ஜாதி எதிர்ப்பை இயக்கமாக்குவோம்
“மனிதம் நமது அடையாளம்! ஜாதி அவமானம்! எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ச்சியாக ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்தை நடத்தி வருகிறது. பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் நினைவு நாளான டிசம்பர் 24 வரை இப்பரப்புரை இயக்கத்தை இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு முடிவு எடுத்துள்ளது. ஜாதி ஒழிப்பு என்ற நோக்கத்துக்காகவே தொடங்கப்பட்டது தான் பெரியார் இயக்கம். சுயமரியாதை இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு கால பயணத்தில் இறுகிப் போய்க் கிடந்த ஜாதிக் கட்டமைப்பை அது அசைத்து இருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்னும் கடக்க வேண்டிய தூரம் வெகுதொலைவில் இருக்கிறது.
காலம் எவ்வளவோ மாறிவிட்டது, இப்போது எல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள்? என்று பொது வெளிகளில் பேசிக்கொண்டே சொந்த ஜாதிக்குள் வரன் தேடும் அமைப்புகளில் பதிவு செய்து வருகிறார்கள்.
நகர்மயமாவதில் தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது. பெண் கல்வி மற்றும் விளிம்பு நிலை சமூகத்தின் உயர்கல்வி விகிதங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக ஜாதி கடந்த திருமணங்கள் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் இளைஞர்களின் வாழ்க்கைத் துணைதேடும் உரிமையை ஜாதிய சமூகம் மறுக்கிறது. குறிப்பாக இதில் ஏதேனும் ஒருவர் தலித் என்றால் கலவரங்களிலும் சமூக ஒதுக்குதலிலும் ஆணவப் படுகொலைகளிலும் அது முடிவடைகிறது.
கிராமங்கள் ஜாதிக் கட்டமைப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. மதங்கள் சமூகத்தை ஜாதியாக கூறுபோட்ட நிலையில், இப்போது கோயில்களும் ஜாதி அடிப்படையில் மக்களை பாகுபடுத்துகின்றன. கிராமங்களில் போலி ஜாதிப் பெருமையில் மூழ்கிப்போய் தனது சுயஅவலங்களை எண்ணிப் பார்க்காமல் தனக்கும் கீழான ஜாதி என்ற வெறுப்பில் மூழ்கிக் கிடக்கிறது ஒருகூட்டம், தங்களுக்காக தனிக் கோயிலை கட்டுகிறார்கள். அந்த கோயிலுக்குள் தனக்குக் கீழான ஜாதியினர் என்று கூறி அனுமதிக்க மறுக்கிறார்கள். அம்மன், காளி, திரௌபதி கடவுள்கள் ஜாதியாக பிரிக்கப்பட்டுவிட்டன. கோயில் தேர் என்றாலும் சாமி உற்சவம் என்றாலும் சேரிக்குள் வர மறுக்கின்றன. பல கிராமங்களில் கோயில் விழாக்களுக்கு பட்டியல் இனப்பிரிவினரிடமிருந்து நன்கொடை பெறவே மறுக்கிறார்கள். ரிசர்வ் வங்கி அச்சிடும் ரூபாய் நோட்டுகள் கூட தலித் மக்களிடம் இருந்தால் அது தீண்டாமைக்குள்ளாகி விடுகிறது.
தீண்டப்படாத ஜாதியில் பிறந்த ஒருவன் கிராமத்தில் தேநீர்க் கடைகளை திறக்க முடியாது. அவர்கள் வாழும் பகுதிக்குள் மட்டும் வேண்டுமானால் திறக்கலாம். முடி வெட்டுவதற்குக் கூட நகரப் பகுதிகளுக்கு போக வேண்டும். இறந்த உடல்களை சுமந்து செல்லும் இறுதி ஊர்வலம் கூட ஜாதி இந்துக்கள் தெருவழியாக செல்வதற்கு தடை செய்யப்படுகிறது. ஒற்றையடிப் பாதையிலும், ஆறு, குளங்களை கடந்தும் பிணங்களை தூக்கி சுமக்கும் அவலக் காட்சிகளை பார்க்க முடிகிறது. இவையெல்லாம் இயல்பான சமூக நிகழ்வுகளாகவே ஜாதி சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவமானத்தில் வலியையும், சுமையையும் தாங்கிக் கொண்டிருக்கிறவர்களால் மட்டுமே இந்தப் பாதிப்பை உணர முடியும்.
கடும் தண்டனை தரக்கூடிய வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் அமலில் இருக்கின்றன. வழக்குகள் பதிவாகின்றன, வெகு சில வழக்குகளில் மட்டுமே தண்டனைகள் கிடைக்கின்றன. சட்டத்தை உயிர்த் துடிப்போடு ஏன் செயல்படுத்த முடியவில்லை?
சமூகத்தில் மன மாற்றம் வரவில்லை என்பதுதான் இதற்கான பதில். மன மாற்றத்தை உருவாக்குவதற்கு ஜாதி இழிவு குறித்த புரிதலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த கட்சிகளுக்கான வாக்குவங்கி அரசியல், ஜாதி கட்டமைப்பின் மீது தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த கட்சிகள் ஜாதிகள் வேண்டாம் என்றோ, ஜாதிகளை விடுங்கள் என்றோ வாய்த்திறக்கத் தயாராக இல்லை.
ஜாதி ஆணவப்படுகொலை நடக்கும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அதை பார்க்கிறார்களே தவிர, அதற்கு காரணமான ஜாதிவெறியைக் கண்டிக்க மறுக்கிறார்கள். ஜாதி எதிர்ப்பு பேசும் சில தலித் அமைப்புகள் கூட சுயஜாதி பற்றுடன் செயல்படுவதை பார்க்க முடிகிறது. இந்த அரசியல் சமூக சூழ்நிலையில்தான் திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கத்தை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கிறது. சுயஜாதி மறுப்போடு ஜாதி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதே அந்தப் போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கும். திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பார்வையோடுதான் ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை நடத்துகிறது.
பொது சமூகத்தின் உளவியலுக்கு எதிராக நடத்தும் கருத்தியல் போராட்டம் இது. இந்த போராட்டத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும் சக்தி இளைய சமுதாயத்தினருக்கு மட்டுமே உண்டு என்ற நோக்கத்தோடு “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” என்ற முழக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் முன்வைக்கிறது. பொது ஊடகங்கள் இந்த இயக்கத்தை இருட்டடிப்பு செய்தாலும், இளைஞர்கள் நடத்தும் வலையொலிகள் இந்த பரப்புரைக் கருத்துக்களை மக்களிடம் மிக வேகமாக கொண்டு சேர்ப்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது. பெரியாரிய சிந்தனையாளர்கள் என பல இளைஞர்கள் நடத்தும் வலையொளிகளில் இந்த கருத்துரைகளை ஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள்.
திராவிடர் விடுதலைக் கழகம் ஒரு அமைப்பாக ஜாதி எதிர்ப்பை இயக்கமாகியுள்ளது. எனவே அமைப்பைக் கடந்து ஏரளமான இளைஞர்கள் களப்பணிகளில் கரம்கோர்த்து நிற்கின்றனர்.
ஜாதி ஒழியட்டும்! ஜாதி ஒழிக, ஜாதி அவமானம் என்ற நமது முழக்கங்கள் இயக்கமாக ஓங்கி ஒலிக்கட்டும்!
பெரியார் முழக்கம் இதழ் 18092025
