வினா… விடை…!

உயர்நீதிமன்றத்தின் 1200 நீதிபதிகளில் பட்டியல் இனப் பிரிவினர் 18 பேர் மட்டுமே. – செய்தி
இந்த 18 பேர் எப்படி வர முடிந்தது என்பதை கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனைப் போடாமல் இருந்தால் சரி.

பழ. கருப்பையா அ.இ.அ.தி.மு.க.விலிருந்து நீக்கம். – செய்தி
அந்த கட்சி வரலாற்றில் முதுகெலும்போடு எதிர்ப்புக் குரல் கொடுத்து அதற்காகவே நீக்கப்பட்ட முதல் மனிதர். எனவே இது ‘சாதா’ நீக்கமல்ல; ‘புரட்சி’ நீக்கம்!

‘கும்பகோணம்’ என்ற சொல்லுக்கு ‘ஏமாற்றுதல்’, ‘மோசடி’ என்று 19ஆம் நூற்றாண்டு ஆங்கில அகராதியில் கூறப்பட்டிருந்தது. – ‘தமிழ் இந்து’ செய்தி
‘கும்பகோணம்’ மடத்தை ஆதிசங்கரர் மடம் என்று சங்கராச்சாரி ஏமாற்றியதால் அப்படி ஒரு அர்த்தம் வந்தது என்பதே அர்த்தத்துக்குள் அடங்கியுள்ள அர்த்தம் என அறிக!

நடிகை ஹேமமாலினி நாட்டியப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.70,000-த்துக்கு மகாராஷ்டிர பா.ஜ.க. அ ரசு வழங்கியது. – செய்தி
இது ரொம்பப் பழசு. எங்க நாட்டுல கலைஞர் ஆட்சியில் நாட்டியப் பள்ளி நடத்த பத்மா சுப்ரமணியத்துக்கு இலவசமாகவே இடம் வழங்கியிருக்காங்க!

காந்தி நினைவு நாளில் கோவா பா.ஜ.க. ஆட்சி, கோட்சே வரலாற்று நூல் வெளியிட அனுமதி. – செய்தி
கோட்சே ‘வீரசாகச’ நாளில் காந்திக்கு நினைவு நாள் நடத்துவது தாங்க குற்றம்!

‘சமஸ்கிருதத்தை’ சான்ஸ்கிரிட் என்று ஆங்கில அகராதி கூறுவது தவறு; ‘சாம்ஸ்கிரிட்’ என்று மாற்ற மத்திய அரசு முடிவு. – செய்தி
பேசாம ‘சமாதிஸ்கிரிட்’ன்னு மாத்திடுங்க; பொருத்தமா இருக்கும்!

பெரியார் முழக்கம் 04022016 இதழ்

You may also like...