பிப்.14 உலக காதலர் நாள் உயர்ந்த காதல் எது?

உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து.
“உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” – குடிஅரசு 21.7.45
நண்பர்களாகப் பழகி புரியுங்கள்!
“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரை யொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக் கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-இஷ்டம்.”
– விடுதலை 24.5.47
¨ அறிவார்ந்த காதல் என்பது ஒருவரையொருவர் புரிந்துணர்ந்த காதல்!
¨ அது – ஜாதி மதங்களைக் கடந்த காதல்!
¨ அது – இலட்சிய வாழ்க்கையை நோக்கி நடைபோடச் செய்யும் காதல்!
¨ பெண் – ஆண் சமத்துவத்தைப் பேணிப் போற்றும் காதல்!
¨ இளம் பருவ உணர்வலைகளில் உந்தி நிற்கும் ‘விடலைப் பருவ’ காதல் வேண்டாம்; அறிவார்ந்த காதல் செழிக்கட்டும்!
¨ அது ஜாதி ஒழிப்புக்கு வழி வகுக்கட்டும்!
காதலர் தின வாழ்த்துக்கள்!
– திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 11022016 இதழ்

You may also like...