அறநிலையத் துறையை ஆட்டிப் படைக்கும் கேரள ஜோதிடர்

இந்து அறநிலையத் துறை, பல ‘புரட்சி’களை நடத்தி வருகிறது. “அறநிலையத் துறையின் செயல்பாடுகளில் மிஞ்சி நிற்பது கடவுள் நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? அம்மா நம்பிக்கையா?” என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கிறது. கேரள நம்பூதிரிப் பார்ப்பன சோதிடர் ஒருவர் ஆலோசனைப்படி அறநிலையத் துறை தொன்மையான கோயில்களை இடித்து வருகிறதாம். நாமக்கல் மாவட்டம் திருமான்குறிச்சியில் உள்ள 100 ஆண்டுகால பழமையான மருதகாளி அம்மன் கோயில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலுள்ள 330 ஆண்டு பழமையான பெரிய நாயகி அம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்திலுள்ள மாரியம்மன் கோயில் என்று கோயில்களை அறநிலையத்துறையே இடித்துத் தள்ளுகிறது. இந்தக் கோயில்கள் ‘அபசகுணமாக’ இருப்பதாக கேரள பார்ப்பன ஜோதிடர் கூறிய ஆலோசனைப்படி இந்த இடிப்பு நடக்கிறதாம்.
ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றத்தில் இப்படி இடிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் ‘அபசகுணம்’ என்ற காரணத்தைக் கூறி கோயிலை இடிப்பதா என்று கவலை தெரிவித்திருக்கிறார்கள். புதிதாக கோயில் கட்டுவதற்கு பல கோடி ரூபாயை செலவிடுவதற்காகவே இந்தக் கோயில்கள் இடிக்கப்படுகிறதோ என்று சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ள நீதிமன்றம், இது குறித்து மாநில அரசும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என்ற தாக்கீது பிறப்பித்திருக்கிறது. பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசுத் துறையின் கீழ் உள்ள கோயில்களும் இடிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கும் நோட்டீசு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடவுள் நம்பிக்கையைவிட ‘அபசகுணம்’ என்ற மூடநம்பிக்கையே மேலோங்கி நிற்கிறது என்பதற்கு இவைகளை சான்றாகக் கூறலாம். இரண்டு நம்பிக்கைகளைவிட மிஞ்சி நிற்பது அம்மா நம்பிக்கையே என்று வாதிடுவதற்கான சான்றுகளும் உண்டு. ஜனவரி 20ஆம் தேதி தமிழ்நாடு முழுதும் ஒரே நாளில் பல கோயில்களில் ‘கும்பாபிஷேகம்’ நடத்த அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளதாம். இதற்காக கோயில் திருப்பணிகள் (அதாவது பழுதுபார்க்கும் வேலைகள்) முடிவதற்கு முன்பே கும்பாபிஷேகம் நடத்தப் போகிறார்களாம். இராமேசுவரத்திலுள்ள இராமநாதசாமி கோயிலில் 8 கோடி ரூபாய் செலவில் பழுது பார்க்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். பணிகள் முடியாமலே கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டதாம்.
இந்தக் கோயிலில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சிருங்கேரி சங்கராச்சாரி ஒப்புதலைப் பெற வேண்டுமாம். அவரே கும்பாபிஷேகம் நடத்த ஒப்புதல் வழங்காத நிலையில், எப்படி கும்பாபிஷேகம் நடத்தலாம்? என்று கேட்கிறார், இராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி செயலாளர். இந்த செய்திகளை ‘தினமலர்’ நாளேடு வெளியிட்டிருக்கிறது. கேரள பார்ப்பன ஜோதிடர் ஆலோசனைப்படி அவர் குறித்த நாளில், அவசர கும்பாபிஷேகங்கள் மற்றும் கோயில் இடிப்புகள் நடக்கின்றன. பெரியார் இயக்கம் மக்களிடையே பகுத்தறிவு அறிவியல் கருத்துகளைப் பரப்புரை செய்தால் இந்துக்களை ‘புண்படுத்துவதாக’ கூப்பாடு போடுகிறவர்கள், இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் வாய் திறப்பதே இல்லை. கோயில்களும் கடவுள்களும் ஆட்சி அதிகாரத்தின் கீழ் அடிபணிந்து கிடக்கின்றன.
உண்மையில் கடவுள் சக்தி என்று ஒன்று இருந்தால், ஆட்சி அதிகாரத்தின் கீழ் சிக்கி இந்தக் கடவுள்கள் மண்டியிட்டு உடைபட்டு, உதைபட்டுக் கிடப்பார்களா? பக்தர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

பெரியார் முழக்கம் 07012016 இதழ்

You may also like...