இது ‘ஜனநாயக திருட்டு’

புதிய சட்டத் திருத்தம் ஒன்றை அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். 5 ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தின் கீழ் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தாலே, அவர்கள் பதவி பறிக்கப்படும் என்று கூறுகிறது இந்த மசோதா. நீதிமன்ற விசாரணை, நீதிமன்ற தீர்ப்புகள் இல்லாமலே குற்றவாளிகளை ஒன்றிய பாஜக ஆட்சியே தனது புலனாய்வு, அமலாக்கத்துறை அமைப்புகளை வைத்து முடிவு செய்து விட முடியும். “ஓட்டு திருட்டு செய்தவர்கள் அடுத்து ஜனநாயக திருட்டுக்கு தயாராகிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மிகச்சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எதிர்க்கட்சி ஆட்சிகளை குறுக்கு வழியில் வீழ்த்துவது இந்த சட்டத்தின் நோக்கம். மாநில ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஏற்கனவே 356 என்ற ஒரு சட்டப்பிரிவு இருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த பிரிவு செயலற்றதாக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது ஒரு புதிய குறுக்கு வழியை கண்டுபிடித்து இருக்கிறது ஒன்றிய ஆட்சி. அரசியலில் குற்றங்கள், ஊழலை ஒழிப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக அமித் ஷா கூறுகிறார். அமித் ஷாவே போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி குஜராத் மாநிலத்திற்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் தான்.

இந்தியாவில் இந்து இராஷ்டிரம் அமைவதற்கு மாநிலங்கள் என்ற அமைப்பு தடையாக இருக்கிறது. மாநில உரிமைகளைப் பறிப்பது; இந்தி, சமஸ்கிருத அடையாளங்களை திணிப்பது; பாடநூல்கள் வழியாக வரலாறுகளை திரிப்பது; இதற்கு ஏற்ற கல்வித் திட்டங்களை உருவாக்குவது; மதவாத அரசியலை எதிர்க்கும் கட்சிகளை முடக்குவது; அனைத்து மாநில அதிகாரங்களையும் பாஜகவின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவது; பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்களின் தூதர்களாக ஆளுநர்களை நியமித்து மாநில சட்டங்களை முடக்குவது; தேர்தல் ஆணையத்தின் நேர்மையை குலைப்பது; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்தல் ஆணைய நியமன குழுவில் இருந்து விலக்கி திருத்தம் செய்வது; தேர்தலில் முறைகேடுகள் செய்வது; என்று அடுக்கடுக்கான சீர் குலைவுகளை ஒன்றிய ஆட்சி அரங்கேற்றி வருகிறது.

அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைக்கின்றன. ஆளும் கட்சியின் பக்கம் அவை திரும்புவதே இல்லை. அரசியல் கட்சிகளை மிரட்டி பணிய வைப்பதற்கு இந்த துறைகள் ஏவப்படுகின்றன. அமலாக்கத்துறை அதிகாரிகளே இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறார்கள். அப்படி கையும் களவுமாக பிடிபட்ட ஒரு அதிகாரி மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தது. அந்த அதிகாரியை காப்பாற்றவும் அவரை பிணையில் எடுக்கவும், இந்த ஊழல் ஒழிப்பு ‘உத்தமர் ஆட்சி’ தான் தீவிரமாக செயல்பட்டது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் 31 விழுக்காடு பேர் மீதும் சட்டமன்ற உறுப்பினர்களின் 29 விழுக்காடு பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகள் தண்டிக்கப்படக் கூடிய கடுமையான கிரிமினல் வழக்குகளை சந்திக்கும் வேட்பாளர்களை பாஜக தேர்தலில் பெருமளவில் நிறுத்தி இருக்கிறது. உபியில் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான கிரிமினல் வழக்குகளில் இருக்கின்றனர்.

சதவீத கணக்கில் பார்த்தால் தெலுங்கானா முதல் இடத்திலும் (71 விழுக்காடு), பீகார் இரண்டாவது இடத்திலும் (48 விழுக்காடு) இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிரிமினல் வழக்குகளில் அதிகமாக இருப்பவர்கள் பாஜக உறுப்பினர்கள் தான். 32 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 1200 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. (ஆதாரம் ஆகஸ்ட் 26 ‘இந்து’ ஆங்கில நாளேடு).

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களின் பதவி பறிப்புக்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்டபூர்வ உரிமை உண்டு. இந்த மசோதா இந்த உரிமைகளை பறித்து விடுகிறது.

இப்படி ஒரு சட்டத்தை இப்போது அவசர அவசரமாக கொண்டு வருவதற்கான தேவை என்ன? அதுவும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் விவாதங்களுக்கு வாய்ப்பு இன்றி ஏன் தாக்கல் செய்ய வேண்டும்? இதற்குப் பின்னால் மிகப்பெரும் அரசியல் சதி இருக்கிறது.
இந்தியாவை ஒற்றை தேசமாக்கி இந்து இராஷ்டிரம் நோக்கி நகர்த்துவதற்கு சட்டங்கள் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அதிகார மய்யத்தால் பட்டியலிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றாக தாக்கல் செய்யப்படுகின்றன். நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சியின் கருத்துக்களை இந்த ஆட்சி செயல்படுத்தப் போவது இல்லை என்பதை ‘வக்பு வாரிய சட்டத்’ திருத்தத்தில் நாடு இதை பார்த்தது.

1933 ஜெர்மனியில் ஹிட்லர் நாஜி கட்சியின் தலைவராக ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு, பிறகு அவசர சட்டங்களை பிறப்பித்து முழு சர்வாதிகாரியாக மாறினார். 1922 இல் இத்தாலியின் முசோலினி சட்டப்படி பிரதமராகி, பிறகு ஜனநாயக அமைப்புகளை ஒழித்து பாசிச சர்வாதிகாரியாக மாறினார். அண்மைக்கால உதாரணம் துருக்கியின் எர்டோசன் 2003-இல் பிரதமர் ஆகி 2017 -இல் அவசர சட்டங்களால் ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகாரியாகிவிட்டார்.
அதே சர்வாதிகார பாதையை நோக்கியே ஒன்றிய மதவெறி ஆட்சி நகருகிறது. மதசார்பற்ற சமூகநீதி மனித உரிமை அமைப்புகளும், கட்சிகளும் மக்களிடையே இந்த ஆபத்துக்களை விளக்கி முறியடிக்க முன்வர வேண்டும்.

பெரியார்முழக்கம்இதழ்28082025

You may also like...