உலகமயமாகிறார் பெரியார்
நான் ஒரு சுதந்திர மனிதன்; எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன்.
-பெரியார்
வரலாற்றுப் பெருமை கொண்ட இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும் பெரியார் படத்திறப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வரலாற்றுப் பெருமை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
உலகில் உள்ள மற்ற சமுதாயத்தைப் போல் மானமும் அறிவும் கொண்ட சமுதாயமாக மாற்றி அமைப்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார் பெரியார். அவரது சமுதாயப் பார்வை உலக சமுதாயத்தின் வளர்ச்சி பாதையை நோக்கி இருந்தது. ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ரஷ்யாவிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்தார் பெரியார், பார்ப்பனிய வர்ணாசிரம ஒடுக்குமுறை அந்த நாடுகளில் இல்லை. குறிப்பாக சோவியத் நாடு அவரை மிகவும் ஈர்த்தது. சோவியத் குடிமகனாகும் வாய்ப்பு இருந்தால் அதற்கும் தயாராக இருந்ததாகவே பெரியார் கூறியிருக்கிறார்.
பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் அதன் கொள்கைகளான கடவுள், மதம், பெண்ணடிமை, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அணி திரட்டி சமூக மாற்றத்தை நோக்கி நகர்த்தியது. இது பெரியார் மேற்கொண்ட தனித்துவமான நடைமுறை. ஆய்வாளர்கள் இதைப் பற்றி இப்போது விவாதித்து வருகிறார்கள். பெரியாரின் தேசியம், மத மறுப்பு மற்றும் பெண்விடுதலை சிந்தனைகள் உலகு தழுவிய பார்வையாக உயர்ந்து நிற்கிறது.
நாட்டின் எல்லைகளுக்காகவும் கற்பிக்கப்பட்ட மதங்களுக்காகவும் நாடுகள் இப்போது போராடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. பாலஸ்தீனர்களை இஸ்ரேல் யூதர்கள் இனப்படுகொலை செய்கிறார்கள், ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
உலகமயமாக்கல் என்ற கொள்கை வந்த பிறகு தேசங்களில் தன்னாட்சி கட்டமைப்புகள் சிதைந்து வருகின்றன. வணிகத்துக்கும் அணு ஆயுதங்கள் தடைக்கும், சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கும் நாடுகள் தங்களுக்குள் உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொண்டு, ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கும் கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. சர்வதேச வலைப்பின்னலில் இருந்து எந்த ஒரு நாடும் துண்டித்துக் கொள்ள முடியாது. அதனால் தேசம், தேசபக்தி என்ற கற்பிதங்கள் கேள்விக்குறியாகி வருகின்றன.
திருப்பூரின் பொருளாதரத்தை அமெரிக்கா சீர்குலைக்க முடியும் என்றால் தேசியத்தின் ஒருமைப்பாடு சமரசத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. வளர்ச்சி நோக்கிய மானுடப் பற்றைத் தவிர வேறு எந்த பற்றும் இல்லை என்றார் பெரியார்.
மக்களை சமத்துவப்படுத்தாத தேசியங்களை எல்லைகளுக்காகவே ஏற்க வேண்டும் என்பதை பெரியார் மறுத்தார். தேசபக்தி நாடகத்தில் ஒப்பனை போட அவர் தயாராக இல்லை. இதுகுறித்து மறைந்த திராவிட இயக்க ஆய்வாளர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் இவ்வாறு கூறுகிறார்.
“பெரியார் தன்னுடைய தேசியத் தேடலைப் பழமையிலிருந்து விடுத்து எதிர்காலத்தில் நிலைகொள்ள வைத்தார். பகுத்தறிவு, அறிவியல், மனித விடுதலையில் நம்பிக்கை, போராட்டம் மூலம் முன்னேற்றம், வரலாறு என்பனவற்றின் அடிப்படையில் புதுயுகத்துக்கான புறநிலை விளக்கம் தந்து தாம் காணவிரும்பிய எதிர்காலம் நோக்கிப் பயணித்தார்.”
தேசியத்தைப் போலவே பெரியார் மதத்தை எதிர்த்த கருத்துக்கள் இன்று உலகத்தின் தேவையாகியிருக்கிறது. உலகில் தற்போது பல நாடுகளில் மத மற்றும் இன மோதல்கள் வெடித்து உள்ளன,
ஆப்பிரிக்கா நைஜீரியா, மொசாம்பிக், மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் மத அடிப்படையிலான கடுமையான தாக்குதல்கள் குறிப்பாக கிருத்துவ மற்றும் இசுலாமிய இனக்குழுக்களுக்கு எதிராக நடந்துள்ளன. மொசாம்பிக் நாட்டில் 2024ல் ஐ.எஸ்.எம். என்ற அமைப்பு பல தேவாலயங்களை அழித்ததாக கூறியிருக்கிறது.
நாடுகள் போர்களை நடத்தும் போது சொந்த நாட்டு மக்களே அரசுகளை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடுவதை பார்க்க முடிகிறது. அமெரிக்காவின் வரி விதிப்புகளை எதிர்த்து அமெரிக்கர்களும், இஸ்ரேல் இனப்படுகொலையை எதிர்த்து இஸ்ரேலியமக்களும் வீதியில் வந்து போராடுகிறார்கள். ஆட்சிகளுக்கு எதிராக மக்களை அணி திரட்டிய பெரியாரின் சுயமரியாதை இயக்க அணுகுமுறைகளாகவே இதை பார்க்க முடிகிறது.
அடுத்து பெரியார் பேசிய பெண் விடுதலை இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. திருமணங்களே வேண்டாம் என்பது பெரியாரின் கருத்து. பெண்கள் திருமண அமைப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுதல், சுதந்திரமான வாழ்க்கையை வாழுதல், மதக் குறியீடுகளை எதிர்த்தல் என்ற போக்கு உலகில் பரவிவருகிறது. திருமண அமைப்புகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணைந்து வாழ்தல் என்ற வாழ்க்கை முறையை ஏற்பவர்களும், குழந்தைகள் வேண்டாம் என்ற இயக்கங்களும் உலகம் முழுதும் அதிகரித்து வருகின்றன.இவையெல்லாம் பெரியார் பேசிய பெண்விடுதலை கருத்துக்கள். பெரியார் பேசிய பெண் விடுதலை அவர்களின் சுயமரியாதையோடு இணைந்து சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கி வருகின்றன. பெரியாருடைய கருத்துகள் உலகமயமாகி வருகின்றன என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள் எழுந்து நிற்கின்றன.
