நீலிக்கண்ணீர் வடிக்கும் மோகன் பகவத்!
ஜாதி ஒழிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன. இதில், மோகன் பகவத்தின் கருத்தை சற்றே உற்று நோக்க வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசும்போது, “சமூக நடைமுறையில் இருந்து ஜாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து ஜாதியை அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் ஜாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது. இதற்கு முடிவுகட்ட, ஒவ்வொரு மனதிலிருந்தும் ஜாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாகச் செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் ஜாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும்” என்று பேசியிருக்கிறார்.
அடடே, மோகன் பகவத்திற்கு ஜாதி ஒழிப்பில் எவ்வளவு அக்கறை பாருங்கள் என்ற ஆச்சரியக் குரல்களும் எழுந்திருக்கின்றன. இந்த சமயத்தில் மோகன் பகவத்திற்கு நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. ஜாதியத்தின் தோற்றுவாயே பார்ப்பனியம்தான். பார்ப்பனிய மேலாதிக்க சிந்தனையும், செயல்பாடுகளும்தான் ஜாதியை இன்னும் தக்கவைத்திருக்கின்றன. எனவே பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் தகர்ப்போம், அதுதான் ஜாதியை ஒழிப்பதற்கான உண்மையான வழி என்று பேசுவதற்கு மோகன் பகவத் தயாரா என்பதே நாம் எழுப்பும் கேள்வி. அயோத்தியில் ராமர் கோயில் சிலை திறப்பு விழாவில் சூத்திரரான மோடி அழைக்கப்பட்டார் என்பதற்காகவே அவசர அவசரமாக குடமுழுக்கு விழாவுக்கு முந்தைய நாளே பார்ப்பனர்கள் பிரதிஷ்டை செய்தார்களே, அப்போது இந்த ஜாதிப் பாகுபாடு காட்டக்கூடாது என்று மோகன் பகவத் கூறினாரா?
பெங்களூரில் 19/01/2025 அன்று மூவாயிரம் பார்ப்பனர்கள் திரண்ட ‘கர்நாடக பிராமண மகா சபாவில்’ பேசிய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி, “பிராமணர்கள்’ மட்டுமே குடியிருக்கும் ‘அக்கிரகாரங்களை’ உருவாக்க வேண்டும். தங்களின் குலம் மற்றும் கோத்திரங்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும். ‘பிராமணர்கள்’ அல்லாதவரோடு கலந்து உறவாடக்கூடாது. மற்றவர்களோடு ஒன்றாக குடியிருக்கக் கூடாது, உணவருந்தக் கூடாது” என்றெல்லாம் இன ஒதுக்கலை வெளிப்படையாகப் பேசினாரே, அப்படிப் பேசியது தவறு என்று மோகன் பகவத்தால் சொல்ல முடியுமா?
இன்றைய நாகரீக உலகிலும் ஊர் தனியாகவும், சேரி தனியாகவும், அக்ரஹாரம் தனியாகவும் இருக்கலாமா? நாடு முழுவதும் இவற்றை ஒழித்துக்கட்டி அனைவரும் அனைத்து இடங்களிலும் வசிக்கலாம் என்று நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்ல மோகன் பகவத் முன் வருவாரா? ஜாதிக்கு மூலதனம் மதம், அந்த மதத்திற்கு மூலதனம் கடவுள், அந்த கடவுளுக்கு மூலதனம் சாஸ்திரங்கள். இவற்றை வேரோடு பிடுங்கி எறியாமல் ஜாதி ஒழியப்போவதில்லை. எனவே ஜாதிப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான வழி என்பதே இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், வேத- புராணங்களையும் ஒழிப்பதுதான் என்பதே புரட்சியாளர் அம்பேத்கரும், பெரியாரும் நமக்கு காட்டியிருக்கும் வழி. அந்த வழி சரிதான், அதைப் பின்பற்றி ஜாதியை ஒழிக்கப் புறப்படுவோம் என்று சொல்ல மோகன் பகவத் தயாரா?
தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தது பார்ப்பனர்கள் நடத்தி வரும் ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம்தான். அந்த சங்கம் ஆர்எஸ்எஸ்-உடன் நேரடித் தொடர்பில் உள்ள சங்கம். கோயில் கருவறைக்குள் தீண்டாமை கூடாது, இந்துக்கள் அனைவரும் கருவறைக்குள் நுழைந்து கடவுளுக்கு அர்ச்சனை செய்யலாம், ஜாதிப் பாகுபாட்டை முதலில் இங்கிருந்து ஒழிப்போம் என்று சொல்ல மோகன் பகவத்திற்கு துணிச்சல் உள்ளதா? ஜாதி மறுத்து காதல் திருமணம் புரிந்தாலே கொலை செய்யும் அளவுக்கு செல்லும் ஜாதி வெறியர்களே, இனி அப்படிச் செய்யாதீர்கள், எல்லோரும் இந்துக்கள்தான், ஒரு இந்து எந்த ஜாதியைச் சேர்ந்த மற்றொரு இந்துவையும் திருமணம் செய்துகொள்ளலாம். அப்படி திருமணம் செய்துகொள்வோரை ஆர்எஸ்எஸ் அமைப்பு வரவேற்கிறது என்று அறிவிக்க மோகன் பகவத்திற்கு துணிச்சல் உள்ளதா?
ஜாதி ஒழிப்புக்கான லட்சியப் பயணத்தில் சமூக நீதி ஏற்பாடாக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு கொள்கையை சீரழிக்கும் விதமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, உயர் ஜாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியோருக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்ற நோக்கத்தை இது சிதைக்கிறது, எனவே பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு கூடாது என்று பா.ஜ.க.வுக்கு அழுத்தம் தர, அந்த முடிவை எதிர்க்க ஆர்.எஸ்.எஸ் தயாரா? இப்படி பல கேள்விகள் மோகன் பகவத்திற்கு உள்ளன. இவை எதற்குமே முன்வராத ஆர்எஸ்எஸ், வெறுமனே ஜாதிப் பாகுபாட்டை களைய வேண்டுமென்று பேசுவது கொலை செய்தவனே, ‘அய்யயோ இறந்துவிட்டானே’ என நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு ஒப்பானதாகும்.
பெரியார் முழக்கம் இதழ் 22012026
