வினா… விடை…!
பழனி கோயிலில் பக்தர் தூக்கு போட்டு தற்கொலை; 2 ஊழியர்கள் பணி நீக்கம். – செய்தி
என்னுடைய சாவுக்கு பழனி முருகன் தான் முழு காரணம்னு அந்த பக்தர் கடிதம் எழுதி வச்சிருந்தாருன்னா, அப்ப யாரை பணி நீக்கம் செய்வீங்க…
சென்னை அயனாவரத்தில் உள்ள கோயிலுக்குள் வழிபட வந்த இந்து முன்னணி பிரமுகரின் தங்க சங்கிலி திருட்டு. – செய்தி
கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவரும் தங்க நகை அணியக் கூடாது; பாதுகாப்புக்காக கவரிங் நகைகள் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு தீர்ப்பை பெற்று விடலாமே! யோசிங்க….
‘இராமாயணம்’ ஒரு புனித நூல்; அந்தப் பெயரை வர்த்தகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆனால், அரசியல் மற்றும் தொலைக்காட்சி வர்த்தகங்களுக்கு இராமாயணத்தைப் பயன்படுத்தலாம். இது ‘பழக்க வழக்கம்’ என்பதால் நீதிமன்றம் தலையிடவே முடியாது.
இராமரின் தயவினால் ஆட்சிக்கு வந்த மோடி, உடனே இராமன் கோயில் கட்ட தேதி அறிவிக்க வேண்டும். – சிவசேனா அறிக்கை
ஏன், அந்தத் தேதியை அறிவிக்கச் சொல்லி இராமனிடமே, கேட்க வேண்டியது தானே?
கோயில்களில் தேவதாசி முறையை ஒழிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. – செய்தி
சுப்ரமணியசாமி, இதுக்கும் தடை வாங்காமே இருக்கணுமே!
சீனாவில் தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்களாக ‘ரோபோக்கள்’ பயன்படுத்தப்படுகின்றன. – செய்தி
ப்பூ… இதென்ன பிரமாதம்! எங்க ஊர்ல விவாதங்களிலேயே ரோபோக்கள் வந்துடுச்சுங்க. கேமிராவை திருப்பினால் போதும். ‘அம்மா’, ‘அம்மாவின் ஆணைப்படி’ன்னு பேச ஆரம்பிச்சுடும்!
அய்யப்பன் கோயிலுக்குள் போக வேண்டும் என்பதில் மட்டும் பெண்களின் உரிமை அடங்கி இருக்கவில்லை. – தமிழிசை சவுந்தர் ராஜன்
அதேபோல கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதால் மட்டும் உரிமை கிடைத்து விடுவதில்லைன்னு சேர்த்து சொல்லுங்க.
பெரியார் முழக்கம் 14012016 இதழ்