பெண்ணுரிமைக்கான உரையாடல்கள் பெருகட்டும்!

பழம்பெரும் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சன் (அமிதாப் பச்சனின் மனைவி) சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “தனது பேத்தி நவ்யா நவேலி நந்தாவுக்கு விரைவில் 28 வயதாகப்போகிறது. அவர் திருமண வாழ்வில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் என்பது காலாவதியான நடைமுறை. இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு என்னுடைய வயதும் இல்லை. இப்போதைய குழந்தைகள் நம்மை விட மிகவும் புத்திசாலிகள். திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் மட்டுமே ஒரு உறவைத் தீர்மானிக்காது. வாழ்க்கையைச் சிக்கலாக்கி கொள்ளாமல், அப்படியே அனுபவித்துக் கொண்டாடுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

இது ஏதோ தனி நபரின் கருத்து என்ற அளவில் சுருக்கிப் பார்க்க வேண்டியதல்ல. பெண்களின் உளவியல் போக்கும் ஏற்படும் பண்பு மாற்றமாக இப்பேச்சை கருத வேண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளில் இந்த கருத்தாக்கம் பொதுச்சமூகமாக உளவியலாகவே மாறியிருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்காவில் 2030-ஆம் ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ளாமல், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தனித்து வாழக்கூடிய பெண்கள் 50 விழுக்காடாக அதிகரித்து விடுவார்கள் என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனம் கணித்திருக்கிறது. படித்து, வேலைக்குச் செல்லும் இளம்பெண்களுக்கு அவர்களுடைய வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கு திருமணம் பெரும் தடையாக இருக்கிறது, குழந்தை பெற்றுக்கொள்வது தங்கள் வாழ்க்கையையே முடக்கிவிடுகிறது என்ற எண்ணம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல, கல்வியில்- வேலைவாய்ப்பில் பெண்கள் முன்னேறி வரும் பல நாடுகளிலும் இத்தகைய சிந்தனைகள் வேர்விடத் தொடங்கியிருக்கின்றன. காரணம், உலகம் முழுவதுமே குடும்ப அமைப்பு முறை என்பது ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஆயுதமாகவும், குழந்தை பெற்றுக்கொண்டு பராமரிப்பது பெண்களின் முழுநேர கடமையாகவுமே இருக்கிறது. குடும்பக் கட்டமைப்புக்குள் சமத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் அனைத்து மதங்களிலும் விதியாகவே இருக்கிறது. வீட்டு வேலைகளிலும், குழந்தைகளை பராமரிப்பதிலும் ஆண்களுக்கு பங்கே இல்லாமல் இருப்பதும், குடும்ப வேலைகளை சரிசமமாகப் பிரித்துக்கொள்ள மறுப்பதும் பெண்களிடத்தில் திருமண எண்ணத்தை கைவிடச் செய்து, குடும்ப அமைப்புகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் வாழ வேண்டுமென்ற சிந்தனைகளை ஏற்படுத்தி வருகிறது.

இது பெரியார் விதைத்த பெண்ணுரிமைச் சிந்தனை. ‘மனித சமுதாயம் மக்களுடன் கூடி வாழுகிற சமுதாயமே தவிர ஆளுக்கொரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு போய் வீட்டில் பூட்டி அடைத்து வைத்துக் கொள்கிற சமுதாயமல்ல என்கிற உணர்ச்சி பெண்களுக்கு இருக்க வேண்டும்’ என்ற பெரியாரின் கருத்துக்கள் இப்போது மக்கள்மயமாகி வருகின்றன என்பதன் வெளிப்பாடாகவே ஜெயா பச்சனின் கருத்தையும், மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வாகவும் பார்க்க வேண்டியுள்ளது. கல்வியும் பொருளாதார தன்னிறைவும்தான் பெண்களுக்கு இந்த உரிமைச் சிந்தனையை விதைக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த ஆரோக்கியமான பண்பு மாற்றம் இந்தியப் பெண்களிடத்தில் முழுமையாகக் கடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஏனெனில் இந்தியாவில் இன்றைக்கும் திருமணம் என்பது பிறந்த வீட்டில் இருந்து பெண்களைப் பிரித்து, வேறொரு வீட்டில் இணைத்து அடிமைப்படுத்துவதற்கான நாளாகவே அடையாளம் பெறுகிறது. திருமணத்திற்காக வழக்கத்தில் இருக்கிற சடங்குகள் அனைத்தும் கொண்டாட்டமாக இருப்பதில்லை, பெண்களை மனதளவில் பலவீனப்படுத்துவதற்கான வழிமுறைகளாகவே உள்ளன. குறிப்பாக, திருமணம் ஆன பெண்கள் தாலி அணிந்துகொள்ள வேண்டுமென்பது கட்டாயம். ஒரு ஆண் எத்தனை ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் தாலி கட்டிவிட்டால், அவனை தெய்வமாக தொழ வேண்டும் என்கிற புனிதப்பிம்பம் தாலியின் ஊடாக விதைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய ஆண்களிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு, தாலியை கழற்றிவிடலாம் என்ற சட்ட பாதுகாப்பு இருந்தாலும் கூட, இந்திய ஜாதிய சமூக அமைப்பு அவ்வளவு எளிதாக பெண்களை விட்டுவதில்லை.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022-ஆம் ஆண்டு தரவுகளின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 31.4 விழுக்காடு ‘குடும்ப வன்முறை’தான் காரணமாக இருக்கிறது. ஒரு ஆண் தாலி கட்டிவிட்டான் என்பதே இந்த குடும்ப வன்முறைகளை பெண்கள் சகித்துக்கொண்டு வாழ்வதற்கான காரணியாக இருக்கிறது. இந்த வன்முறைகளில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கும், கல்வி- பொருளாதாரத்தில் தங்களை வளப்படுத்திக்கொள்ளவும் குடும்ப அமைப்புகளில் இருந்து பெண்கள் வெளியேறுவது ஒன்றே எளிதான வழியாக இருக்கிறது. அந்த வழியை துணிச்சலாக வெளிப்படுத்தும் குரலாக ஜெயா பச்சனின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது. திருமணத்தை விட, குடும்ப அமைப்புகளை விட, மற்றெந்த புனிதக் கற்பிதங்களை விட பெண்களின் சுயமரியாதையும், தன்னிறைவான வாழ்க்கையுமே அவசியமானது. அதை அடைவதற்கான உரையாடல்கள் பெருகட்டும்!
பெரியார் முழக்கம் இதழ் 04122025

You may also like...