நடிகவேளின் நாடகப் புரட்சி சரோன்
ஒரு ஒத்த மாட்டு கூண்டு வண்டி சலங்கை ஒலி கலகலக்க தெருக்களெங்கும் ஊர்ந்தது. பம்பை முடி வளர்த்த மீசை மழித்த நாடகக் கலைஞர்கள் வண்ண துண்டறிக்கைகளை மக்களின் கைகளிலும் வீடுகளிலும் கொடுத்து அன்று மாலையில் நடைபெற இருந்த எம்.ஆர்.ராதாவின் நாடகத்திற்கு அழைத்தபடி சுற்றி திரிந்துவிட்டு நாடகக் கொட்டகைக்கு திரும்பினார்கள். இது நடந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம்…
“பொதுமக்களுக்கு காவல் துறையின் ஒரு முக்கிய அறிவிப்பு.. இன்று மாலையில் நடைபெறவிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகம் நடைப்பெறாது. ஆகவே யாரும் நாடகம் பார்க்க செல்ல வேண்டாம் என்று காவல்துறையின் சார்பில் தெரிவிக்கிறோம்.
காவல்துறை வாகனங்கள் கும்பகோணம் ஊரின் தெருக்களிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் புழுதியைக் கிளப்பி குறுக்கும் நெடுக்குமாக ஓடி கிராமபோன் ஒலிப் பெருக்கியில் அறிவித்தபடி இருந்தது. அதே நேரத்தில் மூப்பனார் தோட்டம் எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நாடகக் கொட்டகையில் வழக்கத்திற்கு மாறாக முற்பகல் முதலே பாடல்கள் ஒலித்தன. இரண்டு மூன்று பாடல்களுக்கு ஒருமுறை இடைஇடையே ஒரு குரல் கரகரத்த குரல் காவல்துறையின் அறிவிப்பை இடைமறித்தபடியே அவ்வப்போது,
“அன்பார்ந்த நாடக கலாரசிக பெருமக்களே நான்தான் எம்.ஆர்.ராதா பேசுகிறேன். ஏற்கெனவே அறிவித்தபடி சரியான நேரத்தில் இன்று நாடகம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் தவறாமல் நாடகத்தை கண்டு களிக்க வரும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன்.”
காவல்துறையின் அறிவிப்பை மீறி மக்கள் கூட்டம் கூட்டமாக நாடக கொட்டகையை நோக்கி வந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் ஊருக்குள் நுழையும் மூன்று வழிகளையும் மறித்து தீயணைப்பு வண்டிகளி லிருந்தும், கும்பகோணம் தெப்பகுளத்தில் குழாய் போட்டும் மக்கள்மீது தண்ணீரை பீச்சி அடித்து ஊருக்குள் வரவிடாமல் தடுத்து விரட்டினார்கள். பல திசைகளாக தெறித்து ஓடிய மக்கள் சந்து பொந்துகளில் நுழைந்து நாடக கொட்டகைக்கு வந்து சேர்ந்தார்கள். அன்று காவல்துறையின் இலவச விளம்பரத்தால் வழக்கத்தை காட்டிலும் கட்டுக்கு அடங்காத கூட்டத்தால் நிரம்பி வழிந்தது நாடகக் கொட்டகை.
ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியாக ஆறு மணிக்கு நாடகத்தை தொடங்கி விடுவார் நடிகவேள். யாருக்காகவும் எதற்காகவும் நேரத்தைத் தள்ளிப் போட மாட்டார். எந்த காரணத்திற்காகவும் ஆறு மணிக்கு முன்பாக நாடகத்தைத் தொடங்கவும் மாட்டார்.
5.45க்கு முதல் மணி ஒலித்தது… ஹவுஸ்புல் அறிவிப்பையும் மீறி டிக்கெட் வாங்கிக் கொண்டு கிடைத்த இடங்களில் நின்றுகொண்டனர் மக்கள்.
5.55க்கு இரண்டாம் மணி ஒலித்ததும் மக்கள் அமைதி அடைந்தார்கள்.
6.00 மணிக்கு மூன்றாம் மணி ஒலிக்கையில் அரங்கம் இருண்டதும், மேடையில் வெளிச்சத்தில் தெரிந்த முதல் திரையில் உலக உருண்டைக்கு கீழே “உலக பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள்” எனும் வாக்கியம் ஒளிர்ந்தது.
இரண்டாம் திரையில் தந்தை பெரியாரின் திராவிடர் கழகக் கொடி முழு நீள அகலத்தோடு காட்சியானது.
இதற்கு முன்பு வரைக்கும் வினாயகர், சரஸ்வதி, முப்பெரும்தேவியர்… என பார்த்துப் பழக்கப்பட்டிருந்த மக்களுக்கு இது புதுமையும் அதிர்ச்சியுமாக இருந்தது.
கடவுள் வாழ்த்து எனும் பெயரில் வினாயகர் துதி இசைக்கப்படும். புராண நாடக குழுக்கள் மட்டுமல்லாது இன்னபிற சமூக, தேசபக்தி மற்றும் குடும்ப நாடகங்கள் நடத்தும் குழுக்களிலும் இதுவே நடைமுறையாக இருந்தது. இந்த வழக்கங்களை தம் நாடகங்களின் வழியே கட்டுடைத்து புதிய அறிவார்ந்த கட்டமைப்பை உருவாக்கினார் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
அவரது நாடகத்தில் தொடக்கத்தில்,
“அமுதெனும் இனிய தமிழ்மொழி வாழ்க
ஆதி திராவிடமானது வாழ்க
இயலிசை நாடக இன்மொழி வாழ்க
ஈன்ற தாயினும் இன்மொழி வாழ்க….”
தமிழ் வாழ்த்துப் பாடலினைத் தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசனின்…
“வளமார் திராவிடர் வாழ்ந்தக் கதையினை அறிந்திருப்பாய் தமிழா
வம்புகள் நிறைந்த ஆரியரால் அவர் அழிந்த நிலைகண்டு
அறுபது வயது தாண்டிய பெரியார் அடிக்கடி சிறைச் சென்றார்”
எனும் பாடல் வழியே தந்தைபெரியாரின் சமூகப் பணிகள் நிழற்காட்சிகளாக வெள்ளைப் படுதாவில் காட்டப்பட்டது.
அன்றைய பெரும்பாலான நாடகங்கள் பக்தி எனும் பெயரில் மக்கள் சிந்தனைகளை மழுங்கடித்து மூடநம்பிக்கைகளைப் பரப்பி வந்தன. இந்நிலைக்கு எதிராக மேற்கண்ட முறைகளை எம்.ஆர்.ராதா கையாளத் தொடங்கிய தொடக்கக் காலங்களில் மக்கள் யாரும் அவரின் நாடகம் பார்க்க வர மாட்டார்கள். ஆனால் எம்.ஆர். ராதா ஒப்பனை செய்துக் கொண்டு சரியான நேரத்திற்கு மணி அடித்து வெறும் அரங்கத்தில் நாடகத்தைத் தொடங்கி முழு நாடகத்தையும் நடித்து முடிப்பார்.
கேட்டால் “இந்த காலி நாற்காலி களுக்காவது சுயமரியாதை வரட்டும், அதற்காகத் தான் நாடகம் போடுகிறேன்” என்று சொல்லுவார். இப்படி ஒருமுறை இருமுறை அல்ல பல ஊர்களில் பலமுறை வெறும் அரங்கத்தில் முழு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். ஒரு வகையில் ராதாவின் கொள்கை வெளிப்பாடும் நடிப்பும் கூர்தீட்டப்பட்டது இந்த சோதனையான காலக்கட்டங்களில்தான் எனலாம்
அய்யப்பன், கிருஷ்ணலீலா, கந்தன் கருணை, கம்பராமாயணம், பாஞ்சாலி சபதம். பக்த பிரகலாதன் போன்ற பக்தி நாடகங்களுக்கு மக்கள் மந்தைமந்தையாகப் போனார்கள். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் குழுவினர் நடத்திய ஐயப்பன் நாடகம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் நடத்தப்பட்டது. அதன் தாக்கத்தினால் ஐயப்பனுக்காக மாலை போட்டு விரதமிருந்து சபரிமலைக்கு போகும் வழக்கம் உண்டாகி இன்றுவரை தொடர்கிறது.
இந்நாடகத்தில் ஐயப்பன் வேடத்தை ஏற்று நடித்த எம்.என். நம்பியார் அவரின் இறுதி நாள் வரைக்கும் தென்னிந்திய சபரிமலை பயணிகளின் வழிகாட்டியாக (குருசாமி) பார்க்கப்பட்ட மரபு குறிப்பிடதக்கது. கலை வடிவ வெளிப்பாட்டினால் அதுவரைக்கும் ஏற்பட்ட தாக்கங்கள் வெறும் பக்தியும், புராணிகமும் கண்மூடி தேசியமுமே. இவை யாவுமே அடிப்படையில் சிலர் பிழைக்க பலரை ஏய்க்கும் போக்குகளுக்கு உரமூட்டி வந்தன.
பெரியாரும் அவரின் கலை ஆயுதமான எம்.ஆர்.ராதாவும் இல்லாமல் போயிருந்தால் சபரிமலைக்குப் போகும் கூட்டத்தை விட தமிழகத்தில் இராமாயண பிரச்சாரத்தின் வழியே ‘கர சேவகர்களின்’ எண்ணிக்கை பெருகி வட இந்தியாவைப்போல் மத பயங்கரவாதத்தின் கலவர பூமியாக தமிழகமும் இருந்திருக்கும். தமிழர்கள் சுய அடையாளத்தை யும் சுய சிந்தனையும் சுயமரியாதையும் அற்ற மக்களாக மாற்றப்பட்டிருப்பார்கள்.
இன்றளவும் கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற இடங்களைச் சுற்றியும், அயோத்தியில் கதை கட்டப்படும் இடங்களைப்போலவே ராமன் நடமாடிய, போர் புரிந்த, சாமி கும்பிட்ட இடங்களாக பல ஊர்களை செவிவழிக் கதைகளைப் பரப்பி வைத்திருக்கிறார்கள். நாகர்கோவிலுக்கு அருகிலிருக்கும் பூதப்பாண்டி (தோழர் ஜீவானந்தம் பிறந்த ஊர்) எனும் சிற்றூரின் எல்லையாக உள்ள ஒரு மலை குன்றிற்கு “தாடகை மலை” என்று பெயரிட்டு, அதனை சுற்றியுள்ள ஊர்களையும் இடங்களையும் ராமனோடும் ராமாயணத் தோடும் தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவு பயணங்கள் இல்லாதிருந்தால் ராமாயண கதை வரலாறாக்கப்பட்டிருக்கும். கம்பனின் கற்பனைகள் உயிர்பிக்கப்பட்டு படுகொலை களமாக மாறியிருக்கும் தமிழகம்.
கும்பகோணத்தில் வழக்கம்போல அன்று நாடகம் தொடங்கியது. ஒப்பனை அறையில் நடிகவேள் வேடம் கட்டிக்கொண்டு இருந்தார். எல்லோரும் நெற்றியில் ஒரு புள்ளியும், அதற்கு மேல் ஒரு கோடுமிட்டு கண்மூடி எதையோ உச்சரித்துதான் ஒப்பனை செய்வார்கள். ஆனால் நடிகவேள் மீசையிலிருந்து ஒப்பனையைத் தொடங்குவார்.
தொடக்கப் பாடல் காட்சிகளெல்லாம் முடிந்து நாடகம் தொடங்கியது. உள்ளிருந்து ராதா தன் நாடத்திற்கான அடிப்படை ஆதாரங்கள் குறித்தெல்லாம் அறிவித்துவிட்டு மேடையில் தோன்றினார் ராமனாக. சடைமுடியோடு ஒரு தோளில் அம்பரா தூளியும், மறு தோளில் வில்லும் தொங்க ஒரு கையில் கள் மொந்தையும், மறு கையில் மாட்டுதாடை எலும்புமாக. மொந்தையில் ஒருமிடறு குடித்துவிட்டு எலும்பைக் கடித்தவர்,
“தம்பி லட்சுமணா இந்த கசாப்புக் கடைக்காரன் நமக்கு முத்தன மாட்டுகறிய குடுத்துட்டான்போல இருக்குதுடா, கெட்டியா இருக்குதுடா, ருசியாவும் இல்ல”
இப்படி தொடங்கியது நாடகம். அரங்கம் எங்கும் ஒரேஆரவாரம். இப்படிமூன்று, நான்கு காட்சிகள் முடிந்து மிக பரபரப்பாக போய்க் கொண்டு இருக்கையில் பெருங் கூட்டமாய் உள்ளே நுழைந்தது காக்கி கூட்டம்.
மிஸ்டர் ராதா ஸ்டாப்… என்றதும் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து ஆங்கிலத்தில் நீளமாக பேசியபடி மேடையில் ஏறினார் அதிகாரி. ராதாவிற்கு ஒன்றும் புரியவில்லை…
“தமிழ்ல பேசுங்க தமிழ்ல, அப்போதான் நீங்க பேசுறது ஜனங்களுக்கும் புரியும்.”
“ம்… உங்கள கைது பண்ண போறோம், நீங்க சட்ட விரோதமா நாடகம் போட்ட துக்காக”
ராதா இல்ல ராமன் இரு கைகளையும் நீட்டினான். கை விலங்கோடு போலீஸ் நெருங்கியதும்,
“எங்கள் ராதாவை கைது செய்ய விடமாட்டோம். போலீஸ் ஒழிக, போலீஸ் வெளியே போ..” – –மக்கள்.
உடனே ராதா மைக் அருகே வந்தார். “ரசிக பெருமக்களே அமைதியாயிருங்கள். போலீஸ் தன் கடமையை செய்யட்டும்.”
“விட மாட்டோம்; உங்களை கைது செய்யவிட மாட்டோம்”
“அமைதி அமைதி, நான் யார்?”
“ராதா, எம்.ஆர். ராதா.”
“ இல்லை இப்போ நான் யார்?”
“ராமன்… ராமன்…”
“இப்போ அவர்கள் யாரை கைது செய்கிறார்கள்?”
“ராமனை.”
“ராமனை கைது செய்யவேண்டும் என்பது தானே நமது நோக்கமும்.”
“நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? அவர்கள் கடமையை செய்ய தடை செய்ய வேண்டாம். நான் போய் திரும்பி வந்து இதே நாடகத்தை உங்களுக்காக நடத்துவேன்.” அரங்கமே உணர்ச்சி அலைகளால் அதிர்ந்தது.
வெள்ளைக்காரன் காலத்தில் அவர்களுக்கு விரோதமாகப் பாடினார்கள், பேசினார்கள் என்பதற்காக கைது செய்யப்பட்டார்கள். அது அடிமை இந்தியா என்று சொல்லப்பட்டது. ஆனால் விடுதலை இந்தியா என்று சொல்லப்பட்ட காலத்தில் உண்மையை சொன்னால் கைது, பொய் புரட்டுகளைச் சொன்னால் பாராட்டு என்று ஆனது ராதாவிற்கு மட்டும் நாடக மேடையில்.
அதற்கு பிறகு வழக்கு நடந்து வென்று மீண்டும் ராமாயண நாடகத்தை பட்டிதொட்டி எங்கும் நடத்தினார் நடிகவேள். நாடக விளம்பரங்களில்…
“என் நாடகம் யாரையாகிலும் புண்படுத் தும் என்று நினைப்பவர்கள் நாடகம் பார்க்க வர வேண்டாம். அப்படி வருபவர்களின் பணமும் எனக்கு வேண்டாம். மீறி வந்து உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல.
நடிகவேள் எம்.ஆர்.ராதா” இப்படியொரு விளம்பரம் நாடக வரலாற்றில் யாரும் வைத்தது இல்லை. ராதாவிற்கு முன்பும் பின்பும்.
அரங்க தோரணங்களோடு நாடகங்களை நடத்தியதை மாற்றி கருத்துக் களமாக மேடையை மாற்றியவர் நடிகவேள். வழி வழியாக ஒரே மாதிரியான கதைகளில் ஒரே மாதிரியான வசனங்களைப் பேசி வெறும் பேச்சு தோரணை களுக்காகவும், அரங்க பிரமாண்டங்களுக்காக வும் சித்து வேலை காட்கிகளுக்காகவும் நாடகங்கள் நடத்தி வந்த காலத்தில் ராதா கலகம் செய்தார்.
ரத்தக் கண்ணீர் ஒரே நாடகம்தான், ஆனால் ஒரே வசனங்கள் அல்ல. இன்று செய்தி விவாதம் எனும் பெயரில் நடத்தப்படும் ஊடக வன்முறைகள் போன்றது அல்ல ராதாவின் நாடக விவாதங்கள். அது நடுநிலை எனும் பிழைப்பு வாத பிம்பங்ககளை உடைத்து ஒரு பக்கமாக ஒரு கருத்தில் நின்று கட்டுடைப்புகளை செய்தது.
எப்போதோ யார் யாரோ கேட்டிருக்க வேண்டிய கேள்விகளை ராதாவின் நாடகங்கள் முன்வைத்தன.
“என் நாடகங்களில் ஒன்ஸ்மோர் கிடையாது. செத்து போனவன் மீண்டும் எழுந்து வசனம் பேசிவிட்டு மீண்டும் சாகமுடியாது.” இதை துணிந்து சொன்னவ ர்நடிகவேள்.
பொதுவாக நாடகசபாக்கள் நகரங்களில் மட்டுமே நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த மரபை உடைத்து பட்டிதொட்டி எங்கும் நாடகங்களை நடத்தியவர் எம்.ஆர். ராதா.
வால்மீகி ராமாயணத்தை மையமாகக் கொண்டு ராதா நடத்திய ராமாயணத்தை கீமாயணம் என்று ஒரு சிறு கூட்டம் பிதற்றி திரிந்தது. அதை இங்குள்ள ஒரு தமிழ் பத்திரிகை செய்தியாக வெளியிட கீமாயணம் என்றே மக்கள் சொல்ல தொடங்கியபோது ராதா, ‘ராமாயணமா? கீமாயணமா?’ என்று ஆதாரத்தோடு ஒரு சிறு வெளியீட்டை கொண்டுவந்தார். அது தெளிவுப்படுத்துவது இதுதான். “தந்தை பெரியார் வழி ஆய்வுகளும் நூல்களும், எதிர்ப்புகளும் நாடகங்களுமாக வெளிப்பட்டவையே ராமாயணம், கம்பன் எழுதியது தான் அதன் திரிபான கீமாயணம்.”
இயற்கையாக உருவான கலைக்குள் பக்தியின் பெயரால் மூடநம்பிக்கைகளை புகுத்தி மக்களை சிந்திக்க விடாமல் சுரண்டும் வேலையை அக்கால நாடகங்கள் நடத்தின.
பாடல் ஒழிப்பு
பஜனைகள் ஒழிப்பு
கடவுள் வணக்க ஒழிப்பு
அலங்காரம் என்ற மூடநம்பிக்கை ஒழிப்பு
ஒன்ஸ்மோர் ஒழிப்பு
பாடல் இசைமரபு ஒழிப்பு…
என்ற கலகங்களை விதைத்தார், நடிகவேள்!
சமகால சமூக அரசியல் பேசும் நாடகங்களை நடத்தினார்.
கலையை நிர்வகிப்பதே ஓர் அதிகாரம் தான்.
மூட நம்பிக்கையை பக்தி என்று பரப்பி பிழைப்பு நடத்திய காலத்தில் பக்தியே ஒரு மூட நம்பிக்கை என்று கலை வழியே கேள்விகளால் சொன்னவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
நாடகத்தில் அதுவரை இல்லாத ஒரு புதிய வடிவத்தைப் புகுத்தினார். அதுதான் கேள்வி-பதில் வடிவம்; நாளேட்டை படிக்க வைத்து, அதன் செய்திகளுக்கு பதில் அளிக்கும் காட்சிகளை புகுத்தியவர் நடிகவேள் தான்.
கலையின் வழியே மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்த்து, அதன் வழியே பிழைப்பு நடத்தும் உத்தியில் தொடங்கி, மாயைகளால் சிந்தனையை மழுங்கடித்து மக்களின் தலையின்மீது ஏறி சவாரி செய்யும் நோக்கோடு கலையை கையாளும் போக்கு இன்று வரை தொடருகிறது.
(கட்டுரையாளர் பேராசிரியர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகவேள் குறித்த ஆவணப் படங்களை உருவாக்கியவர்.)
செப். 17, நடிகவேள் நினைவு நாள்
ஏழுமலையான் நெற்றியிலிருப்பது-யார் பாதம்?
‘மணா’ தொகுத்த ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ நூலிலிருந்து -சில பகுதிகள்:
நடிகவேள் எம்.ஆர்.இராதா, 1942க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார். பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம், வெள்ளித்திரை (திரைப்படம்) தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உள்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப் பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது. ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் இராதா.
“சுயமரியாதைக் கருத்துகளை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகிவிட்டேன்” என்று இராதாவே உணர்வுடன் சொல்லு மளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன.
விமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, இலட்சுமி காந்தன், போர்வாள், தூக்குமேடை, இராமாயணம், இரத்தக்கண்ணீர், தசாவதாரம், கதம்பம் என்று பல நாடகங்களை அரங்கேற்றினார். கலைஞர் கருணாநிதி, சி.பி. சிற்றரசு, திருவாரூர் தங்கராசு, குத்தூசி குருசாமி என்று பலர் இவருடைய நாடகங் களுக்கான வசனங்களை எழுதினார்கள். ஒவ்வொரு முறையும் இந்த நாடகங்கள் நிகழ்த்தப்படும்போதும் அன்றைக்குள்ள சமூக, அரசியல் குறித்த செய்திகள் நாடகத்தில் அலசப்படுவதின் மூலம் அந்த நாடகங்களுக்குச் சமகாலத்திய அந்தஸ்து கிடைத்தது.
“பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாயே, அவர் என்னத்தைச் சாதித்தார்?”
“உன் நெற்றியும் என் நெற்றியும் எந்தக் கோடும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதே; இதற்குக் காரணம் பெரியார் தாம்ப்பா…” என்று ஒரு காட்சியிலும், கலைஞர் கருணாநிதி யுடன் நடித்துக் கொண் டிருக்கும்போது, “தளபதி தளபதி என்கிறீர்களே அண்ணாதுரை எத்தனை போர்க்களங்களைச் சந்தித்தார்?” என்றும் கேட்பதற்கான துணிவு இராதாவிடம் இருந்தது. சில சாதிச் சின்னங் களைக் குறித்து –
“ஏம்ப்பா… நீ நெற்றியில் போட் டிருக்கியே… டபுள் ஒயிட், சிங்கிள் ரெட். அது என்னப்பா?”
“அது திருப்பதி வெங்கடாசலபதியின் பாதம்.”
“சரி… திருப்பதி வெங்கடாசலபதியின் நெற்றியிலே இருக்கே ஒரு நாமம்… அது யார் பாதம்? என் பாதமா?” என்றெல்லாம் இராதா நாடகத்தில் பேசும் வசனங்கள் அந்தக் காலக்கட்டத்தில் எழுப்பிய அதிர்வுகள் அதிகம்.
1954 டிசம்பர் 11, 12 தேதிகளில் இராமா யணம் நாடகத்திற்குத் தடை விதிக்கப்பட்ட போது, திருச்சியில் உள்ள தேவர் மன்றத்தில், “வராதே. என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால் அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும். எம்.ஆர். ராதா” என்று தட்டி யிலும், நோட்டீசிலும் விளம்பரம் செய்வ தற்குப் பின்னுள்ள உணர்வைப் பற்றி இராதாவே (64இல்) இப்படிச் சொல்லியிருக்கிறார்.
“இருபது, இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்பு சுயமரியாதைக் கொள்கைகளை நாடகங்களில் புகுத்தி நடிப்பதென்பது அத்தனை சுலபமான வேலையல்ல.”
1946இல் சென்னை யில் ‘போர்வாள்’ நாடகத்தை இராதா நடத்த முயன்றபோது அதற்குத் தடை, பிரகாசம் தலைமை யிலான அரசிடமிருந்து, உடனே பெயரை மாற்றிச் சில காட்சி களை மாற்றி அதே நாடகத்தை சர்வாதி காரி, மகாத்மா தொண் டன், சுந்தர லீலா என்கிற பெயர்களில் நடத்தினார்.
மதுரையில் 1946இல் நடந்த திராவிடர் கழக மாநாட்டுப் பந்தலில் தீ வைக்கப்பட்டபோது இராதா தங்கியிருந்த வீட்டிலும் தாக்குதல் நடந்தது. ஏழு வருடங்களுக்குப் பின் திரும்பவும் மதுரையில் இராமாயணம் நாடகம் நடத்தியபோது கலவரமானது. திருச்சி, குடந்தையிலும் இதே மாதிரியான கலாட்டாக்கள். அவருடைய நாடகப் படுதாவில் காட்டப்படும் ‘உலகப் பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்’ என்கிற வாசகத்திற்கும், அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கும்கூட எதிர்ப்பு வலுத்தது. கோவையில் நாடகம் நடத்தும்போது உருவான கலவரச் சூழலில் ‘உயிருக்குத் துணிந்தவர்கள் மட்டுமே நாடகம் பார்க்க வரலாம்’ என்று இராதாவே மைக்கில் அறிவிக்கும்படி ஆனது.
இராமாயணம் நாடகம் இராமனை உயர்த்திப் பிடிப்பதற்கு எதிராக சீதை மற்றும் அவர்களுடைய குழந்தைகளான இலவன், குசனின் பார்வையிலிருந்து இராமனைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
“எங்கே எங்கே நீதி அன்றும் இல்லை
இராமன் வாழ்விலே இன்றும் இல்லை என்றே சொல்வீர்;
இராமராஜ்யம் தன்னிலே. அது தெய்வம் ஆவானோ இராமன்”
“அநீதியிதே” என்று இலவ குசன்கள் பாடுவதான பாடலுடன் முடிகிறது இராதா நடித்த ‘இராமாயணம்’ நாடகம்.
தனக்கு ஒரு சிலை வைத்து அதில் காறித் துப்புங்கள் என்கிறபடி முடியும் இரத்தக்கண்ணீர் நாடகம்.
தனி நாடு விடுதலைப் போராளி!
நாடகத்தில் நடிப்பதற்கு பெண்கள் வரத் தயங்கிய காலத்தில் எம்.ஆர்.இராதாவின் ‘இரத்தக் கண்ணீர்’, ‘இலட்சுமி காந்தன்’ நாடகங்களில் துணிச்சலாக நடிக்க வந்தார் பிரேமாவதி என்ற
17 வயது பெண். இராதாவுக்கும் பிரேமாவதிக்கும் இடையே காதல் உருவாகி, திருமணம் செய்து கொண்டார்கள். பிறந்த குழந்தைக்கு ‘தமிழரசன்’ என்றுபெயர் சூட்டினார்கள். அம்மை நோய் பாதிப்புக்குள்ளாகி, முதலில் தமிழரசன் இறக்கிறார். அடுத்த 3 நாள்களில் அதே நோய்க்கு பிரேமாவும் தனது 22 வயதில் இறந்து விட்டார். தனது அன்பு மனைவி, மகனுக்கு கோவையிலிருந்து பாலக்காடு போகும் வழியில் ஆற்றுப் பாலத்தை கடந்து நிற்கும் இடுகாட்டில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாற்பதடி உயரத்தில் அவர்கள் நினைவாக கோபுரம் போன்ற நினைவுச் சின்னத்தை எழுப்பினார் எம்.ஆர்.இராதா. அவ்வப்போது இந்த நினைவிடத்துக்கு வந்து நடிகவேள் கண்கலங்குவார். அந்த நினைவிடத்தின் கீழே பொறிக்கப்பட்ட வாசகங்களும் மிகவும் முக்கியமானது.
“பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டு செய்து கொண்டிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் துணைவியார் மறைந்த திருமதி. பிரேமாவதிக்கும், மகன் தமிழரசனுக்கும் திராவிடத் தோழர்கள் உண்டாக்கிய நினைவுக் குறி – 1951”
– என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்துபோன நிலைiயில் அந்த வாசகங்கள் இப்போதும் காணப்படுகிறது.
நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்