முதன்மை எதிரியை அடையாளம் காட்டுகிறார் முதலமைச்சர்

திராவிட மாடல் ஆட்சியின் முதன்மை எதிரி யார்? என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டிவிட்டார். மதவாத, சனாதன பாஜகதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை எதிரி என்று செங்கல்பட்டு திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை நூற்றாண்டு விழாவிலும், தமிழ்நாடு ஆளுநருக்கு அளித்த பதிலிலும் முதலமைச்சர் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
அவரது இந்த கருத்து மிகவும் முக்கியத்துவமானது.

தமிழ்நாட்டில் பாஜகவும், பாஜகவின் முகமூடிகளும் திமுகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்கின்றனர். அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒன்றிய ஆட்சியின் இன துரோகங்களுக்கு குடை பிடிக்கிறார். அக்கட்சியிலிருது பிரிந்து நிற்கும் ஓ.பன்னீர் செல்வம், தினகரன் அணியினர் பாஜக அணியில் தங்களை இணைத்துக் கொள்ள மறுப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் பேசி வருகிறார்கள். பெரியார், அம்பேத்கரை கொள்கைத் தலைவராக கூறிக் கொண்டாலும் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இப்போது பாஜகவை நெருங்கி வருகிறது. அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த கட்சியைத் தங்களின் வலைக்குள் வீழ்த்த இதுவே சரியான தருணம் என்று பாஜக காய்களை நகர்த்தி வருகிறது, விஜய் தன்னை காப்பாற்றிக் கொள்ள தேசியக் கூட்டணிக்கு வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன ஊடகவியலாளர்கள் பேசத் தொடங்கி விட்டனர்.

பெரியார் கொள்கைத் தலைவர் என்ற தவெக விஜய் கருத்தை பாஜக தலைமை நம்பத் தயாராக இல்லை. தனது முகத்தை பார்க்க வந்த கூட்டத்தில் 41 பேர் மூச்சுத் திணறி, தண்ணீர் இன்றி மரணத்தைத் தழுவிய கொடுமைக்கு விஜய் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் இல்லை. பனையூர் பதுங்கு மாளிகையில் இருந்து முதலமைச்சருக்கு அவர் சவால் விடுகிறார். கட்சியின் பொதுச்செயலாளராக, முன்வரிசை தலைவர்களாக வலம் வருகிறவர்கள் கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர். நேபாளத்தில் நடந்தது போல் ஆயுதப் புரட்சி தொடர வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட ஒருவரும் இதில் அடக்கம்.

கரூர் துயரங்களை கட்சி அரசியல், தேர்தல் அரசியலோடு இணைத்தே தமிழ்நாடு அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுத்த நிலைப்பாடு மிகவும் தனித்துவமாக இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ”இந்தப் பிரச்சனையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை விட தமிழ்நாட்டின் எதிர்காலத்தில் இத்தகைய அவலங்கள் நிகழாமல் தடுப்போம்; அரசியல் முரண்பாடுகள், தனிமனித பகைகளை தவிர்த்துவிட்டு மாண்டுபோனது தமிழ் உறவுகள் தான் என்பதே எனது நிலைப்பாடு” என்று முதலமைச்சர் கருத்து தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற நிலை கடந்து, மக்கள் தலைவராகி விட்டார் என்பதையே முதிர்ச்சியின் உச்சமான இந்த கருத்துகள் உணர்த்துகின்றன.

பார்ப்பனியத்தின் கருத்தியலான சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆளுநர் ரவி, ஜாதி எதிர்ப்பாளராக வேடம்கட்டிக் கொண்டு தமிழ்நாடு அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி சனாதனத்தை எதிர்த்தே தொடர்ந்து போராடும் என்று ஆளுநருக்கு பதிலடி தந்து இருக்கிறார்.

தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டுள்ளார்…

இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால் தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!

அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லி இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகட போராடும்!

உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு எதற்கெடுத்தாலும் மதத்தை பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!

ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!

உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப் பது வரையிலான வன்மம் இருக்கிறதே. அதற்கு எதிராகப் போராடும்!

தொகுதிவரையறை மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்பதுபோல் திணித்திருக்கும் நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!

நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!.

ஆக திராவிட மாடல் ஆட்சியின் முதன்மை எதிரி பார்ப்பனியமும் சனாதனமும் தான் என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார்.

இந்த நாட்டில் நடக்கும் போராட்டம் எல்லாம் அரசியல் போராட்டம் அல்ல; ஆரிய திராவிட போராட்டத்தின் தொடர்ச்சியே என்றார் பெரியார். இந்த போராட்டம் இதுவரை ஒளிவு மறைவாக முகமுடிகளோடு நடந்து கொண்டு இருந்தது. முதலமைச்சருடைய அறிவிப்பு இதை பகிரங்கப்படுத்தி விட்டது.

அஇதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிரான அரசியலைப் பேசி பார்ப்பனிய, மனுவாத எதிர்ப்பை மடைமாற்றம் செய்து விடக்கூடாது. இக்கட்சிகளை ஆட்டிவைக்கும் பா.ஜ.க-வின் பார்ப்பனியமே முதன்மை எதிரி என்ற தெளிவோடு முதலமைச்சர் சரியான பார்வையை முன்வைத்து இருக்கிறார். இதுவே பெரியாரியல் பார்வை.
பெரியார் முழக்கம் இதழ் 09102025

You may also like...