கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன.
சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது.
‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்;
உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்;
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா
தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா”
– என்ற முழக்கத்தோடு விழா நடந்தது.

13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம் 8.45 மணிக்கு தொடங்கியது. திண்டுக்கல் குயிலனை நடுவராகக் கொண்ட இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பு : “மக்கள் மனம் மகிழும் பாடல்களைத் தந்தவர்கள் வண்ணத்திரை கவிஞர் களா? வயல்வெளி கவிஞர்களா?” என்பதாகும்.

சேலம் அபு, கடலூர் கவுதமி, புதுச்சேரி சாரதீசுவரி, குத்தாலம் ராஜ்குமார் ஆகியோர் பாடல்களைப் பாடி கருத்துகளை சுவையாக எடுத்து வைத்தனர். ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நகரில் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்திய துப்புரவுத் தொழிலாளர் தோழர்கள் பரிசுகளை வழங்கினர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.என்.இராஜன், நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. விழாவையொட்டி குறைந்த விலையில் மாட்டுக்கறி உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன. முன்னதாக ஜன.3ஆம் தேதி இராயப்பேட்டை வி.எம். தெரு ‘கிங் ஆதர்ஸ் பள்ளி’யில் காலை முதல் இரவு வரை விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தார். விழா நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார். விழா நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெறப்பட்டது. கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் கழக சார்பில் வாதிட்டனர். விழாவுக்கு ரூ.1000-க்கும் மேல் நன்கொடை வழங்கிய அனைவரும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர்களாக்கப் பட்டனர்.

காவலாண்டியூரில்
15.01.16 சேலம் கொளத்தூர் காவலாண்டியூரில் பெரியார் விளையாட்டு குழு சார்பில் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழா சேகர் தலைமையில் நடைபெற்றது. விழாவை கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவக்கிவைத்து உரையாற்றினார். பள்ளத்தூர் நாவலரசன் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து புதுகை பூபாளம் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குன்னம்பாறை
திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் சார்பாக தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் குடும்ப விழாவாக கழகத் தோழர் தமிழ்மதி இல்லம் குன்னம்பாறையில் 15-01-2016 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைப்பெற்றது. கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து சாப்பிட்டனர். பின்பு நடைபெற்ற கலந்துரையாடல் சஜீவ் தலைமையுரையுடன் துவங்கியது. தமிழ்மதி வரவேற்று பொங்கல் தமிழ் புத்தாண்டு பற்றி விளக்கிப் பேசினார். சூசையப்பா வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் பரிணாம வளர்ச்சி, நாத்திகம், மூடநம்பிக்கைகள் பற்றி கருத்துரை யாற்றினர். பின்பு சிற்றுண்டியுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் பிரிந்து சென்றனர்.

பெரியார் முழக்கம் 21012016 இதழ்

You may also like...