பாஜக பிடியில் திணறும் அஇஅதிமுக
பார்ப்பனிய பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் அஇஅதிமுக சிக்கி சீர்குலைந்து வருவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அஇஅதிமுக, திமுகவுக்கு மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்து தமிழ்நாட்டு அரசியலில் வலிமையான சக்தியாக பரிணமித்தது. இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, இட ஒதுக்கீடு கொள்கைகளின் வழியாக மட்டுமே திராவிட இயக்கத்தின் அடையாளத்தைப் பேணியது. அதே நேரத்தில் இந்து மத அடையாளத்தை தீவிரமாக ஏற்றுக் கொண்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் பார்ப்பனியத்தின் ஆதரவாளரானார். அறநிலையத்துறை வழியாக பார்ப்பனியக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தார். காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி வடநாடு யாத்திரையை முடித்து தமிழ்நாடு திரும்பிய போது, வேலூர் அருகே தமிழ்நாட்டின் எல்லையில் அவரை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்றார். சங்கராச்சாரியை கை ரிக்க்ஷாவில் அமர வைத்து அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இழுத்து வந்து தனது பார்ப்பனிய அடிமைத்தனத்தை பெருமையுடன் பறை சாற்றினார். பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார் பருப்பு இனி தமிழ்நாட்டில் வேகாது என்று பேசினார். காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனை அழைத்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பண்பாட்டு விழாவை நடத்தினார். உலகத்தமிழ் மாநாட்டை அதே சங்கராச்சாரியாரை வைத்து எம்.ஜி.ஆர் தொடங்கினார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அறநிலைத்துறையையே காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரனிடம் ஒப்படைத்துவிட்டார். அறநிலையத்துறையின் ஆலோசனை கூட்டங்கள் காஞ்சி சங்கரமடத்தில் நடந்தன. துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் காஞ்சி சங்கரமடத்திற்குப் போய் அதில் கலந்து கொண்டார்கள்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை ஆதரித்தவர் ஜெயலலிதா. கரசேவைக்கு ஆட்களையும் அனுப்பி வைத்தார். பிற்காலத்தில் இதே சங்கராச்சாரியை ஜெயலலிதா கைது செய்தமைக்கு காரணம் சங்கராச்சாரியின் கொள்கைகளை எதிர்த்து அல்ல! மாறாக அது தனிப்பட்ட பிரச்சனை சார்ந்தது. மத மாற்றத்துக்கான தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு அதை மாற்றிக் கொண்டவர் ஜெயலலிதா. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டபோது அந்த இயக்கத்தின் தலைமை ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாட்டில் கோவையில் நடத்த அனுமதித்தார். இப்படி நீண்ட பட்டியலிட முடியும்.
அஇஅதிமுக திராவிட முத்திரையுடன் இந்துத்துவா கொள்கைகளையும் அரவணைத்துக் கொண்டது என்பதற்காகவே தான் இவற்றை சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்நாட்டு அரசியலில் ராஜகோபாலாச்சாரிக்குப் பிறகு தங்களுக்கு கிடைத்த ஒரே தலைவர் ஜெயலலிதா என்று பார்ப்பனர்கள் கொண்டாடினார்கள். ஆன்மீக குருவாக பார்ப்பனர்கள் ஏற்றுக்கொண்ட காஞ்சி ஜெயேந்திரனையே கைது செய்தாலும் அதையும் சகித்துக் கொண்டு ஜெயலலிதாவை உறுதியாக பார்ப்பனர்கள் ஆதரித்தார்கள். பார்ப்பனியத்தையும், இந்துத்துவாவையும் உள்வாங்கிக் கொள்ளும் அமைப்பாக அஇஅதிமுக மாற்றம் பெற்றது. இதுவே பாரதிய ஜனதா எளிதாக ஊடுருவ பாதையை உருவாக்கிவிட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது நிழலாக இருந்த சசிகலா முதல்வர் பதவியை ஏற்க விடாமல் தடுத்து ஊழல் வழக்கில் அவரை சிறைக்கு அனுப்பினார்கள். மக்கள் ஆதரவு இல்லாத சசிகலாவின் நியமன முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமிக்கு, முதலமைச்சர் என்ற மாபெரும் அதிகாரப் பரிசு திடீரென்று கிடைத்ததால் அவர் அந்த பதவியில் சுகம் கண்டு நீடிப்பதைத் தவிர வேறு எந்த கொள்கைகளும் தேவையே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
தொடர்ந்து அஇஅதிமுகவை உடைக்கும் ‘கரசேவை’களை பாஜக தொடங்கியது. ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்த பாஜக தூண்டியது. இரண்டு அமைப்புகளாக அக்கட்சி உடைந்தது. பாஜகவிடம் அதிகாரம் இருந்த காரணத்தால் இரண்டு அணியினருமே பாஜகவின் ஆதரவுக்காகவும், தயவுக்காகவும் போட்டி போட்டார்கள். நிலைமையை தனக்கு சாதகமாக்கி இரு அணிகளையும் பகடைக்காய்களாக அரசியல் சதுரங்கத்தில் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அண்மையில் செங்கோட்டையன் பிரச்சனை வரை இந்த விளையாட்டுதான் தொடர்கிறது.
அஇஅதிமுகவை பலவீனமாக்கி அந்த இடத்தில் தமிழ்நாட்டு அரசியலில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு இந்த விளையாட்டை பாஜக அரங்கேற்றி வருகிறது. ஆனாலும் இந்த அரசியல் ஆபத்துகளைபற்றி அஇஅதிமுக தலைவர்களுக்கு எந்த கவலையோ, அவமானமோ இல்லாமல் போனது ஏன்? கட்சியை பாஜக சிதைக்கிறது என்பதை நன்றாக உணர்ந்தும், பாஜகவின் சூழ்ச்சிக்கு எதிராக அஇஅதிமுகவின் எந்த அணித் தலைவரிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் வராமல் போனது ஏன்?
மீண்டும் மீண்டும் பாஜகாவின் அரவணைப்புக்கு பரிதவிப்பது ஏன் ஏற்கனவே இந்துத்துவ அரசியலை அக்கட்சி உள்வாங்கி கொண்டதுதான். அதன் காரணமாகவே பாஜகவின் கொள்கைகளுக்கு உடன்படும் போக்குக்கு அக்கட்சி தயார் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் இதற்கு காரணம். மக்களின் உடனடி ஆதரவுக்காக கொள்கைப் பாதையில் இருந்து விலகிச் செல்லாமல் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற எச்சரிக்கையைத்தான் இதிலிருந்து பெற வேண்டும்.
ஒரு உண்மையான திராவிட இயக்கம் மத அடையாளங்களை ஏற்றுக் கொண்டால் அது ஜாதி உணர்வுகளை வளர்த்து, இனம், மொழி அடையாளங்கைக் கூட பின்னுக்கு தள்ளிவிடும் ஆபத்துக்கள் உண்டு. கலைஞர் ஆட்சிக் காலத்தில் அறநிலையத்துறை அரசு எல்லைக்குள் நின்றே செயல்பட்டது. இந்து மத உணர்வுகளை ஊட்டி வளர்க்கவில்லை.இப்போது அதற்கு நேர்மாறாக திராவிட மாடல் ஆட்சியை இந்துக்களின் ஆட்சியாக மெய்ப்பிக்க அறநிலையத்துறை தவிர்த்து தீவிரம் காட்டுகிறது. கரை வேட்டி கட்டிக் கொணடு கையில் கயிறு கட்டுவதை தவித்து விடுங்கள் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா இளைஞர்அணியினரிடம் கூறினார்.
“இது கழகத்தின் கருத்து அல்ல; அவரது சொந்த கருத்து” என்கிறார் அமைச்சர் சேகர்பாபு. கரூரில் நடைபெற உள்ள தி.மு.கவின் முப்பெரும் விழா பந்தலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் ‘பிராமணர்கள்’ வேத மந்திரம் ஓதி, பூமிபூஜை போடும் காட்சிகள் ஊடங்களில் வெளிவந்துள்ளன. இதற்கு கட்சித் தலைமை எப்படி அனுமதிக்கிறது? அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அன்று எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி வைத்த பார்ப்பனியம் தான் இன்று அஇஅதிமுகவை இந்துவமயமாக்கி இருக்கிறது. அதே தவறை இப்போது அறநிலையத்துறை செய்துவிடக் கூடாது. அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் திமுக தலைமை இந்த சறுக்கலுக்கு வழிவிடக் கூடாது என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பெரியார் முழக்கம் இதழ் 11092025
