ஓட்டுத் திருட்டுகள்

“தேர்தல் ஜனநாயகத்தின் முதலாளிகள் வாக்காளர்கள்” என்று சொல்லப்படுவது உண்டு. இப்போது வாக்காளர்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டுவிட்டது. இதுதான் ‘ இந்துத்துவ ஜனநாயகம்’.

தேர்தல் ஆணையம் நடத்திய ‘ஓட்டுத் திருட்டுகளை’ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று அந்த எந்திரத்தை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற பொறியாளரே அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார். இப்போது ராகுல் காந்தி தேர்தல் ஆணையமே போலி வாக்காளர்களை உருவாக்கி மோசடி செய்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் மகாதேவபுரா என்ற சட்டசபை தொகுதியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதில் நடந்துள்ள போலி வாக்காளர் மோசடிகளை ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

தேர்தல் ஆணையம் தொடர்ந்து மோசடிகளை செய்து வருகிறது.

மகாராஷ்டிராவில் 2024 ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தலில் இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை அடுத்த 9 மாதங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 40 லட்சம் அதிகரித்துவிட்டது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் வழக்கமான திருத்தங்களுக்கு மாற்றாக ‘சிறப்புத் தீவிர சீர்திருத்தம்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்கும் மரபுகளை புறந்தள்ளி இந்த சீர்திருத்தத்தை கொண்டு வந்து 65 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறது.

வாக்குரிமையை குடியுரிமையாக மாற்றினார்கள்; ஒரு வாக்காளர் தனது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று இதுவரை எந்த தேர்தல் ஆணையமும் கூறியது இல்லை. ஜூலை மாதத்தில் எதிர்க்கட்சித் தலைவரிடம் கலந்து பேசிய தேர்தல் ஆணையம், பீகாரில் 20 சதவீத போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றும் அதை கண்டறிய வேண்டும் என்றும் கூறியது. வழக்கமான நடைமுறையில் இந்த போலி வாக்காளர்களை கண்டறியும் பணிகள் நடந்து கொண்டிருந்த போதே அது முடிவுறாத நிலையில் திடீரென்று ‘ சிறப்புத் தீவிர சீர்திருத்தம்’ என்ற திட்டத்தை அறிவிக்கிறார்கள். இது திட்டமிட்டு ஏற்கனவே உள்நோக்கத்துடன் எடுத்த ஒரு முடிவு.

ஆதார், உணவு விநியோக அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வேறு 11 அடையாள அட்டைகளைதான் ஆவணங்களாகத் தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வற்புறுத்துகிறது.

பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் வாழும் மக்கள் இந்த சான்றுகளை சமர்ப்பிக்கவே முடியாது என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?

2003-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தின் விதிகளில் கூட குடியுரிமைகளுக்கான சான்றுகள் வேண்டும் என்ற விதிகள் இல்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது ஒரு பரிந்துரையை நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியது. வாக்காளர் அடையாள அட்டை, உணவுப் பொருள் வழங்குவதற்கான அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை ஆவணங்களாக சேர்த்துக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது.

வாக்குப்பதிவின்போது எடுக்கப்படும் வீடியோக்களை அடுத்த சில வாரங்களிலேயே அழித்துவிட வேண்டும் என்று அண்மையில் தேர்தல் தேர்தல் ஆணையம் விதிகளை மாற்றி அமைத்தது. வாக்களித்தவர்களின் பட்டியலை கேட்கும்போது டிஜிட்டல் பதிவுகளை தர மறுக்கிறது தேர்தல் ஆணையம். ராகுல் காந்தி கேட்ட டிஜிட்டல் வாக்குப்பதிவு தரவுகளை தர மறுத்து காகிதப் பட்டியலை 7அடி உயரத்திற்கு தேர்தல் ஆணையம் அள்ளிக் கொடுத்தது. எதையும் ஆராய்ந்து விடக்கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக இருந்தது. ஆனாலும் ஒவ்வொன்றாக இதை ஆராய்ந்து 6 மாத காலம் ராகுல் காந்தியின் குழு இந்த மோசடிகளை இப்போது வெளிச்சப்படுத்தி இருக்கிறது.

இப்போது நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ள மனு தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. பீகாரில் நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளரின் பெயர்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை; அதற்கு எந்த சட்ட விதியும் இல்லை என்கிறது தேர்தல் ஆணையம். இது ராகுல் காந்தி கேட்கும் கேள்வி மட்டும் அல்ல; ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமை பெற்ற அனைத்து வாக்காளர்களும் கேட்கும் கேள்வியாகும்.

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையமே ஜனநாயக வழிமுறைகளை பின்பற்ற மறுப்பது மிகப்பெரும் அவமானம்!

இந்துத்துவ ஜனநாயகம் சம உரிமைகளைப் பறிக்கிறது, இந்துத்துவ தேர்தல் ஆணையம் அதற்கு ஏற்ற வகையில் மோசடி தேர்தலுக்கு வழி அமைத்துத் தருகிறது. பொதுவெளிக்கு விவாதம் வந்தபிறகு ஒளிவுமறைவின்றி தெளிவுபடுத்துவது ஆணையத்தின் கடமை.
பெரியார்முழக்கம்இதழ்14082025

You may also like...