ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?
பழமைச் சிந்தனை – ஜாதியம் – பெண்ணடிமையோடு இணைந்து நிற்கும் மரபுகளை தமிழர் மரபுகளாக முன் வைக்கப்படும்போது அது வெகு மக்களின் உணர்வாக மாற்றம் பெற்றுவிடுகிறது. அதிலே ஒன்றுதான் ஜல்லிக் கட்டு. மனித உயிர்களுக்கு ஆபத்துகளை உருவாக்கும் போட்டிகளுக்கு எல்லாம் தடை விதித்து விட்டார்களா என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். நாம் தரும் விளக்கம் இதுதான். எந்த ஒரு போட்டியும், போட்டியில் பங்கேற்கும், இரு தரப்பு ஒப்புதலுக்குப் பிறகுதான் அரங்கேறுகிறது.
இந்தப் போட்டியில் காளைகளின் சம்மதம் பெறப்பட்டதா? அந்த மாட்டுக்கு தங்களை ஒரு போட்டிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்பது புரியுமா? ஒரு மாடு ஆவேசமடைவதற்கு அடிப்படை, அது அச்சமூட்டப்படுவதால் மட்டுமே, அச்சத்தினால்தான் மிரண்டு ஓடுகிறது, காளை. அது சரிசமமாகப் போட்டிக் களத்துக்கு வந்து, என்னை அடக்கிப் பார் என்று சவால் விட்டு பிடரியை சிலிர்த்துக் கொண்டு நிற்கவில்லை – காளைகளின் இந்த அச்சம் மிக மோசமான வதை. இந்தப் போட்டியில் உயிரிழந்த – காயமடைந்த மனித உயிர்களும் அதிகம். 2010இலிருந்து 2014 வரை, ‘ஜல்லிக்கட்டு’ போட்டியில் பங்கேற்று காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,100, உயிரிழந்தவர்கள் 7 பேர். ஒரு குழந்தையும் உண்டு.
சென்னையில் பெரும் வெள்ளம் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி உதவ வந்தார்களே, அதுதான் வீரம். இத்தகைய ‘வீரமும்’ வீர உணர்வுகளும் பெருகி, செழித்து வளருவதே தமிழினத்தின் பண்பாட்டுக்குப் பெருமை சேர்க்கும்.
பெரியார் முழக்கம் 21012016 இதழ்