ஆகமக்காரர்களின் குத்தாட்டம்

ஆகமக் கோயிலில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும். பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக முடியாது என்ற ‘இன ஒதுக்கல்’ சட்டப்படியே நிலை நிறுத்தப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்!

அரசியல் சட்டம் தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இந்து மதம் தீண்டாமையை ஆகமங்களின் பெயரில் புனிதமாக்குகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமையை தீண்டாமைக்கு ஆதரவாக முறைகேடாக பயன்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் துணை போகின்றன என்பதுதான் பேரவலம்.

‘பிராமணர்கள்’ மட்டுமே கோயிலுக்குள் நுழைய முடியும் என்ற தீண்டாமை ஒரு காலத்தில் இருந்தது; சாஸ்த்திரமும் அப்படித்தான் கூறியது என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஆலயப்பிரவேச உரிமை என்ற பெயரில் போராட்டங்கள் நடந்தன. சுயமரியாதை இயக்கம் முதலில் தொடங்கியது. பிறகு காந்தியும் காங்கிரஸும் இந்த போராட்டங்களை நடத்தியது. ஆகம விதிகளைத் திருத்தித்தான் 1959-ஆம் ஆண்டு அனைத்து இந்துக்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கர்ப்பகிரகத்துக்குள் இப்போதும் பார்ப்பனர் அல்லாதவர்களால் அர்ச்சகர் முடியாது என்பது மட்டுமல்ல ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தி அர்ச்சகர் உரிமையை மறுக்கிறார்கள்.

ஆகம கோவில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கான உடல் தகுதிகள் ஆகமங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. அர்ச்சகர்கள் பல் துலக்கக் கூடாது, வேட்டி துண்டுகளைத் துவைக்க கூடாது, மீசை, தாடி இருக்கக் கூடாது, தொப்பை கூடாது, மனைவி உயிருடன் இருக்க வேண்டும், இறந்துவிட்டால் பூஜை செய்யக்கூடாது, மாமிசம் சாப்பிடக்கூடாது, கடல் தாண்டி போகக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. பல் துலக்காமலும் வேட்டி, துண்டுகளைத் துவைக்கமாலும் இருக்கும் அர்ச்சகர்கள்தான் ‘தீட்டுப்படாத’ தூய்மையானவர்களா? பார்ப்பன வேத பண்டிதர்கள் இப்படித்தான் வாழ்கிறார்களா?

ஸ்ரிவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்குக்காக முகூர்த்தக் கால் நடும் சடங்குக்கு வந்த இளம் அர்ச்சகர்கள் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததை ‘பார்ட்டி’ வைத்து கொண்டாடி இருக்கிறார்கள்.

அர்ச்சகர் ஒருவர் இல்லத்தில் அர்ச்சகர்களுக்கான புனித உடைகளோடு மது அருந்தி, குத்தாட்டம் போட்டு இருக்கிறார்கள். ஊடகங்களில் இந்த காட்சிகள் வெளிவந்திருக்கின்றன. சங் பரிவாரங்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை பரப்பினார்கள். இவர்கள் தமிழ்நாடு அரசு நடத்திய அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை அள்ளி வீசினார்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வா.ரங்கநாதன் அதை உடனடியாக மறுத்துள்ளார். அறநிலையத் துறை கைது செய்துள்ள ஆறு பேரில் 5 பேர் பார்ப்பனர், ஒருவர் பார்ப்பனரல்லாத சைவப் பிள்ளை என்ற ஜாதியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட 28 பார்ப்பனர் அல்லாத அர்ச்சகரின் பட்டியலையும் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் குத்தாட்டம் போட்டு கைதானவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

பார்ப்பன அர்ச்சகர் ஒருவர் அளித்த பேட்டியில் இந்த குத்தாட்டம் இப்போது நடந்தது அல்ல. ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்தது; பொய்யாக அதை பரப்புகிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார். இதிலிருந்து இவர்கள் அரசு நடத்திய பயிற்சியில் படித்தவர்கள் அல்ல என்ற உண்மை வெளியாகிவிட்டது. ஆனால் குத்தாட்டம் நடந்தது உண்மை என்பதும் அம்பலமாகியுள்ள்து.

திமுக ஆட்சிக்கு வந்த 100வது நாளில்தான் இத்திட்டத்தையே முதல்வர் அறிமுகப்படுத்தினார். ஏழு ஆண்டுகளுக்கு முன் அர்ச்சகராக இருந்தவர்கள் ‘பிராமண குல’ வழியில் வேத பாடசாலையில் படித்து வந்தவர்கள் தான். உண்மையில் கடவுள் கருவறையில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு கடவுள் சக்தி என்று ஒன்று இல்லை என்பது நன்றாகவே தெரியும். பாமர மக்களைப் போல் அவர்களுக்கு கடவுள் பயம் இருக்காது.

காஞ்சிபுரம் கோயில் கருவறையில் கருவறையை படுக்கை அறையாக மாற்றிய தேவநாதன் என்ற அர்ச்சகர் கதை ஊர் அறிந்த ஒன்று! தில்லை நடராசன் கோயிலை தீட்சதர்கள் நட்சத்திர விடுதிகளாக மாற்றி அமைத்து அதற்காக கைதாகியும் உள்ளனர். குழந்தைத் திருமணங்களை ஆதரிப்பவர்கள். இப்போதும் தங்கள் குடும்பங்களில் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் அதை நியாயப்படுத்தி பேசுகிறார். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. நீதிமன்றங்களில் வழக்கு வந்தது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் காவல்துறைக்கும் அறநிலையத்துறைக்கும் உத்தரவிட்டது.

கருவறைக்குள் பூசைக்கு செல்லும் ஆகம வேதியர்கள் பெரிய பைகள், அலைபேசிகளை கொண்டு செல்கிறார்கள். இந்த ஆகம மீறல்களை அறநிலையத்துறை தடை செய்தது என்று கோயில் உதவி ஆணையர் ரமணி காந்தன் கூறியுள்ளார்.

இதே கோயிலில் கருவறைக்கு முன்பாக இருக்கும் அர்த்தமண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ அறநிலையத்துறை நீதிமன்ற உத்தரவின்படி முடிவு செய்தது கருவறைக்குள் என்ன நடக்கிறது என்பதை இந்த கேமராக்கள் கண்காணிக்கும்.

இதற்கு ஆகம பண்டிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்கள் கர்ப்பகிரகம் தங்களின் ‘பிராமண’ மேலாதிக்கத்தை பாதுகாப்பதோடு தங்களது ஒழுக்கக்கேடுகளையும் பாதுகாக்கும் இடம் என்பதை தவிர இந்த போராட்டத்தின் நோக்கம் வேறு என்னவாக இருக்க முடியும்?

“தொடாதே! தொடாதே கருவறைகளின் கதவை தொடாதே! கண்காணிப்பு கேமராவை பொருத்தாதே” என்று கோயில் வளாகத்தைச் சுற்றி ஒரு நாள் முழுதும் போராட்டம் நடத்தி கண்காணிப்பு கேமராக்களை நிறுவ முடியாமல் தடுத்து விட்டார்கள். கடந்த வாரம் ஏடுகளில் வந்த செய்திகள் இவை. இந்த அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 2017 ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி உண்டியல் பணத்தை கோயில் அர்ச்சகரும் அவர் மகனும் திருடியதாக கைது செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு என்றால் நாங்கள் திருடுவோம் இது ஆகம் விதி! என்கிறார்களா? அறநிலையத் துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்பு கேமராவை நிறுவ வந்ததை தடுத்து நிறுத்துவது சட்டப்படி குற்றம். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் இவர்கள் தடுத்திருக்கிறார்கள். இதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் ‘பிராமணர்கள்’ வேதபண்டிதர்கள் ஆகமக்காரர்கள் என்ற பாதுகாப்புகள் அவர்கள் மீது சட்டம் பாயாமல் தடுத்துவிட்டது.

கோயில்களை அறநிலையத்துறை இடமிருந்து மீட்க வேண்டும் என்று இப்போது கூப்பாடு போடுகிறார்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இவ்வளவு திருட்டுகள் முறைகேடுகள், பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. அரசிடமிருந்து மீட்கப்பட்டால் என்னவாகும்?
பெரியார் முழக்கம் 03072025இதழ்

You may also like...