சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது
திராவிடர் விடுதலைக்கழக தலைமைக் குழு 7.1.2016 அன்று காலை 11 மணியளவில் சென்னை கழக தலைமையகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை, கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் குறித்த மீளாய்வு, 27 சதவீத பிற்படுத்தப் பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படாத நிலை, அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பேரறிவாளன் உள்ளிட்ட நீண்டகால சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. 24.1.2016 அன்று திருச்சியில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
2. ஏப்ரல் மாதம் அறிவியல் மன்றம் சார்பில் மதுரையில் 5 நாள் குழந்தைகள் பழகு-மகிழ்வு முகாம் நடத்தவும், கழகக் குடும்பப் பெண்களோடு சந்தித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் மகளிர் சந்திப்பு களையும், மாவட்டந்தோறும் குழந்தை களுக்கு ஒரு நாள் பயிற்சிகளையும் நடத்துவது குறித்தும், பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு நியமனங்களில் பாதியளவுகூட நிரப்ப முடியாமல் இருப்பதற்கு தடையாக உள்ள காரணிகளை விளக்கிடும் நூல் ஒன்றை வெளியிட்டு, இது தொடர்பாக சமூக நீதி ஆதரவாளர்களை அழைத்து கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
3. தீண்டாமையை நியாயப்படுத்தி பெண் களை அவமதிக்கும் ஆகமங்களை இன்றும் ஏற்க வேண்டுமா? என்ற கேள்வியை முன் வைத்து இயக்கங்கள் நடத்துவது குறித்தும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து செயலவைக் கூட்டத்தில் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
வாரந்தோறும் தெருமுனைக் கூட்டங்கள் :
ஈரோடு (தெற்கு) மாவட்டக் கழகம் முடிவு
திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு (தெற்கு) மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசுவில் 10.1.2016 அன்று நடந்தது.
இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) தலைமையில், சிவானந்தம் (நகரச் செய லாளர்), சண்முகப்பிரியன் (மாவட்டச் செய லாளர்) முன்னிலையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக எதிர்வரும் 31.01.2016-க்குள் 500 –
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்களை சேர்ப்பது.
2. பிப்ரவரி 2016 முதல் ஒவ்வொரு வாரமும் கிளைக் கழகம் சார்பாக தெருமுனைக் கூட்டம் நடத்துவது. இதற்கு ஒருங்கினைப் பாளர்களாக சிவானந்தம், சித்தோடு எழிலன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
3. விரைவில் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட கழக அலுவலகம் திறப்பது என தீர்மானிக்கப்பட்டது.
4. ஓவ்வொரு கழக உறுப்பினரும் மாதம் ரூ 100 நன்கொடை வழங்கி இயக்க வளர்ச்சிக்கு உதவுவது எனவும் தொகையினை மாவட்ட பொருளாளரிடம் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் பா. குமார், மாவட்ட பொருளாளர் கிருட்டிண மூர்த்தி, அறிவியல் மன்ற மாவட்டச் செயலாளர் ஆசிரியர் மோகன்ராஜ், அரங்கம்பாளையம் விஜயகுமார், நகரத் துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, சூரியம்பாளையம் பகுதி பொறுப்பாளர் பிரபு, நங்கவள்ளி சிவக்குமார், சித்தோடு எழிலன் மற்றும் மீசை முருகேசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 14012016 இதழ்