அறிவியல் வளர்ச்சியும் பார்ப்பனியமும்!
அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் நடுங்கிப் போய் நிற்கிறது வைதீக பார்ப்பனியம். பாரம்பரியம் என்ற பெயரில் தாங்கள் கட்டமைத்த சனாதன மரபுகள் சீர்குலைந்து விடாமல் காப்பாற்றும் முயற்சிகளில் அது இறங்கியிருக்கிறது. அதற்காக அறிவியலை சனாதான பழமைக்குள் தொடர்புபடுத்தும் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளி பாடத்திட்டங்களில் இந்த கருத்துக்களை திணிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டாலும் ஒன்றிய ஆட்சி தமிழ்நாடு மீது திணிக்க முயிற்சிக்கிறது. தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்கமாக இந்த கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று மிரட்டுகிறார்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் பாடத்திட்டங்களில் “பாரதத்தின் பாரம்பரிய அறிவை முன்னிறுத்துதல்” என்ற பெயரில் மிக மோசமான பார்ப்பனிய கருத்துக்களை திணித்து வைத்துள்ளனர். இதற்காக பல்கலைக்கழக நிதி உதவிக்குழு வரைவு பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கான பட்டப் படிப்புகள் துவங்கப்பட இருக்கின்றன. இதில் மானுடவியல், வேதியியல், வணிகவியல், பொருளாதாரம், கணிதம் அரசியல், உள்ளிட்ட பாடங்களுக்கான பாடத்திட்டங்களின் வரைவை பல்கலைக்கழக மானியக்குழு உருவாக்கி சுற்றுக்கு விட்டுள்ளது.
குறிப்பாக கணிதப் பாடத்தில் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நல்ல நேரம், கெட்ட நேரம் காண்பது எப்படி? முகூர்த்த நேரம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? என்ற கருத்துக்கள் ‘கால கணனம்’ என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. நாரத புராணத்தில் கூறப்படும் கணித கருவிகள் குறித்தும், வேதங்களும் புராணங்கள் குறித்தும், பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர சித்தாந்தம், சூரிய யுகங்கள் குறித்த கால கணக்குகளும் பாடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
வேதியியல் பாடத்திட்டத்திற்கான வரைவு நகலில் சரஸ்வதி வந்தனம், ஆயுர்வேதம், சித்த வைத்தியம், ஹோமியோபதி மருந்து தயாரிப்புகள், நோய் தீர்க்கும் சமையல் முறை போன்ற பழமைவாத கருத்துக்களை இணைத்துள்ளனர். வணிகவியலில் சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் கருத்துகளும், பகவத் கீதை மற்றும் ராமாயணத்திலிருந்து நிர்வாகம் பற்றிய குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.
அரசியல் அறிவியல் பாடத்தில் வேதகால பாரம்பரியம்; மகாபாரதம்; மற்றும் உபநிடக் கருத்துக்களை சேர்த்ததோடு மட்டுமின்றி மனுநீதியும் சேர்க்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அறிவு என்ற பெயரில் அறிவியலோடு அறிவியலுக்கு எதிரான பார்ப்பனிய பிற்போக்கு கருத்துக்களை பாடத்திட்டத்தின் இணைப்பது தான் புதிய கல்வித் திட்டமாக இருக்கிறது.
புராணங்கள் வரலாறுகளாக கட்டமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார் கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வாளர் அமர்நாத். கீழடி குறித்து அவரது 982 பக்க ஆராய்ச்சி அறிக்கையை ஒன்றிய ஆட்சி வெளியிட மறுத்து வருகிறது. அந்த அறிக்கையில் கால அளவை மாற்றி அமைத்து திருத்தி எழுதித் தரவேண்டும் என்று தொல்பொருள் ஆய்வுத்துறை முன்வைத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார். மதுரையில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கீழடி தமிழர் பண்பாட்டை மகாபாரதத்துடன் இணைக்கும் ஒன்றிய ஆட்சியின் முயற்சியை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில சுற்றுச்சூழல் மாணவர்கள் கீழடியோடு மகாபாரதத்தை முடிச்சுப் போட்டு எழுதிய கட்டுக்கதையை அவசர அவசரமாக ஏன் ஒன்றிய ஆட்சி வெளியிட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். இப்படி வரலாறுகளில் கட்டுக் கதைகளை திணிக்க முடியும் ஆனால் தொல்லியல் ஆய்வுகளில் கட்டுக்கதைகளை திணிக்க முடியாது. கீழடி நாகரீகம் தொல்லியல் ஆய்வுகளால் நிறுவப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மகாபாரதத்துக்கும் கீழடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சரஸ்வதி என்ற நதி பற்றி வேதங்களில் குறிப்பிடப்படுகிறது, என்பதால் அதைக் கண்டறிவதற்கு பல கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால் கண்டறிய முடியவில்லை.
ஆளுநர் மாளிகையில் ஆர் என். ரவி ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நிகழ்ச்சியை கடந்த வாரம் நடத்தியுள்ளார். ரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகிகளால் உருவாக்கப்பட்டதே நமது பாரத கலாச்சாரம் என்று அவர் தம்பட்டம் அடித்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி பிராந்திய கலாச்சாரங்கள் பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கே மிகவும் சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று பேசி மாநில அடையாளங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தையே அவர் அவமதித்து இருக்கிறார். அறிவியல் வளர்ச்சிப் போக்கில் செத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்திற்கு உயிரூட்டும் முயற்சிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என்பதற்கு இவைகள் சான்றுகளாக இருக்கின்றன. வரலாறு மற்றும் அறிவியல் அயுதங்களால் இந்த சதிகளை முறியடிப்போம்.
பெரியார் முழக்கம் இதழ் 25092025
