணர்கள் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள். நீங்களும், நானும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள்.
காந்தி : நீங்கள் சொல்வது தவறு. வர்ணாசிரம தர்மத்தில் தாழ்ந்த சாதி என்றும், உயர்ந்த சாதி என்றும் எவ்வித தாரதம்மியமும் கிடையாது.
பெரியார் : நீங்கள் இதைச் சொல்லலாம். ஆனால் நடைமுறையில் அது வேறுவிதமாக இருக்க முடியாது.
காந்தி : இல்லை – சமத்துவம் இருக்கிறது.
பெரியார் : இந்துமதம் இருக்கும் வரை இதை யாரும் பெற முடியாது.
காந்தி : இந்துமதத்தின் மூலமாக எவரும் இதைப் பெற முடியும்.
பெரியார்: அப்படியானால் பிராமணர்-சூத்திரர் வேறுபாட்டை நிரூபிக்கும் மதச் சான்றுகள் குறித்து என்ன சொல்வது?
காந்தி : இந்து மதம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு சான்றுகள் இல்லை என்றுதானே நீங்கள் வாதாடுகிறீர்கள்?
பெரியார் : மதம் என்று எதுவும் கிடையாது. எனவே அதை நிரூபிக்கச் சான்று களும் கிடையாது என்றுதான் நான் சொல்லி வருகிறேன். மதம் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டால், அதை நிரூபிக்கும் சாட்சியங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காந்தி : நாம் மதத்தை ஏற்றுக் கொண்டு சான்றுகளை உருவாகிக் கொள்ள லாம்.
பெரியார் : அது சாத்தியமற்றது. மதம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் நாம் எதையும் மாற்ற முடியாது அல்லது மாற்றி யமைக்கவும் முடியாது.
காந்தி : இதர மதங்களைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இந்து மதத்தைப் பொறுத்தவரை சரியல்ல. அதை ஏற்றுக் கொண்டபின் அதன் பெயரால் நீங்கள் எதையும் செய்ய முடியும். அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
பெரியார் : நீங்கள் இதை எப்படிச் சொல்ல முடியும்? யார் அதை ஏற்றுக் கொள்வார்கள்? அதில் நீங்கள் முன்னோடிப் பங்கை ஆற்ற முடியுமா?
காந்தி : நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான். இந்து மதம் என்று எதுவுமில்லை யென்று நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கென்று திட்டவட்டமான விதி இல்லையென்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் தான் இந்துக்கள் என்று நம்மை நாம் கூறிக்கொள்வதின் மூலம் நாம் விரும்பும் முறையில் அதற்காக பொதுவான லட்சியங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்து மதம் மட்டுமே மக்களை நல்ல வழிகளுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்; ஏனென்றால் இதர மதங்களுக் கென்று கோட்பாடு, வரலாறு மற்றும் இதர சான்றுகள் உள்ளன; அதை யாராவது மாற்றினால் ஒழிக்கப்பட்டே விடுவார்கள்; கிறிஸ்துவர்கள் ஏசுநாதர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும். அதே போன்று முஸ்லீம்கள், முகம்மது நபியும், குரானும் சொல்வது போல வாழ வேண்டும். அதை மாற்று வதற்கு ஏதேனும் முயற்சி செய்யப் படுமேயானால் அது மதத்தின் கட்டளைகளுக்கு மாறானதாகும். அவ்வாறு இல்லை என்று கூறுபவர்கள் மதத்துக்கு வெளியே வந்து பிரகடனம் செய்யலாம்; ஆனால் உள்ளிருந்து கொண்டே, அதை மறுக்க முடியாது. இதர மதங்களின் உண்மையான நிலமை இதுதான். ஆனால், அவர்களைப் போல் அல்லாது இந்து கோட் பாட்டில் எவர் ஒருவரும் முன்னால் வந்து தயக்கமின்றி எதையும் போதிக்க முடியும். இந்து மதத்தி லிருந்து பல மகத்தான மனிதர்கள் தோன்றி, பல விஷயங்களைக் கூறியுள்ளனர். எனவே இந்து மதத்தில் இருக்கும்பொழுதே, நாம் அதை மாற்ற முடியும். மனித குலத்தின் நன்மைக்காக பல விஷயங்களைச் செய்ய முடியும்.
பெரியார் : மன்னிக்கவும். அதைச் செய்ய முடியாது.
காந்தி : ஏன்?
பெரியார் : இந்து மதத்திலுள்ள சுயநலக் கும்பல் அவ்வாறு செய்ய உங்களை அனுமதிக்காது.
காந்தி : நீங்கள் ஏன் இவ்வாறு கருத வேண்டும்? இந்து கோட்பாட்டில் தீண்டாமை இல்லையென்ற அம்சத்தை இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
பெரியார் : கொள்கையை ஏற்றுக் கொள் வதிலும், அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் வித்யாசம் உண்டு. எனவே அதை கடை பிடிப்பது சிரமமானதாகும்.
காந்தி : நான் அதைச் செய்கிறேன். கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட் டுள்ளதை நீங்கள் கண்டீர்களா?
பெரியார் : நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. அதெல்லாம் உங்கள் செல்வாக்கினாலும், அவர்களுக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டிய அவசியத் தினாலும் ஏற்பட்டது என்பதுடன் சுயநலத்தின் காரணமாக நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல் நடிக்கிறார்கள். அதற்குப் பதிலாக நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள்.
காந்தி : (சிரித்துக் கொண்டே) யார் அவர்கள்?
பெரியார் : பிராமணர்கள் அனைவரும்.
காந்தி : உண்மையிலேயா?
பெரியார் : ஆம்.
காந்தி : உண்மையாகவா?
பெரியார் : ஆம். அந்த விஷயத்தில் உங்க ளோடு கூட வரும் பிராமணர்கள் அனைவரும்.
காந்தி : அப்படியானால் எந்த பிராமணரையும் நீங்கள் நம்புவதில்லையா?
பெரியார் : என்னை ஈர்ப்பதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்.
காந்தி : ராஜகோபாலாச்சாரியைக் கூட நீங்கள் நம்புவதில்லையா?
பெரியார் : அவர் நல்லவர், நேர்மையானவர், தியாகம் செய்யும் மனிதர். ஆனால் இந்த நற்குணங்கள் அனைத்தும் அவர் சமூகத்திற்கு சேவை செய்ய அவருக்கு உதவுகிறது. அவர் சுயநலம் அற்றவர். ஆனால் நான் என் சமூகத்தின் நலனை அவருடைய நலன்களுக்கு அடகு வைக்க முடியாது.
காந்தி : இதைக் கேட்க வியப்பாக இருக்கிறது. பிரச்சனை அதுதான் என்றால், உலகில் ஒரு நேர்மையான பிராமணனை தேடிக் கண்டு பிடிப்பது என்பது மிகுந்த சிரம மானது என்பதுதான் உங்கள் கருத்தா?
பெரியார் : இருக்கலாம், அல்லது இல்லாம லிருக்கலாம். நான் யாரையும் பார்க்கவில்லை.
காந்தி : அவ்வாறு சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனை பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர் என்றே இன்றும் கருதுகிறேன். அவர்தான் கிருஷ்ண கோகலே.
பெரியார் : ஓ! உங்களைப் போன்ற மகாத்மா வுக்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டு பிடிப்பது சாத்தியமாகியிருக்க லாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரணமான பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டு பிடிப்பது எவ்வாறு சாத்திய மாகும்?
காந்தி : (சிரித்துக் கொண்டே) உலக மானது எப்பொழுதும் அறிவு ஜீவிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிராமணர்கள் படித்த மக்கள். அவர்கள் என்றென்றும் இதரர்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்து வார்கள். எனவே, அவர்களை விமர்சிப்பதால் எவ்வித பயனுள்ள காரியமும் ஏற்படப் போவதில்லை. இதரர்களும் அந்த மட்டத்தை அடைய வேண்டும்.
பெரியார் : இதர மதங்களில் இத்தகைய மனிதர்களை நாம் காண முடிவ தில்லை. இங்கே இந்த மதத்தில் மட்டுமே பிராமணர்கள் அறிவு ஜீவிப் பகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். மீதமுள்ள 90 சதவீதத்தினர் கல்வியறிவு அற்றவர் களாகவோ அல்லது அப்பாவி களாகவோ இருக்கிறார்கள். அனவே ஒரு சமூகத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே அறிவு ஜீவிகளாகவும், படித்த குழுவாகவும் இருப்பது அந்த சமூகத்திலுள்ள இதர பகுதி மக்களின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது இல்லையா? எனவேதான், இந்த நிலமைக்கு பிரதான காரணமாக உள்ள மதம் என்பது தொலைந்து போக வேண்டும் என நான் தொடர்ச்சியாகக் கூறி வருகிறேன்.
காந்தி : உங்கள் நிலைப்பாடு என்ன? இந்து மதத்தையும் அதைப்போன்ற சமூகத்திலிருந்து பிராமணர்களை யும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக நீங்கள் நிற்கிறீர்கள் என்று நான் கருதலாமா?
பெரியார் : போலித்தனமான இந்து மதம் ஒழிந்தால், பிராமணர் எவரும் இருக்கமாட்டார். நாம் சூத்திரர் வருணத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துமே பிராமணர் பிடியில்தான் உள்ளன.
காந்தி : அது சரியல்ல. அவர்கள் இப்போது நான் கூறுவதை கேட்க மாட்டார்களா? இந்தக் கோட் பாட்டின் கீழ் ஒன்று பட்டுள்ள நாம் அதனுடைய எதிர்மறையான அம்சங்களை இப்பொழுதும் அகற்ற முடியும்.
பெரியார் : இதை நீங்கள் சாதிக்க முடியாது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. அப்படி நீங்கள் சாதிக்க முடிந்தாலும், எதிர் காலத்தில் உங்களைப் போன்ற சில மகத்தான மனிதர்கள் தோன்றி நீங்கள் செய்த வேலையை மாற்றிவிடுவார்கள்.
காந்தி : அது எவ்வாறு சாத்தியம்?
பெரியார் : நீங்கள் முன்பு கூறியது போல, இந்து மதத்தின் பெயரால் எவர் ஒருவரும் தன்னுடைய சிந்தனை வழிக்கேற்ப மக்களைக் கொண்டுவர முடியும். அதே வழியில் நாளை தோன்றக் கூடிய ஒரு மகத்தான மனிதன் இந்துக் கோட்பாட்டின் பெயரால் எதையும் செய்ய முடியும்.
காந்தி : எதிர்காலத்தில் எவரொருவரும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சி நடைமுறைச் சாத்திய மற்றது இல்லையா?
பெரியார் : இதைக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவேண்டும். இந்து மதத்தின் உதவியோடு ஸ்தூலமாக எதையும் செய்வது உங்களுக்குச் சாத்திய மற்றது. மாற்றத்தைச் செய்ய பிராமணர்கள் உங்களை விட மாட்டார்கள். அவர்களுடைய நலன்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்வதாக அவர்களுக்குத் தெரிந்தால், உங்களை எதிர்த்துப் போராடத் துவங்கி விடுவார்கள். அத்தகையதொரு மாற்றத்தைச் செய்ய இதுவரை எந்த மகத்தான மனிதரும் முயற்சிக்கவில்லை. யாராவது அதற்காக முயற்சித்தால் பிராமணர்கள் அவரைச் சும்மா விட மாட்டார்கள்.
காந்தி : நீங்கள் பிராமணர்களுக்கெதிராக வெறுப்பைக் கொண்டுள்ளீர்கள். அதுதான் உங்கள் சிந்தனையில் பிரதானமாக நிற்கிறது. நம்முடைய விவாதம் மூலம் நாம் இதுவரை எவ்வித உடன்பாட்டுக்கும் வர வில்லை. எனினும் எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நாம் சந்தித்துப் பேசுவோம். நமது நிலை குறித்து தீர்மானிப்போம்.
நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்