தலையங்கம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் நிறைவேறுமா?
மத்திய அரசுக்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மூன்றாக வகைப்படுத்தும் பரிந்துரையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசிடம் அளித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜாதிகளுக்கிடையே முன்னேறிய ஜாதியினர், பின்தங்கிய நிலையில் உள்ள ஜாதியினருக்கான வாய்ப்புகளைப் பறித்து விடுவதால் அனைத்து ஜாதியினருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் நோக்கம் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறுகிறது. ஜாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, அனைத்துப் பிரிவினருக்கும் சமத்துவம் வழங்குவதே இடஒதுக்கீட்டின் நோக்கம். எனவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் மிகச் சரியானது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால், சமூகநீதிக்கு ‘நந்தி’களாக நிற்கும் உச்சநீதிமன்றங்களும், பார்ப்பன அதிகார வர்க்கமும் உண்மையில் சமத்துவத்தை நோக்கி, இத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிப்பார்களா என்ற நியாயமான சந்தேகம் எழவே செய்கிறது. முதலில், மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் 7 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரங்கள்...