ஒரு முதல்வருக்கான எல்லைக்குள் கலைஞர் போராடினார்
தமிழகத்தில் சாதி – மதப் பதற்றமற்ற சமூகச் சூழலை, சமூக அமைதியை உருவாக்குவதில் தொடர்ந்து பங்காற்றி வரும் பெரியாரிய அமைப்புகளைத் தேவைப்படும்போதெல்லாம் நேரடியாகவே பயன்படுத்திக் கொள்வது கலைஞரின் இயல்பு. இந்த உறவு தமிழகத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எப்படிப் பங்களிக்கிறது என்று விவரித்தார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ‘தமிழ் இந்து’வின் ‘தமிழ் திசை’ குழுமம் வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலருக்கு அளித்த பேட்டி.
பெரியாரிய அமைப்புகளைத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் எப்படி பயன்படுத்திக் கொண்டார்கள்?
நேரடியான உறவு என்பதைக் காட்டிலும், கொள்கை அடிப்படையிலான பரஸ்பரமரியாதை சார்ந்த உறவு என்று இதைக் குறிப்பிடலாம். ஒரு இடத்தில் பொருளாதார முன்னேற்றம் நடக்க வேண்டும், தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால், முதலில் அங்கு சமூக நல்லிணக்கம் வேண்டும். அதேபோல், சமூகத்தில் புரட்சிகரமான செயல் திட்டங்களை அரசாங்கம் கொண்டுவர முனையும்போது அதற்கேற்ற கருத்துச் சூழல் சமூகத்தில் உருவாகியிருக்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் கேட்காமலேயே இந்த உதவி இயல்பாகப் பல சமயங்களில் பெரியாரிய அமைப்புகளின் பணி மூலம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. கலைஞர் பல சமயங்களில் கேட்டும் பெற்றிருக்கிறார். நிறையச் சொல்லலாம். முக்கியமான ஒன்று, மண்டல் ஆணையப் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு, நாடு முழுக்க சமூக நீதி பரவலாக்கப்பட்டதில் தி.மு.க.வுடன் இணைந்து திராவிடர் கழகமும் பெரும் பங்காற்றியிருக்கிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வட இந்தியக் கட்சிகளையும் தலைவர்களையும் சந்தித்து இதற்கேற்ற சூழலை உருவாக்கினார்கள். அதேபோல, தனியார் துறையிலும் இடஒதுக்கீடுவேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாம் தொடர்ந்து பொதுக் கூட்டங்கள், போராட்டங்களை நடத்தினோம். அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் ஒரு கோரிக்கை மனுவாக அளித்தபோது, அதை அடிப்படையாக வைத்து, இந்த விஷயத்தை அவர் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதமாக்கினார். அது தேசிய விவாதமானது.
நீங்கள் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு கருணாநிதியின் எதிர்வினை எப்படியிருக்கும்?
கவனத்தில் எடுத்துக் கொள்வார். வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்பதற்காகச் சென்ற தூதுக் குழுவில் நானும் ஒருவனாகச் சென்று வந்தபோது காட்டில் போலீசார் நடத்தியிருந்த அத்துமீறல்களையெல்லாம் கலைஞரிடம் விவரித்து, விசாணைக்கும் நிவாரண நிதிக்கும் கோரிக்கை வைத்தோம். அதற்குப் பிறகு அவர் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்தே பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு நிவாரணத்தை அளித்தது.
ஒரு பெரியாரியராக ஆட்சியாளர் கருணாநிதியை எப்படி மதிப்பிடுவீர்கள்?
ஆட்சிக்கு வந்தவுடன் கை ரிக்ஷாக்களை ஒழித்து ரிக்ஷா ஓட்டடிகளுக்கு சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினார். இது பெரிய அளவில் கவர்ந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகள் கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக ஆண்ட வங்கத்தில் இன்னும் கை ரிக்ஷா நடைமுறையில் இருக்கிறது. கலைஞர் தன் ஆட்சியில் நிறைவேற்றிய சட்டங்களில் முக்கியமானது என்று நான் கருதுவது ‘அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகராகலாம்’ சட்டம்! ‘தாழ்த்தப்பட்ட மக்கள் கலெக்டராகவும் கமிஷனராகவும் இருப்பதைக்கூடப் பார்த்து விட்டேன். ஆனால், 110 ஆண்டுகால வரலாற்றில் ஒருவர்கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவில்லை’ என்று ஒரு கூட்டத்தில் பேசினார் பெரியார். அதை உடனடியாக நிறைவேற்றும் வகையில், வரதராஜனை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார் கலைஞர். (அப்போது மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் உரிமை இருந்தது) அதேபோல, 1970களில் ஆட்சியில் இருந்தபோது ‘குரூப் 1 சர்வீஸ்’க்கு இதுவரை அந்தப் பதவிகளுக்கு வந்திராத குரலற்ற பிரிவு மக்களைத் தேடித் தேடி எடுத்தார். சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், குறவர் சமூகத்தினர், கல்லுடைக்கும் சமூகத்தினர் என்று பலர் முதல் முறையாகப் பணி வாய்ப்பை அப்போதுதான் பெற்றனர். ஒரு முதல்வருக்கான வரையறை எல்லைக்குள் அவர் முடிந்த வரையில் போராடினார்!
பெரியார் முழக்கம் 16112017 இதழ்