ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?
கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களில் ‘ஜாதி ஒடுக்குமுறை களுக்கு முன்னுரிமை தரப்படும்’ என்ற கருத்தை, பிரகாஷ் காரத், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் வலியுறுத்தி யுள்ளது வரவேற்கத்தக்க ஒரு திருப்பம்.
இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரச் சுரண்டல் – சமூக ஒடுக்குமுறை என்ற இரண்டு பிரச்சினை களையே மய்யம் என்று தீர்மான நகல் கூறுகிறது. சமூக ஒடுக்குமுறை என்று பார்த்தால் பெண்கள், தலித், பழங்குடி யினர் மற்றும் மத அடிப்படையிலான மைனாரிட்டிகள் மீது காட்டப்படும் பாகுபாடுகள் என்று சீத்தாராம்யெச்சூரி விளக்கமளித்துள்ளார்.
அதே நேரத்தில், ஜாதி அமைப்புக்கு எதிரான கருத்தியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக்கப்படவில்லை. ஜாதிய பாகுபாடுகள் – ஒடுக்குமுறைகள் குறித்து மட்டுமே நகல் தீர்மானம் பேசுகிறது. இன்னும் ஒரு நிலைக்கு மேலே போய் சீத்தாராம் எச்சூரி, கட்சியின் நிலையை இவ்வாறு தெளிவுபடுத்தியிருக்கிறார்.
“பொருளாதார அதிகாரத்தை உறுதி செய்வதனால் மட்டுமே, ஜாதியால் பாகுபாட்டுக்கு உள்ளாகும் பிரிவினரின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதே கட்சியின் நிலைப்பாடு” என்று கூறியுள்ளார்.
பூலே, அம்பேத்கர், பெரியார் – தலித் மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவர் களாக இருந்தும்கூட, தலித் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலை யில் ஏன், எந்த மாற்றமும் வரவில்லை? பொருளாதாரத்தில் அவர்களை உயர்த்துவது ஒன்றுதான் இதற்கு வழி. இதுவே கட்சியின் நிலைப்பாடு” என்கிறார் சீத்தாராம் எச்சூரி. (‘தி இந்து’ டிச. 29)
தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பான ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ உண்மையிலேயே பாராட்டத்தக்க போராட்டக் களங்களை முன்னெடுத்து வருகிறது. மூடி மறைக்கப்படும் தீண்டாமை ஒடுக்குமுறைகளை வெளிக் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் தீண்டாமைக்கு அடிப்படையான ஜாதியை எதிர்ப்பதில் என்ன தயக்கம்? என்ற கேள்வி எழவே செய்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் 2012, டிசம்பர் 24இல் ஈரோட்டில் நடத்திய மனு சாஸ்திர எரிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் தோழர் சம்பத், “தீண்டாமை ஒழிப்பு முன்னணி காலப் போக்கில் ஜாதி ஒழிப்பு முன்னணியாக மாறும்” என்று அறிவித்தார். ஆனால், கல்கத்தாவில் கூடிய கட்சியின் அகில இந்திய மாநாடோ, ஜாதி ஒழிப்பு செயல் திட்டம் முன்னெடுக்கப்படாத நிலை யில், பொருளாதார அதிகாரம் பெற்றுத் தருவதே ஜாதிய ஒடுக்குமுறைக்கான ஒரே வழி என்று கூறிவிட்டது. ஜாதி ஒழிப்புக்கு பொருளாதாரப் பார்வை ஒன்று மட்டுமே பயன்தருமா என்ற கேள்விக்கு நாம் விளக்கம் தருவதைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ‘தீக்கதிர்’ தந்த விளக்கத்தையே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
டிசம்பர் 28இல் சீத்தாராம்யெச்சூரி பொருளாதார அதிகாரம் என்ற கருத்தை முன்மொழிந்தார். “அடுத்த இரு நாட்கள் இடைவெளியில் ‘தீக்கதிர்’ ஏடு (2015, டிச. 31) “பாதிக் கிணறு தாண்டும் மோடி” எனும் தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டி யிருக்கிறது. “தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை தொழில்மயமாக்குவதன் மூலமாகவே (அதாவது பொருளாதார அதிகாரம் வழங்குவது) அவர்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியும்” என்று புதுடில்லியில் பட்டியல் இன/பழங்குடியினருக்கான மாநாட்டில் மோடி பேசியதற்கு பதில் அளித்து எழுதப்பட்ட தலையங்கம் இது. அத் தலையங்கம் இவ்வாறு கூறுகிறது:
“ஒடுக்கப்பட்டப் பிரிவினரின் பிரச்சினைகள் என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்தது என்ற பார்வை மீண்டும், மீண்டும் அவர்களை சமூக ரீதியாக அடக்கி வைப்பதற்கான கருவியாகவே இருந்து வருகிறது. கிராமப்புறங் களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் மீது சாதி ரீதியான அடக்குமுறை நிகழ்கிறது. தருமபுரியில் ஓரளவு பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களின் வீடுகள் குறி வைத்துத் தாக்குதல் நடந்ததை உலகே அறியும். நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் கோவி லுக்குள் சென்றுவிட்டு வெளி யேறிய பிறகு தீட்டுக் கழிப்பதற்காக சிறப்புப் பூஜைகள் நடத்தப் பட்டது. நமது சாதிக் கட்டுமானத்தின் அவலத்தை அம்பலப்படுத்தியது. இதுபோன்ற நிலையில் இன்னும் பெரிய மாற்றங்கள் தோன்றிவிட வில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி யின் வார்த்தைகள் காகிதத்தில் சர்க்கரை என்று எழுதி ருசி பார்க்க முடியாது என்பதைத் தான் நினைவுபடுத்துகிறது.”
– இது தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு எடுத்துள்ள நிலைப்பாடு.
பெரியாரியம் வேர் பிடித்து நிற்கும் தமிழகச் சூழலில், ‘தீக்கதிர்’ ஏடானா லும் சரி, தமிழ்நாடு மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியானாலும் சரி, அவர் களின் சிந்தனையோட்டம் இயல்பாகவே இப்படித்தான் இருக்கும். ஆனால், அகில இந்திய கட்சித் தலைமை, ஜாதி எதிர்ப்பு என்று வரும் போது பார்ப்பன எதிர்ப்பு ஜாதியைக் கட்டிக் காக்கும் மதம், சாஸ்திரம், புனிதங்கள் எதிர்ப்புகளை எதிர்க்க வேண்டிய நிலை உருவாக்கிவிடுமே என்ற தயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.
காகிதத்தில் சர்க்கரை என்று எழுதி ருசி பார்க்க முடியாது என்ற ‘தீக்கதிர்’ தலையங்கத்தின் வரிகள் மோடிக்கு மட்டுமல்ல, கட்சியின் செயலாளர் சீத்தாராம் எச்சூரிக்கும் பொருந்தி வருவதை நாம் சுட்டிக்காட்ட வேண்டி யிருக்கிறது.
பெரியார் முழக்கம் 21012016 இதழ்