மதவெறிப் பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அதுகுறித்து விவாதிக்க முன்வரவில்லை. சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து விவாதமில்லை, மணிப்பூர் குறித்து விவாதமில்லை, இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதம் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த எந்த விவகாரம் குறித்தும் விவாதம் இல்லை. ஆனால் வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேர விவாதம் நடத்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு.

இப்பாடல் பாடப்பெற்று 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற அக்டோபரில் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து, ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் ஓராண்டுத் தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட விரிவான செயல் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாடாளுமன்றத்தில் இப்போது சிறப்பு விவாதம் நடத்தியிருக்கிறார்கள்.

1882-இல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனரால் வங்க மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது இந்த வந்தே மாதரம். அவரின் ‘ஆனந்த மடம்’ எனும் நாவலில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சென்னை, பம்பாய், கலகத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது.

முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து – ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’.

“நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் – மதம் – பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால் நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை; 7 கோடி இந்துக்கள் வாளேந்தி களத்தில் குதிப்போம்” என்பதே வந்தே மாதரம் பாடலின் கருத்து.

வந்தே மாதரம் பாடலைப் பாடி வைணவ இந்து இளைஞர்கள் முஸ்லிம்களை கொலைசெய்து, முஸ்லிம் பெண்களை ‘பாலுறவு’ வன்முறைக்கு உள்ளாக்கி முற்றாக ஒழித்துவிட்டு, காளி தேவி முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். அப்போது கதாநாயகன் சத்யானந்தாவிடம், “நாம் தான் முஸ்லிம்களை அழிந்து ஒழித்து விட்டோமே; இந்து இராஜ்யம் வரவில்லையே; ஆங்கிலேயர்கள் தானே ஆட்சி செய்கிறார்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு கதையின் நாயகன் சத்யானந்தா, “இப்போது நமக்கு எதிரிகளே இல்லை; ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள்; அவர்கள் தங்கள் அதிகாரங்களை நம்முடைய விஷ்ணு கடவுளுக்குத் தான் காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்று பதில் கூறுகிறார்.

இப்படி இஸ்லாமியர் ஒழிப்பையும் ஆங்கிலேயர் ஆதரவையும் கொண்டாடுகிற இந்த ‘வந்தே மாதரம்’ பாடலை, ரவீந்திரநாத் தாகூர், முதன்முதலாக 1896-ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் கொல்கத்தா அமர்வில் பாடினார். காங்கிரஸ் கூட்டங்களில் இப்பாடல் ஒலிப்பது தொடர்ந்தபோது, இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. முகம்மது அலி ஜின்னா இறுதிவரை ஏற்கவே இல்லை. சர்ச்சைக்குரிய அந்த பகுதிகள் நீக்கப்பட்டுதான் தேசிய பாடலாக அறிவித்தனர்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட இப்பாடல் குறித்து, இப்போது விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அடுத்த 3 மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. அதனால் இப்பாடலை விவாதிப்பதும் விழா எடுப்பதும் செய்துவிட்டு, பார்த்தீர்களா வங்காளத்தை எப்படி பெருமைப்படுத்தியுள்ளோம் என்று அங்குபோய் தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள். அதுதான் நடக்கும். அதனால்தான் இதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அதற்குப் பதிலளிக்காமல், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பகுதிகளை நீக்கி, வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் அவமதித்துவிட்டது என்று உயர் ஜாதி இந்துக்களை தூண்டிவிடத் தொடங்கிவிட்டனர்.

முதல் இரண்டு பத்திகள் இந்த மண்ணை பெருமைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது என்பதற்காக, இதனை தேசிய பாடலாக அங்கீகரித்ததே மாபெரும் தவறு. இப்போதோ, அந்த மோசமான பகுதிகளை எப்படி நீக்கலாம் என்று மதவெறியை வெளிப்படுத்தியிருக்கிறது பாஜக பரிவாரங்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காமல், பிரிட்டிசாருக்கு சேவகம் புரிந்த முன்னோடிகளைக் கொண்ட வரலாற்றுக்குச் சொந்தமான பா.ஜ.க., காலனிய மனநிலையில் இருந்து விடுபடுவோம் என்று பேசிக்கொண்டே, பிரிட்டிசாருக்கு துதிபாடிய ‘வந்தே மாதரம்’ பாடலை இப்போதும் உயர்த்திப் பிடிப்பதே அவர்களின் போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறது.

பெரியார் முழக்கம் இதழ் 11122025

You may also like...