தமிழக அரசின் பொய் வழக்கில் கொளத்தூர் மணி விடுதலை
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் 2000 ஆம் ஆண்டு காட்டுக்குள் கடத்தி சென்று வைத்திருந்தார். அப்போது ராஜ்குமாரை மீட்க ‘தமிழக அரசின் தூதுவர்களாக’ அந்த ஆண்டு நவம்பர் மாதம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், பேரா.கல்யாணி முதலியோர் காட்டுக்குள் சென்று ராஜ்குமார் குழுவினரைப் பத்திரமாக மீட்டு வந்தனர்.
‘நடிகர் ராஜ்குமார் மீட்புக்கு செல்லவேண்டாம்’ என்ற தனது அறிவுரையை மீறி சென்றதால், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி, கொளத்தூர் மணியிடம் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிக்கொள்வதாகக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் அதுவரைத் தனித் தனியாக செயல்பட்டு வந்த, ஆனூர் ஜெகதீசன் தலைவராகவும், விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளராகவும் இருந்து இயங்கிவந்த பெரியார் திராவிடர்க் கழகம், திருவாரூர் தங்கராசு, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் நடத்திவந்த தமிழ்நாடு திராவிடர்க் கழகம், புதுவையில் லோகு. அய்யப்பன் தலைமையில் இயங்கிவந்த இராவணன் படிப்பகம், தூத்துக்குடியில் பால் பிரபாகரன் வழி நடத்தி வந்த பெரியார் பாசறை, கொளத்தூர் மணி தலைமையில் திராவிடர்க் கழகத்தில் இருந்து விலகி வந்தோர் அனைவரும் ஒன்றிணைந்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் – கொளத்தூர் மணியைத் தலைவராகவும், ஆனூர் ஜெகதீசன் துணைத் தலைவராகவும், விடுதலை இராசேந்திரன், கோவை இராமக்கிருட்டிணன் ஆகியோர் பொதுச்செயலாளர் களாகவும் கொண்ட – ஓர் புதிய அமைப்பைத் தொடங்க 11.06.2001 அன்று, கோவையில் அறிவிப்பு வெளியிடப் பட்டது. தமிழகம் முழுவதும் தோழர்களை மாவட்ட வாரியாக சந்திக்கும் வகையில், மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் முதலில் 23-6-2001 அன்று காலை கோவையிலும், அன்று மாலை கோபியிலும் நடைபெற்றது.
23.06.2001 அன்று மாலையில் கோபியில் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடலைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் நிருபர் ஒருவர், ”வீரப்பன் சிங்கப்பூருக்கோ, மலேசியாவிற்கோ சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறதே?” என கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ”வீரப்பன் சிங்கப்பூருக்கோ, மலேசியாவிற்கோ எங்கும் சென்றுவிடவில்லை, காட்டில்தான் உள்ளார்” என கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலை வைத்து குற்றவாளி இருக்கும் இடம் அறிந்தும் அரசுக்கு தெரியப்படுத்தவில்லை எனக் கூறி கழகத் தலைவர் மீது (179) தமிழக அரசு வழக்கு தொடுத்து 26.06.2001 அன்று கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் தேசத் துரோக குற்றப் பிரிவும் (124யு) இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது.
ஆனால் இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கைப் பதிவின்போது புதிதாக, வீரப்பனுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் கொடுத்து உதவி செய்ததாகவும், வீரப்பனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் மட்டும் குற்றம் சாட்டப்பட்டது.
மேட்டூர் நீதி மன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் 06.12.2005 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கில் எந்த முகாந்திரமும், சாட்சியங்களும் இல்லை என கூறி மேட்டூர் நீதிமன்றம் கழகத் தலைவரை விடுதலை செய்தது.
மேட்டூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வழக்கை தமிழக அரசு 2006 ஆண்டு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு 4.01.2016 விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.செல்வம் அவர்கள் இந்த வழக்கிற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வீரப்பன் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
கழகத் தலைவர் சார்பில் கழக வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோர் வழக்காடினர்.
பெரியார் முழக்கம் 07012016 இதழ்