பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!
பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்?
‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்!
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு
மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான கதவுகளை திறந்துவிட மறுக்கின்றன.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான எண்ணிக்கையில் பாதி கூட நிரப்பப்படாத நிலையில் கிரீமிலேயர் என்ற பொருளாதார வரம்பைப் பயன்படுத்தி பிற்படுத்தப்பட்டோர் வாய்ப்புகளை பறிப்பது அப்பட்டமான சமூக அநீதியாகும். இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட திரு. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் நாடாளுமன்றக்குழுவின் அறிக்கை – கிரீமிலேயரை நீக்கம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியும் நடுவண் அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போட்டு வருகிறது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே இது குறித்த விழிப்புணர்வை உருவாக்கி உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுப்பதன் வழியாகவே – நடுவண் பார்ப்பன ஆட்சியை செயல்பட வைக்கவியலும் என்பதால் சமூகநீதியாளர்களை ஒன்றுதிரட்டி – ஒடுக்கப்பட் டோர் உரிமைப் போருக்கு அணியமாக்க சமூக நீதிக்கான மாநாடு ஒன்றை நடத்தவும் – இடஒதுக்கீட்டு உரிமைகள் எப்படிப் பறிக்கப் பட்டு வருகின்றன என்பதை விளக்கிடும் வெளியீடுகளைக் கொண்டு வந்து மக்களிடையே பரப்பவும் இந்த செயலவை முடிவு செய்கிறது.
அரசியல் சட்டத்துக்கு எதிரான ஆகமங்கள்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு கடந்த கால திமுக ஆட்சியில் பிறப்பித்த அரசு ஆணை – அதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் – ஆகியவற்றுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கியிருக்கும் தீர்ப்பு ‘அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம்’ என்ற நிலையையே உறுதிப் படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கோயில்களில் எந்தெந்த ஆகமங்கள் – எந்தந்த நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறதோ, அதே நிலை தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆகமத்தின்படி – ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே குறிப்பிட்ட கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற வழிபாட்டு முறையைப் பின்பற்றுவது தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என்றும் அது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திர உரிமையே யாகும் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
பார்ப்பனர்கள் மட்டுமே ஆகம கோயில்களில் அர்ச்சகர் ஆகமுடியும் என்ற பார்ப்பன ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப் பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபிறகு – சமத்துவ உரிமைகளுக்கு எதிரான எந்த வழிபாட்டு முறையும் ஏற்கத் தக்கது அல்ல என்று ‘ஆதித்யன் எதிர் கேரள தேவஸ்வம் போர்டு’ வழக்கில் 2002ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் இப்போது உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது; இந்த பின்னணியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே அர்ச்சகராக முடியும் என்று ஆகமங்கள் கூறவில்லை என்று சீர்திருத்த சிந்தனை கொண்ட பார்ப்பனரல்லாத ஆகம பண்டிதர்கள் அதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டினாலும் நடைமுறையில் பார்ப்பனர்களின் பல்வேறு ஜாதிப் பிரிவினர் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற நிலையே தொடர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசுகளால் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராஜன் குழு, நீதிபதி டாக்டர். ஏ கே ராஜன் கமிட்டி இரண்டுமே ஆகமங்கள் பற்றிய பல்வேறு முரண்பாடுகள் – குழப்பங்கள்; இப்போது – வழிபாட்டு முறைகளில் பின்பற்றப்படும் ஆகம மீறல்களை ஆதாரங்களோடு தங்களது அறிக்கைகளில் பதிவு செய்திருந்தாலும், இவற்றைக் கவனத்தில் கொண்டு மாற்றங்களை கொண்டு வரமுடியாத நிலையை உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதியாக்கி விட்டது.
இந்த நிலையில் அரசியல் சட்டத்தையும் மீறி – அரசியல் சட்டத்தையே அடங்கிப் போகச் செய்யும் அதிகாரமிக்க ஆகம வழிபாட்டு முறைகள் – தேவைதானா என்ற கேள்வியை எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆகம விதிப்படி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை இருக்கிறது என்ற இயக்கங்களை இனியும் நடத்திக் கொண் டிருக்காமல் – தீண்டாமையும் சூத்திர இழிவையும் உறுதிப்படுத்தும் ஆகமங்களுக்கு எதிரான இயக்கத்தை நடத்துவதே – சுயமரியாதையுள்ள பார்ப்பனரல்லாத மக்களின் இழிவு ஒழிப்புக் குரலாக இருக்கமுடியும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது. ‘மனுசா°திரத்தின்’ மறுவடிவமாக இப்போது விளங்கிக் கொண்டிருக்கும் ஆகமங்களுக்கு எதிரான தொடர் பரப்புரை இயக்கங்களை நடத்துவது என்று இந்த செயலவை முடிவு செய்கிறது; ஆத்திக – நாத்திக கருத்துகளைத் தாண்டி – சமுதாய இழிவு ஒழிப்பு என்ற கண்ணோட்டத்தில் சுயமரியாதையுள்ள தமிழர்கள் பார்ப்பனியத்துக்கு எதிரான இந்த சுயமரியாதை போராட்டத்தில் பங்கேற்க முன்வரவேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அறைகூவி அழைக்கிறது.
ஜாதி வெறிதான் தமிழர் பண்பாடா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனமான அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் மாணவர் கழகத்தை உருவாக்கி மனித உரிமை – மதவெறி எதிர்ப்பு – சமூகநீதிக் கருத்துகளை சக மாணவர்களிடம் பரப்பிய 5 தலித் மாணவர்களை ‘ஜாதியவாதிகள் – பயங்கரவாதிகள் – தேச விரோதிகள்’ என்று குற்றம் சாட்டிய இரண்டு மத்திய அமைச்சர்கள் தூண்டுதலால் – துணைவேந்தர் அவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியதோடு விடுதியை விட்டு வெளியேற்றி – சமூகப் புறக்கணிப்பை அரங்கேற்றியுள்ளார். இந்த சமூக அவமதிப்பைச் சகிக்க முடியாத – உள்ளம் உடைந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் விடுதியிலேயே தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு தூண்டப்பட்டுள்ளார்.
‘என்னுடைய பிறப்பு ஒரு மோசமான விபத்து’ என்று மரண சாசனமாக எழுதிய கவித்துவமான இறுதி கடிதத்தில் கல்வெட்டாக பதித்துச் சென்றிருக்கிறார். பிறப்போடு பிரிக்க முடியாமல் ஜாதி எனும் கைவிலங்கை – ஒவ்வொரு தலித்தையும் சுமக்க வைத்திருக்கிறது இந்த பார்ப்பன ஜாதிய சமூக அமைப்பு.. அதனால்தான் பிணமானபிறகும் தீண்டப்படாதவர்கள் பிணத்தை ஜாதி வெறியர்கள் – தங்கள் வீதிகளின் வழியே (வேறு பாதை இல்லாத நிலையிலும்) தூக்கிப் போக அனுமதி மறுக்கிறார்கள். உயர்நீதிமன்ற ஆணையையும் மதிக்காமல் நாகை மாவட்டம் வழுவூர் கிராமத்தில் தலித் முதியவரின் பிணத்தை கொண்டு செல்ல விடாமல் தமிழக காவல்துறையே தடுத்திருக்கிறது; உயர்கல்வி நிறுவனத்திலிருந்து உள்ளூர் கிராமம் வரை ‘ஜாதிய – தீண்டாமை’ தலைவிரித்தாடும் ஒரு நாட்டை சுதந்திர நாடு என்றோ – இந்த சமூகத்தை – நாகரீகமுள்ள சிவில் சமூகம் என்றோ கூறுவதற்கான தார்மீக உரிமையே இல்லை.
தமிழர் வீரம் – தமிழர் பண்பாட்டுப் பெருமைகளில் மூழ்கி பெருமிதம் கொள்ளத் துடிக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் – இந்த ஜாதி – தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டும் காணாமல் புறந்தள்ளிப் போவதுதான் தமிழர் பண்பாடா என்ற கேள்வியைக் கவலையுடன் – திராவிடர் விடுதலைக் கழகம் முன்வைக்கிறது. சமூக மாற்றத்திற்கும் சமூக விடுதலைக்கும் போராடும் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொருவரும் ஜாதி – தீண்டாமை எதிர்ப்பை தங்கள் செயல் திட்டமாக வகுத்துக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது.
ஆர்ப்பாட்டம்
உயர்கல்வி நிறுவனங்களில் – மத்திய அரசின் உயர்பதவிகளில் – தலித் மற்றும் விளிம்புநிலை சமுதாயத்தினர் எட்டிப் பிடிக்க முடியாமல் முடக்கிவரும் – பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும் – ‘ரோகித் வெமுலா’ வின் மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுதும் வாய்ப்புள்ள பகுதிகளில் 1-2-2016 அன்று, ஒத்த கருத்துள்ள சக்திகளை உடன் இணைத்து கொண்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் – மறுக்கப்படும் உரிமைகள் இழைக்கப் படும் அவமானங்களை துண்டறிக்கைகள் வழியாக மக்களிடம் பரப்பவும் இந்த செயலவை முடிவு செய்கிறது.
• பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்?
• ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்!
• ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்!
என்ற தலைப்பில் பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்ட தலைநகரிலும் வாய்ப்புள்ள பகுதிகளிலும் நடத்த முடிவு செய்கிறது.
7 தமிழர்களை விடுதலை செய்க!
இராஜிவ் கொலை வழக்கில் கால்நூற்றாண்டு காலமாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்கள் சிறையில் வாடுகிறார்கள். எந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளன் தண்டிக்கப்பட்டாரோ அந்த வாக்குமூலமே – தவறாக பதிவு செய்யப்பட்டதாக – விசாரணை அதிகாரியே ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ள கொள்கையின் அடிப்படையில் நீண்ட காலமாக சிறையில் அடைப்பட்டுள்ள கைதிகளை தனக்கு தனக்கு அரசியல் சட்டத்தின் 161ஆம் பிரிவின்படி வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முன்வரவேண்டுமென்று தமிழக அரசை இந்த செயலவை கேட்டுக் கொள்கிறது.
இந்த 7 தமிழர்கள் மட்டுமின்றி சிறையில் நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகளையும் குறிப்பாக தொடர்ந்து விடுதலை வாய்ப்பு மறுக்கப்பட்டுவரும் ‘இ°லாமிய சிறைவாசிகளை’யும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்ய முன்வரவேண்டும் என தமிழக அரசை இச்செயலவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது
பெரியார் முழக்கம் 28012016 இதழ்