அர்ச்சகர் உரிமை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து – நீதிபதி சந்துரு கருத்து

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதி வரலாற்றை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது என்று முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். இந்து தமிழ் நாளேட்டில் (3.1.06) இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி.
1970-ல் இந்தச் சட்டப்பிரிவு திருத்தப்பட்டு, வாரிசுரிமை அடிப்படையிலான நியமனம் இரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (சேஷம்மாள் வழக்கு) அர்ச்சகர் நியமனம் தொடர்பான அதிகாரம் மதசார்புத் தன்மையற்றது என்றும், அதற்கான தகுதி, திறமைகளை அரசு நிர்ணயிக்கலாம் என்றும் குற்றமிழைத்த அர்ச்சகர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கும் அறநிலைத் துறை நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்தது.
ஆனால் எந்த சைவ மற்றும் வைணவக் கோயில் களில் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் ஆகம முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. அதே சமயத்தில் அப்பதவிகளில் எவரும் வம்சாவளி உரிமை கொண்டாட முடியாது என்றும் கூறியது. தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை அது உறுதி செய்தது.
2006இல் இந்து அறநிலையத் துறை சார்பாக, சாதி வித்தியாசமில்லாமல் தகுதியும், பயிற்சியும் பெற்ற எவரையும் அரச்சகர்களாக நியமிக்கலாம் என்ற அரசாணையைப் பிறப்பித்தது. அதற்குப் பக்க பலமாக ஒரு அவசரச் சட்டமும் கொண்டு வரப் பட்டது. இதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில்தான் 9 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பின்படி, “ஆகமங்களின் அடிப்படையில் அமையப்பெற்ற கோயில்களில் அர்ச்சகர்கள் அந்த ஆகமங்களின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும்” என்றும் “அவர்கள் தகுதி பெற்றவர்களா என்று வேண்டுமானால் துறை பரிசீலிக்கலாம்” என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள ஆகம விதிகளைப் பரிசீலிக்கவும், அதன்படிதான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை முடிவெடுக்க வேண்டியிருப்பதாலும்தான் உச்ச நீதிமன்றம் அரசாணையை இரத்து செய்ய வில்லை. இதைத்தான் வீரமணி வெற்றி என்று கொண்டாடுகிறார். ஆனால், ‘நோயாளி இறந்தார், சிகிச்சை வெற்றி’ என்பதை நாம் கொண்டாட முடியுமா?
ஆகமக் கோயில்களில் மத வழக்கப்படி ஒரு சில சாதியைச் சேர்ந்த குடும்பத்தினர் மட்டுமே அர்ச்சகராக வர முடியும் என்பதை இத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது. சமூகச் சீர்திருத்தம் தொடர்பாக அரசு சட்டம் இயற்றலாம் என்பதையும், அர்ச்சகர் நியமனம் மத சார்பற்ற நடவடிக்கை என்று சேஷம்மாள் வழக்கில் கூறியதையும் உச்ச நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இது வேதனைக்குரிய விஷயம். வழக்கு நிலுவை யிலிருக்கும்போதே 2002இல் கேரளக் கோயில் வழக்கு ஒன்றில் பிராமணர்கள் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாவதற்குத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும், அந்த மத நடவடிக்கை களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 26ஆவது பிரிவு உறுதியளிக்கிறது என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், 25ஆவது பிரிவில் மத நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்ட அதிகாரம் அரசுக்கு உண்டு என்பதைப் பார்க்கத் தவறி விட்டது. குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்றும், அதனால் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகக் கூற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகமங்களின் அடிப்படை யில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதுதான் மதச் சார்பான உரிமையைப் பாதுகாப்பது என்று கூறி யுள்ள உச்ச நீதிமன்றம், அர்ச்சகர்களாக வரத் தகுதி யுள்ள சாதியினரின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற பெண்களை அர்ச்சகர்களாக பணி புரிய அரசு சட்டம் இயற்றினால் ஏற்றுக் கொள்ளுமா? அப்படியொரு சட்டம் வரும்பொழுது அச்சட்டம் மத நம்பிக்கைக்கு விரோதமானது என்று கூறுவார்களா?
வழிபடும் உரிமைகள் மற்றும் ஆலய நுழைவு இவற்றிலிருந்த சாதிப் பாகுபாட்டைக் களைவதற்கு எடுக்கப்பட்ட சட்ட முயற்சிகள் அனைத்தும் மக்களுக்கு ஆதரவான தீர்ப்புகளாக இதுவரை வந்துள்ளன. ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பு அப்படி யானதாக இல்லை. சீர்திருத்தப் பாதைக்கு முட்டுக் கட்டை போட்டு, சமூக நீதி வரலாற்றை மீண்டும் பின்னோக்கி இழுப்பதுபோல் ஆகி விட்டது!

You may also like...