பார்ப்பன “தீண்டாமை”

வைணவ கோயில்களில் அர்ச்சகர் உரிமை மட்டும் அல்ல, பிரசாதம் விற்கும் உரிமையும் ‘வைணவ பிராமணர்களுக்கு’ மட்டுமே உண்டு என்று உயர் நீதிமன்றத்தில் பார்ப்பனர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

காஞ்சிபுரம் தேவநாதன் கோயிலில் பிரசாத விற்பனை நிலையம் அமைக்க இந்து அறநிலையத்துறை ஏல அறிவிப்பை வெளியிட்டது. அந்த ஏலத்தில் அனைத்து பிரிவுகளும் பங்கேற்க முடியும் என்று அறிவித்திருந்தது. இதற்கு வைணவ ‘பிராமணர்களுக்கு’ மட்டுமே உரிமை என்றும் ஏனைய சமூகத்தினர் இதில் பங்கேற்க உரிமை கிடையாது என்றும் அறநிலையத்துறை அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த பார்ப்பனர் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

காலம் காலமாக பார்ப்பன வைணவர்களுக்கு மட்டுமே இந்த விற்பனை நிலையத்திற்கு உரிமை வழங்கப்பட்டு வருகிறது என்றும், பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் கடந்த ஆண்டில் வைணவ பார்ப்பனர் அல்லாத ஒருவருக்கு உரிமை வழங்கப்பட்டதால் பெருமாள் வளாகத்தின் புனிதம் மீறப்பட்டது என்றும், பிரசாதத்தில் பெருமாளுக்கு எதிராக பூண்டு, வெங்காயம், முருங்கைக்காய் உணவுகள் சேர்க்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உலகில் எந்த நாட்டிலும் உணவுக்கான கலாச்சாரத்தில் பாகுபாடுகள் கிடையாது. அவரவர் விரும்பும் உணவை அவரவர் சாப்பிட முடியும். இந்த நாட்டில் மட்டும்தான் அசைவம், சைவம் என்ற உணவுப் பாகுபாட்டை உருவாக்கி அதிலும் பார்ப்பனியம் நுழைந்து விட்டது.

அசைவ உணவு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் உணவாக பிரிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சமூகத்திலேயே பெரும்பகுதியினர் அசைவ உணவில் இருந்து மாட்டுக்கறியை விலக்கி அது தீண்டப்படாத மக்களுக்கான உணவு என்ற பார்ப்பன மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மாட்டுக்கறி சாப்பிட மாட்டோம் என்ற பெருமையோடு கூறிக்கொள்கிறார்கள்.

பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதியினர் தங்களை பார்ப்பனர்களுக்கு சமமாக உயர்த்திக் கொள்கின்றனர். நாங்கள் சைவ உணவுக்காரர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் பார்ப்பனர்கள் எங்கள் சைவம் என்பது வேறு; எங்களுடைய சைவத்தில் பூண்டு, வெங்காயம், முருங்கைக்காய் கிடையாது என்று கூறி உயர்ஜாதியினரை தனியாக ஒதுக்கி விடுகிறார்கள். பார்ப்பன சைவத்தில் பூண்டு, வெங்காயத்திற்கு இடமில்லை பார்ப்பனர் அல்லாத அசைவத்தில் மாட்டுக்கறிக்கு இடமில்லை; ஆக உணவிலும் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கிறது பார்ப்பனியம்.

சமூகக் கட்டமைப்பில் கீழ் நிலையில் இருந்து மேல் நோக்கி நகரும் மாற்றங்கள் நிகழும் போது, இந்த நாட்டில் மட்டும் அது பார்ப்பனியத்தை நோக்கியே நிகழ்கிறது. இந்த மாற்றங்கள் நிகழும் போது அது தனக்குக் கீழானவர்களின் இருப்பை உறுதி செய்யத் துடிக்கிறது. அது பிற்படுத்தப்பட்ட பார்ப்பனியமாகவும், தலித் பார்ப்பனியமாகவும் சமூகத்தை இயக்குகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுடைய பார்ப்பனியம் தீண்டாமை சுவராகவும், ஆணவப் படுகொலைகள் ஆகவும் கோரத் தாண்டவமாடுகின்றன.

‘பிராமணர்களாக’ தங்களை அடையாளப்படுத்துகிறவர்கள் அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்மங்களை தாராளமாக மீறுகிறார்கள். பிரசாத விற்பனை என்பது வர்ணாஸ்ரமப்படி ‘பிராமணர்களுக்கான’ உரிமை அல்ல அது வைசியர்களுக்கான உரிமை. ஆனால் ‘பிராமணர்கள்’ அதை தங்களுக்கு உரிமை கோருகிறார்கள். வணிக உரிமை பற்றி ஆகமத்தில் இருக்கிறதா? என்று கேட்டால் அது காலம் காலமாக பின்பற்றப்படுகின்ற பழக்க வழக்கம் என்கிறார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனுவை தள்ளுபடி செய்து வழங்கி உள்ள தீர்ப்பில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“மனுதாரரின் கோரிக்கை ஜாதி அமைப்பை நிலை நிறுத்துவதாக உள்ளது. கோயில்களில் வழிபாடுகள், சடங்குகள் முறையாக நடத்த ‘பிராமணர்களுக்கு’ மட்டுமே உரிமைக்கோர முடியாது. வைணவம் ‘பிராமணர்களுக்கு’ மட்டுமே சொந்தமானது அல்ல! அப்படி உரிமை கேட்பது வைணவத்திற்கு பெருமை சேர்க்காது”.
என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார்.

பிரசாதம் தயாரிக்கும் சமையலறை, திருமேனியை (சிலையை) பாதுகாத்தல், கோயில் சடங்குகள் உள்ளிட்டு அனைத்திலும் வைணவ பார்ப்பனர்களே பங்கெடுக்கிறார்கள் என்றும், விற்பனையில் மட்டும் தான் மற்றவர்களுக்கு உரிமை தரப்படுகிறது என்றும் இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

இது எதை வெளிப்படுத்துகிறது? கோயில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது. ‘சூத்திர-பஞ்சமர்’ தீண்டாமைக்கு அறநிலையத்துறையே பாதுகாப்பு தர வேண்டியிருக்கிறது என்ற உண்மையைத்தான் இது உறுதி செய்கிறது.

தீண்டாமைக்கான கருத்துகளின் மூல ஊற்று இங்கேதான் இருக்கிறது. தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து நடக்கும் போராட்டக் களத்தில் அதற்கு கருத்தியலை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த பார்ப்பனியத் தீண்டாமையையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். இதுவே பெரியார், அம்பேத்கர் காட்டிய கொள்கை வெளிச்சம்!

பெரியார்முழக்கம்இதழ்21082025

You may also like...