ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’
ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூரில், இந்திய வரைபடம் மாட்டப்பட வில்லை. அங்கே மாட்டப்பட்டிருப்பது, ‘அகண்ட பாரதத்தின்’ வரைபடம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை ஒரே தேசமாக சித்தரிக்கிறது, அந்த வரைபடம்.
இந்தியாவின் பிரதமர் மோடி மேற்கொண்ட திடீர் பாகிஸ்தான் பயணத்தின்போது உலகப் புகழ் பெற்ற அல் அஜிரா தொலைக்காட்சி, பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான இராம் மாதவ் என்ற பார்ப்பனரின் பேட்டியை ஒளி பரப்பியது. ‘பாகிஸ்தான் நாட்டுக்கு இறையாண்மை கிடையாது. அது இந்தியாவின் பகுதி’ என்று கூறி, அகண்ட பாரதத்தை நியாயப் படுத்தினார் இராம் மாதவ். ‘அகண்ட பாரத்’ என்ற ‘பாரத் வர்ஷா’ – கற்பனை உணர்வு அல்ல. இந்தியாவின் எல்லைகள் ‘பாரத் வர்ஷாவாக’ விரிவடைய வேண்டும் என்பதே தங்களின் இலட்சியம் என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். (இந்தியாவில் ‘தேசிய’ ஏடுகள் எதுவும் இந்த பேட்டிச் செய்தியை வெளியிடவில்லை)
இந்து ‘பாரத் வர்ஷா’ கொள்கையை 1934இல் வி.டி. சாவர்க்கர் முன் வைத்தார். அதற்கு அவர் சூட்டிய பெயர் ‘இந்துத்துவா’ தனது ‘இந்துத்துவா’ நூலில் சாவர்க்கர் இவ்வாறு கூறுகிறார். “இந்துக்களாகிய நாம் ‘இராஷ்டிரத்துக்கு’ மட்டும் உரிமையுள்ளவர்கள் அல்ல. ஒரே இனத்தவர்கள். தேசமும் இனமுமாக இணைந்து நிற்கும் நம்மை பிணைத்து வைத்திருப்பது ‘சமஸ்கிருதி’ என்ற பண்பாடு. இந்தப் பண்பாட்டை நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமஸ்கிருதத்திலிருந்து பெறுகிறோம். அதுவே நமது இனத்துக்கான தாய்மொழி” என்று எழுதுகிறார். சாவர்க்கர் முன்மொழிந்த ‘இந்துத்துவா’ பார்ப்பன தேசம்தான் என்பதை அவரே ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகிறார். ‘இந்த அகண்ட பாரத’ தேசத்தின் குடிமக்களாக அதாவது சமஸ்கிருத பண்பாட்டை ஏற்றுக் கொண்டு பாகிஸ்தானும் பங்களாதேசும், ஆப்கானிஸ்தானும் வர வேண்டுமாம்!
தேசியவாதி என்றால் யார்? இதற்கு சவர்க்கார் தரும் விளக்கம்: “இந்த தேசத்தை பித்ருபூமி (தந்தை நாடு), ‘புண்ணிய பூமி’ (முதன்மை வழிபாட்டுத் தலங்கள்) இதை ஏற்பவர்களே தேசியவாதிகள்” என்கிறார்.
சாவர்க்கருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ‘தத்துவத்தை’ உருவாக்கிய கோல்வாக்கரும் இதையே வழி மொழிந்தார். 1939ஆம் ஆண்டி லிருந்து 1973 வரை அவர் தொடர்ந்து வலியுறுத்தி யது பார்ப்பனர்களுக்கான ‘அகண்ட பாரதம்’ கொள்கையைத்தான். தேசத்தின் எதிரிகளாக அவர் 3 பிரிவினரை வரையறுத்தார். அவர்கள், முஸ்லீம், கிறிஸ்தவர், கம்யூனிஸ்ட். இப்போது ஆர்.எஸ்.எஸ். இத்துடன் வேறு இரண்டு எதிரி களை இணைத்திருக்கிறது. மெக்காலேயிஸ்ட், மெட்டிரியலிஸ்ட் (கடவுள், மதங்களை மறுக்கும் இயக்கவியல் தத்துவத்தை ஏற்பவர்கள்). இந்த
5 பேரில் மிகக் கடுமையான எதிரிகள் ‘மெட் டிரியலிஸ்ட்’ தான் என்கிறது, ஆர்.எஸ்.எஸ்.
“கடவுளை மறுத்தவர்களும் இந்து மதத்தில் இருந்துள்ளனர். தீண்டாமைக்கு நாங்கள் எதிரானவர்கள். மோடியே ஒரு பிற்படுத்தப் பட்டவர்தான். அம்பேத்கரை நாங்கள் மதிப்பவர்கள்” என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இப்போது பேசித் திரிகிறார்கள். சமஸ்கிருதப் பண்பாட்டைக் கொண்ட ‘அகண்ட பாரதத்தில்’ இவைகளுக்கு எல்லாம் இட மிருக்கிறதா என்பதற்கு, இவர்கள் முதலில் பதில் சொல்லட்டும்.
பெரியார் முழக்கம் 21012016 இதழ்