கேரள உயர்நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு

தமிழ்நாட்டில் இந்து கோயில்களில் பிற மதத்தினர் நுழையக் கூடாது; அதற்கு நீதிமன்றம் தடை போட்டுவிட்டது; கோயில் கொடி மரத்திலேயே அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்தது. குறிப்பாக பழனி முருகன் கோயிலில் இந்த அறிவிப்புப் பலகையை நிறுவ நீதிபதி உத்தரவிட்டார். சித்தர் மரபில் உருவாக்கபப்ட்ட பழனி கோயிலில் கொடி மரங்களே இல்லை என்பது கூட அந்த நீதிபதிக்கு தெரியவில்லை.

இதற்கு நேர்மாறாக இப்போது கேரள உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்து கோயிலில் பிற மதத்தினரையும் அனுமதிக்க வேண்டும்; அதற்கேற்ப சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அடூர் என்ற ஊரில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் 2023-ஆம் ஆண்டு நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்க இரண்டு கிறிஸ்துவ பாதிரியார்கள் அழைக்கப்பட்டனர். `திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு’ நிர்வாகத்தின் கீழ் இந்தக் கோயில் இருக்கிறது.

இதை எதிர்த்து சுனில் நாராயண நம்பூதிரி என்ற பார்ப்பனர் வழக்கு தொடர்ந்தார். தேவஸ்வம் போர்டின் சட்டம் 3(A) – பிற மதத்தினர் நுழைவதற்குத் தடை விதிப்பதை சுட்டிக் காட்டினார்.

கோயில் நுழைவுக்குத்தான் தடை; கோயில் விழாவில் பங்கேற்கத் தடையில்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது.

“இந்த சட்டப் பிரிவுகளுக்கு விளக்கங்களைக் கூறுவதைவிட இன்றைய சூழலில் இப்படி ஒரு சட்டம் தேவையா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதும் மக்கள் நலனை மேம்படுத்துவதுமே எந்த ஒரு சட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும்’’ என்று நீதிபதிகள் சட்டத்தை எந்தப் பார்வையில் அணுக வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

மதங்களுக்கு இடையிலான பகைமையை வெறுப்பு உணர்வுகளை குடிமக்களிடம் தடுக்க வேண்டும். அதே போன்று ஜாதிகள், உட்ஜாதி பிரிவுகள், சமூகங்களுக்கு இடையேயும் பாகுபாடுகளையும் பகை உணர்ச்சிகளையும் உருவாக்குவதற்கு சட்டங்களை கருவியாக பயன்படுத்தக் கூடாது. (Statutes Rules and Regulations should not be allowed to become instruments)

சமூகம் இப்போது மேம்பட்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக மாறிவரும் நிலையில் சட்டங்களை சமூக ஒற்றுமை என்ற நோக்கத்தோடு அதற்கான விளக்கங்களை மதிப்பிட வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

(As Society advances and becomes more inclusive and statutory provisions and subordinate legislation must be interpreted in a manner that advances constitutional values and social cohesion)

தமிழ்நாட்டில் பார்ப்பன நீதிபதிகள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் மத பகைமையைத் தூண்டி விடுவோரைப் பாதுகாக்கவும் சட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த நீதிபதிகளின் சனாதன தர்மப் பார்வைக்கு சம்மட்டி அடியாக கேரளா நீதிபதியின் தீர்ப்பு வந்துள்ளது. வரவேற்கத்தக்க தீர்ப்பு. பெரியார் முழக்கம் இதழ்12022026.

You may also like...