ஆடைக் கட்டுப்பாடு
கோயில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்திருக் கிறது மதுரை உயர்நீதிமன்றம். இனி கோயிலுக்கு வரும்போது வேட்டி, சட்டை, பைஜாமா, குர்தா, புடவை போன்ற உடைகள் மட்டுமே அணிந்து வரவேண்டும். நவீன உடைகளில் அதாவது ஜீன்ஸ், டீ சட்டை, அரைக் கால் டிரவுசர், ‘லெக்கின்ஸ்’ போன்ற உடைகளில் கோயிலுக்குள் வரக் கூடாது என்று தடை வந்து விட்டது. ‘பக்தர்களுக்கு ஆடைகள் கட்டுப்பாடு பற்றி ஆகமங்களில் ஏதேனும் விதி இருக்கிறதா?’ என்று கேட்டார் ஒரு தோழர். அதற்கு ‘ஆகமங்கள் அர்ச்சகர் களுக்கும் கோயில்களுக்கும் தான்’ என்றார் சிவாச்சாரி.
“சட்டை இல்லாமல் திறந்த மேனி யோடு பூணூல் வெளியே தெரியும்படி இருக்க வேண்டும். அதுவும் ஆண்களாக ஒரே ‘குலத்தவராக’ இருக்க வேண்டும்; அப்படித்தானே” என்று எதிர் கேள்வி போட்டார் தோழர்.
அதாவது பக்தர்களுக்கு மட்டும் ஆடை அணிவதில் கட்டுப்பாடு; அர்ச்சகர்களுக்கு ஆடை இல்லாத கட்டுப்பாடு; அதேபோல் கடவுள் சிலைகளுக்கும் ஆடை இல்லாத கட்டுப்பாடுதான்; நிர்வாணமாக நிற்கும் பெண்சாமிகள், ஆண்-பெண் பிறப்பு உறுப்புகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிவலிங்கம் உள்பட எல்லா சாமிகளுக்கும் ஆடை இல்லாத கட்டுப்பாடுதான். அர்ச்சகர்கள் என்றால் அரை நிர்வாணம்; ‘ஆண்டவர்கள்’ என்றால் முழு நிர்வாணம்; இதுதான் ஆகமக் கட்டளை; சரி போகட்டும்!
“இவ்வளவு காலம் நவீன உடை களில் பக்தர்கள் கோயிலுக்கு வந்திருக் கிறார்களே; இதனால் ‘புனிதம்’ கெட்டுப் போயிருக்காதா” என்று ஒரு கேள்வியை முன் வைத்தார் தோழர்.
“அதையெல்லாம் பகவான் மன்னிச்சுடுவார். ஆனால் ஆகமங்களை மீறினால் மட்டும் பகவான் குற்றமாகி விடும்” என்றார் சிவாச்சாரி.
இப்போது, “ஆடைக் கட்டுப்பாடு உத்தரவை எதிர்த்து அறநிலையத் துறை அப்பீலுக்கு போயிருக்கிறதே; நீதிமன்றம் ஆடைக் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று தோழர் கேட்டதற்கு, “ஒரு பிரச்னையும் இல்லை; அதையும் பகவான் ஏத்துண்டுடுவார்” என்று சட்டென்று பதில் வந்தது.
“இந்த மாற்றங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பகவான், ‘பிராமணர்கள்’ மட்டுமே அர்ச்சகர் என்ற முறையை மாற்றினால் மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டாரா?” என்று தோழர் கேட்டபோது, சிவாச்சாரி ஆத்திரத்தின் உச்சிக்கே போய் விட்டார்.
“ஆகமங்களில் கை வைக்க கடவுளுக்கே அதிகாரம் கிடையாது; புரிஞ்சுக்கோங்க. ஆடைக் கட்டுப் பாடுகளை எதிர்த்து அப்பீலுக்குப் போன தமிழ்நாடு அரசு, ஆகமத் தீர்ப்புப் பற்றி இதுவரை வாய்திறந்து பேசிச்சா? இதுதான் எங்கள் சக்தி; இதற்கு முன் கடவுள் சக்திகூட மண்டியிட்டுத்தான் ஆகணும்” என்று வெடித்தார், சிவாச்சாரி.
அவர் அப்படித்தான் வெடிப்பார்; அப்படித்தான் குதிப்பார்!
ஆனால் நாம் என்ன சொல்கிறோம்: “கும்பிடுறேன் சாமி; இதோ தட்சணை; அர்ச்சனை செய்யுங்கோ.”
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 07012016 இதழ்