மோடியின் அற்ப அரசியல்
மோடி தனது பிரதமர் பதவிக்கு உரிய தகுதியை இழந்துகொண்டு வருவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. மதுரை வந்த அவர் 7 ஆண்டுகளாக கட்டி முடிக்கபடாத எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் அரைகுறை வேலைகளைப் பார்வையிட கூடத் தயாராக இல்லை. மாறாக மதவாத சக்திகள் கலவரத்திற்கு திட்டமிடும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கலவரம் தோல்வியில் முடிந்த நிலையில் அதைத் தூண்டி விடுவதுபோல் அமைந்திருக்கிறது இந்த தரிசனம். அங்கே தீபம் ஏற்றச் சென்ற இந்து தீவிரவாதிகள் ‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்’ என்று வெறிப்பிடித்து பேசியதை ஊடகங்கள் ஒளிப்பரப்பின. “சிக்கந்தர் தர்காவை திருப்பரங்குன்றத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் இதுவே எங்கள் நோக்கம்” என்று ஹெச்.ராசா வெளிப்படையாகப் பேசினார்.
திருப்பரங்குன்றம் தரிசனத்திற்கு பிறகு பேட்டியளித்த மோடி இந்து மக்களின் உணர்வுகளை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை என்கிறார். உண்மையில் திருப்பரங்குன்றத்தில் இந்துமக்களின் உணர்வுகளை கோயில் நடைமுறைகளை பின்பற்றிக் காப்பாற்றியது தமிழ்நாடு அறநிலையத்துறைதான். முதலமைச்சர் ஸ்டானின் இது குறித்து அளித்த பேட்டியில் “மதத்தின் பார்வையில் நான் எடுத்த முடிவல்ல; மாறாக ஒரு முதல்வர் என்ற முறையில் இருந்து நான் எடுத்த முடிவு” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது தான் இவர்கள் தீபம் ஏற்றச் சென்ற எல்லைத்தூண் என்று ஆவணப்பதிவுகள் வெளிவந்துவிட்டன. இவ்வளவுக்குப் பிறகும் பொய்களையே இவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பூரணச்சந்திரன் என்ற இந்துமுன்ணனிக்காரர் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்ற ஒரு காரணத்தைக் கூறி தற்கொலை செய்து கொண்டார். இறந்து போன அந்த குடும்பத்திற்கு சென்று மோடி ஆறுதல் கூறியது மிக மிக மோசமான அருவருக்கத்தக்க அரசியல்.
இதன் வழியாக சங்கிகள் நடத்திய போராட்டத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார் மோடி. பூரணசந்திரன் உடல் மருத்துவமனையில் உடற்கூராய்வின் போது இந்துமத சக்திகள் உடலை எடுக்கக் கூடாது என்று கலவரத்தை உருவாக்கினர். அப்போது இந்த பிரச்சனையை அரசியல் ஆக்காதீர்கள்; இது எங்கள் குடும்பத்தோடு இருக்கட்டும் என்று பெற்றோர்களே கலவரக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை அரசியலாக்குவதற்கு மோடி முயல்கிறார் என்று சொன்னால் இதைவிட அற்ப அரசியல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
அதேபோல் தமிழ்நாடு அரசு சாதனைககள் எதுவுமே செய்யவில்லை என்று அப்பட்டமாக பொய் பேசுகிறார் மோடி. பொருளாதாரத்தில், பெண்கல்வியில், பள்ளிக் கல்வியில், ஏற்றுமதியில், தனிநபர் வருவாயில், சமூக வளர்ச்சியில் என அனைத்து மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது என்று ஒன்றிய அரசின் அதிகார அமைப்புகளே கூறும் போது தன்னுடைய அரசின் கருத்துக்களையே ஒரு பிரதமர் தேர்தல் அரசியலுக்காக மறுக்கிறார் இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதாவது உள்ளதா!
அண்மையில் இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் செய்தார் மோடி. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை காப்பாற்றுவதற்காக சென்ற பயணம் இது. சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலையாளி என்று குற்றம் சாட்டப்பட்டு கைதுக்கு உள்ளாகியிருப்பவர். உலக நாடுகளின் புறக்கணிப்புக்கு உள்ளாகியவர். அய்ரோப்பிய நாடுகள் காசா இனப்படுகொலைக்காக இஸ்ரேல் பிரதமரை ஒதுக்கி வைத்துள்ளன. இந்த நிலையில் மோடியின் ஆதரவு இஸ்ரேல் பிரதமருக்கு தேவைப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளையும், இனப்படுகொலைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இஸ்ரேல் பிரதமர் அதிபர் தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்வதற்கான அரசியல் காய்களை நடத்தி வருகிறார். இதற்கு மோடி துணை போகிறார். வரலாற்றுக் காலம்தொட்டு இந்தியா ஆதரித்து வந்த பாலஸ்தீன பிரச்சனைக்கு மோடி மகத்தான துரோகத்தை செய்து இருக்கிறார்.
தொழில்ரீதியான உடன்படிக்கை மட்டுமல்ல கல்வி, பண்பாடு தொடர்பான உடன்படிக்கையையும் மோடி செய்திருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 இந்தியர்களுக்கு வேலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு மோடி இதே போல் இஸ்ரேல் சென்ற போது இத்தகைய நெருக்கம் உருவாகவில்லை. ஆனால் இப்போது மோடி கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் இஸ்ரேல் பிரதமர் வழமைக்கு மாறாக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இஸ்ரேலில் பேசிய பிரதமர் மோடி இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை பற்றி வாய்திறக்காமல் ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை மட்டும் கண்டித்து பேசியுள்ளார். காசாவில் 72,000 பேர் இனப்படுகொலை செய்தது பற்றி வாய்திறக்கவில்லை.
இஸ்லாமிய வெறுப்பைக் கொண்ட யூத தீவிரவாதமும், மோடியின் இந்துத்துவா செயல்திட்டமும் இஸ்லாமிய வெறுப்பை கக்கிக் கொண்டு இருக்கின்றன. அதே பார்வையில் தான் இங்கே தமிழ்நாட்டிற்கு வந்து இஸ்ஸாமிய எதிர்ப்புக்கு நெருப்பை பற்ற வைக்கிறார். மோடியின் அற்ப அரசியலுக்கு தமிழ்நாடு பதிலடி தரும்.
பெரியார் முழக்கம் இதழ் 05032026
