டிரம்பின் திமிர்த்தனம் அடக்கப்பட வேண்டும்!
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே சர்வதேச அளவில் குழப்பங்கள், பொருளாதார நெருக்கடிகள், போர்ப்பதற்றங்களை உருவாக்கும் செயல்களைத் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது, குறிப்பாக அமெரிக்காவின் டாலரைத் தவிர்த்துவிட்டு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யவே கூடாது என மிரட்டல் விடுத்து, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் அம்பானி நிறுவனம் கச்சா எண்ணெய் வாங்கினாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதன் பலன் இந்தியர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டது ஒன்றிய அரசு. பலனை அனுபவித்தது பெரும்பாலும் அம்பானிதான். ஆனால் இப்போது வரியேற்றத்தால் ஜவுளிகள், நகைகள், மீன்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதி துறையினரே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிரம்பை எதிர்த்து கருத்துச்சொல்லவோ, வரிவிதிப்பை நீக்கவோ எந்த முயற்சியும் எடுக்காமல் கள்ள மவுனம் காக்கிறது மோடி அரசு.
அதேபோல உலக அளவில் 17% எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள நாடு வெனிசுலா. முதலீடுகள் மற்றும் வர்த்தகத் தொடர்புகள் ரீதியாக சீனாவுடன் மிக நெருக்கமாக உள்ளது அந்நாடு. ஆனால் வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றும் நோக்கில், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்திருக்கிறது அமெரிக்க ராணுவம். போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்த அராஜக செயலில் ஈடுபட்டிருக்கிறது அமெரிக்கா. இன்னொரு நாட்டின் அதிபரை கைது செய்ய அமெரிக்காவுக்கு யார் அதிகாரத்தை தந்தது என்ற கேள்விகள் சர்வதேச அளவில் எழுந்துள்ளன. எனினும் இந்த கைது நடவடிக்கையால் வெனிசுலாவின் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது. வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் தீவிரம் காட்டுவதுடன், சீனப் பொருட்களுக்கு 60% வரி விதிக்கப் போவதாகவும் மிரட்டி வருகிறார்.
இதுவரை அமெரிக்காவின் நட்பு சக்தியாக திகழ்ந்துவந்த ஐரோப்பிய ஒன்றியமும் டிரம்பின் கோமாளித்தனங்களுக்கு தப்பவில்லை. ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்க விரும்புவதாக தடாலடியாக அறிவித்துள்ளார் டிரம்ப். இனுயிட் என்ற பழங்குடி மக்கள் சுமார் 56,000 பேர் கிரீன்லாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தனது ஏவுகணைகளை நிலைநிறுத்தவும், கப்பல்களை கண்காணிக்கவும், எதிரி நாட்டு ஏவுகணைகளைக் கண்காணிக்கவும் கிரீன்லாந்தை ஒரு தளமாக பயன்படுத்தலாம் என கணக்குப்போடுகிறார் டிரம்ப். இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் மீது 10% வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்பின் இந்த மிரட்டலுக்குப் பதிலடியாக, ஐரோப்பிய நாடாளுமன்றம் அமெரிக்காவுடன் ஜூலை 2025-ல் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல உக்ரைன் போருக்கான நிதியுதவியை அமெரிக்கா குறைத்து வருவதால், ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதேபோல, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் அனைத்துப் பொருட்கள் மீதும் 25% வரி விதித்துள்ளார் டிரம்ப். மெக்சிகோ எல்லையில் போதைப் பொருள் மற்றும் அகதிகள் தடுப்பைத் தீவிரப்படுத்தாவிட்டால், வரியை மேலும் அதிகரிக்கப்போவதாக டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதற்குப் பதிலடியாக கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ என 3 நாடுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்னொருபக்கம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியமாக்க (Zero Exports) அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் 25% வரி விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியால் ஈரானில் விலைவாசி கடுமையாக உயர்ந்து, அரசுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் அங்கு வெடித்துள்ளன.
இஸ்ரேலின் அத்துமீறலால் நிலைகுலைந்துள்ள காசாவிற்கு ஐ.நா. உதவுவதைத் தடுக்கும் வகையில், ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பிற்கு (UNRWA) அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை டிரம்ப் நிரந்தரமாக நிறுத்திவிட்டார். ஜனவரி 2026-ல் தாவோஸில் நடைபெற்ற கூட்டத்தில், காசாவை நிர்வகிக்க “அமைதிக் குழு” ஒன்றை அமைப்பதாக டிரம்ப் தான்தோன்றித்தனமாக அறிவித்தார். ஒரு “தொழில்நுட்பக் குழுவால்” (Technocratic Committee) காசா நிர்வகிக்கப்படும் என்று கூறுவது, எதிர்காலத்தில் பாலஸ்தீன அரசிற்கான உத்திரவாதத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. காசாவை அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகள் முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அதை ஒரு வர்த்தக மையமாக மாற்றும் அபாயகரமான யோசனையையும் டிரம்ப் முன்வைத்திருக்கிறார் என்பதையும் இதனோடு சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் வெள்ளையின விவசாயிகளுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகக் குற்றம்சாட்டி, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சில பொருட்களுக்கும் 30% வரி விதித்துள்ளார் டிரம்ப். அந்நாட்டிற்கான அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடியாக, தென் ஆப்பிரிக்கா ஜி20 அமைப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளது. பிரிக்ஸ் கூட்டணியில் உள்ள நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதித்துள்ளார் டிரம்ப். ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வழங்கி வந்த PEPFAR நிதியை டிரம்ப் பெருமளவு குறைத்துவிட்டார். இதனால் கென்யா, ஐவரி கோஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலை இழந்துள்ளனர். ஐ.நா. அமைப்புகளுக்கான நிதியை நிறுத்தியதால், நைஜீரியா மற்றும் தெற்கு சூடானில் (South Sudan) நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இப்படி உலகம் முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து கண்டங்களில் டிரம்பின் அடாவடியால் வீண் பதற்றமும், பொருளாதார நெருக்கடியும், வேலையிழப்பு அபாயங்களும் பெருகியுள்ளன. சர்வதேச அளவிலான ஒரு செயற்கையான வர்த்தகப் போருக்கு உலக நாடுகளை தள்ளிக்கொண்டிருக்கிறார் டிரம்ப். இந்தத் திமிர்த்தனத்தை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நியாயமற்றது!
பெரியார் முழக்கம் இதழ் 29012026
