தமிழ்நாட்டு அணியா? டெல்லி அணியா?
“இப்போது நடக்கும் தேர்தல் தமிழ்நாட்டு அணிக்கும் டெல்லி அணிக்கும் நடக்கும் தேர்தல்” என்று தெளிவாக அறிவித்துவிட்டார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு சுயமரியாதைக்கும் தன்னாட்சிக்கும் களத்தில் இருக்கிறது. எதிரணியில் இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஒன்று பாஜகவின் உரிமை பறிப்புகளை தமிழ்நாட்டின் மீதான வஞ்சகத்தை எதிர்க்காமல் அமித் ஷாவின் ஆணைகளின் கீழ் இயங்கும் எடப்பாடி அணி. மற்றொன்று தமிழ்நாட்டை வஞ்சித்தாலும்”ஜனநாயக” மிரட்டல்களை திணித்தாலும் பாஜகவை எதிர்த்து வாய் திறக்க மாட்டோம் என மவுன விரதம் இருக்கும் விஜய் கட்சியின் அணி.
இந்த இரண்டு அணிகளுக்குமே திமுக ஆட்சி நடத்தி வரும் தத்துவார்த்த சுயமரியாதை, தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை முடக்கி இந்துத்துவ அரசியலிடம் சரணாகதி அடையச் செய்வது தான் நோக்கம். முதலமைச்சர் பதவி என்பதைத் தவிர தங்களுக்கு வேறு எந்த லட்சியமும் கொள்கையும் கிடையாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் தான். தமிழ்நாடு அரசைப் போலவே ஒன்றிய ஆட்சிக்கு எதிரான தத்துவப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார் ராகுல் காந்தி; ஆர்.எஸ்.எஸ் தத்துவத்தை எதிர்த்து உறுதியாக உயிரைப் பணயம் வைத்து அவர் களத்தில் நிற்கிறார்.
சொல்லப்போனால் அவரது காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் ஏற்றுக் கொள்ளாத சிந்தனை இது; சொந்த கட்சிக்குள் நிலவும் மதவாத உணர்வுகளுக்கு எதிராகவே ராகுல் காந்தியின் இந்த லட்சியப் போராட்டம் நடக்கிறது. இதற்காகவே பல ஆண்டுகள் அவர் காங்கிரஸ் கட்சித் தலைமையை ஏற்கத் தயங்கினார். இதில் திமுகவும் ராகுல் காந்தியும் ஒரே நேர்கோட்டில் இணைந்து நிற்பதால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் தத்துவார்த்த சகோதரர்களாக கைகுலுக்கிக்கொண்டு இருக்கிறார்கள்; இதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் கட்சிகளுக்கும் அப்பாற்பட்டு எங்கள் உறவு நீடிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
ஒன்றிய ஆட்சியினால் ராகுல் நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்ட போதும்; நீதிமன்றம் வழியாக சிறைத்தண்டனை வழங்கப்பட்டபோதும்; நாடாளுமன்ற திமுக அணி ராகுல் பக்கம் உறுதியாக நின்றது. நாடாளுமன்றத்தில் பாஜக ஆட்சியின் மெஜாரிட்டி எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்தியதும் தமிழ்நாடு தான். ஒரு இடத்தைக் கூட தமிழ்நாட்டில் பாஜகவால் வென்று காட்ட முடியவில்லை போட்டியிட்ட அத்தனை காங்கிரஸ் வேட்பாளர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது திமுக கூட்டணி தான். சொந்தக் கட்சிகளை விட லட்சியமே பெரிது என்ற உயர்ந்த நோக்கில் நடை போடுகிறார் ராகுல் காந்தி. ஆனால் இதற்கு குழி தோன்றுகின்ற வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸில் சில கலகக் குரல்கள் கேட்கின்றன. எங்களை அமைச்சராக்கினால் தான் கூட்டணி என்கிறார்கள். வெளிநாடுகளில் உயர்ந்த பதவிகளை வகித்துவிட்டு பிறகு காங்கிரஸ் கட்சியில் அதிகார மையத்தில் நுழைந்த பிரவீன் சக்கரவர்த்தி என்ற பார்ப்பனர். இந்த கலகத்தைத் துவக்கி வைத்தார்.
த.வெ.க தலைவர் விஐய்யுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமலேயே பேச்சுவார்த்தைகளை நடத்தினார் ;தனக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சிக்குள் சில நபர்களையும் பிடித்துக் கொண்டார்; கட்சிகளை விட லட்சியங்களே பெரிது என்ற ராகுல் காந்தியின் நோக்கத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம் இது! ஈரோட்டில் இரண்டு முறை இடைத்தேர்தல்கள் வந்த போதும் காங்கிரஸ் வேட்பாளர்களையே போட்டியிடச் செய்து மகத்தான வெற்றியைத் தேடித் தந்தது திமுக தான். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று தமிழக முதலமைச்சர் ஏன் கூறுகிறார்? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
திராவிட இயக்க லட்சியங்களோடு பயணிப்பது திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கொள்கை பார்வையில் தான் ஆட்சியின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சி மாநில உரிமைகளுக்காகப் போராடும் ஒர்அமைச்சர் அவையில் எப்படி இடம்பெற முடியும்? அப்படி இடம் பெற்றால் அது பதவிகளுக்கான அமைச்சரவையாக இருக்க முடியுமே தவிர கொள்கைக்கான அமைச்சரவையாக இருக்கவே முடியாது; குழப்பங்கள் தான் உருவாகும். கூட்டணி அமைச்சரவையின் குழப்பங்களையும் அமைச்சர்கள் விலைபோவதையும் நாடு பார்த்து வருகிறது.
காங்கிரஸ் அமைச்சர்களே விலை போய் இப்போது மத்திய அமைச்சர்களாக ஆகிவிட்டார்கள். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளயே முதலமைச்சர் பதவிக்கு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய அரசியல் அவலங்களைச் சந்திக்காத ஒரே மாநிலமாக தமிழ்நாடு. தனித்துவமாக பயணிக்கிறது. எனவேதான் கூட்டணி ஆட்சி. தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று முதலமைச்சர் கூறுகிறார். அமைச்சர் பதவி தராவிட்டால் திமுக அணியில் இருந்து விலகி அவர்கள் விரும்புகிற “அமித்ஷா எதிர்ப்பு மவுன” அணியில் சேர்ந்தாலும் அது லட்சியத் துரோகம்தான் அமித் ஷா அணிக்கு மறைமுக ஆதரவு தான்: இதுவும் முதலமைச்சர் கூறும் டெல்லி அணி தான்.”
இது தமிழ்நாட்டின் உரிமைக்களம்!
வெல்லப் போவது தமிழ்நாடு தான்!
பெரியார் முழக்கம் இதழ்19022026
