வினா… விடை…!

தமிழக சட்டப் பேரவை நான்கு நாள் மட்டும் நடந்தது. – செய்தி
போதும்; போதும்; வெள்ளப் பாதிப்பு காலத்தில் ‘மேஜை தட்டும் திருவிழாக்களை’ இதற்குமேல் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது.

அமித்ஷா – பா.ஜ.க. தலைவராக இரண்டாவது முறையும் நீடிப்பார். – செய்தி
டெல்லி, பீகார் பேரவை தேர்தல் முடிவுகளையே தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு கொண்டு வந்து சேர்த்து சீரிய தொண்டாற்ற நாமும் வாழ்த்துகிறோம்!

ரோகித் வெமுலா ‘தலித்’ இல்லை. – பா.ஜ.க. கண்டுபிடிப்பு
சரி; அப்படியே வச்சிக்குவோம். அவரு ஒரு ‘இந்து’ தானே; ஒரு இந்துவுக்கு ‘இந்து தேசத்தில்’ இந்த நிலை வரலாமா?

கும்பமேளாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி. – உளவுத்துறை எச்சரிக்கை
எனவே, கும்பமேளாவுக்கு முழுக்குப் போட வருவதை தவிர்த்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பக்தி செலுத்துமாறு பக்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறப்பு உணவுகளுடன் நடந்து வரும் இந்து கோயில் யானைகள் புத்துணர்வு முகாமுக்குள் ஊடுருவ முயன்ற காட்டுயானைகளை வனத்துறை விரட்டி அடித்தது. – செய்தி
மதத்தை வச்சி யானைகளையும் பிரிச்சுடாதீங்கய்யா… அப்புறம் யானைகள் உண்மையாகவே மதம் பிடிக்க ஆரம்பிச்சுடும்.

உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடுகளை தடுக்க வேண்டும். – மருத்துவர் இராமதாசு
ஆமாம்! அய்தராபாத், டெல்லி, பூனா, கோலக்பூரில் எல்லாம் ஜாதிப் பாகுபாடுகள் தலைதூக்குவதை எங்களால் அனுமதிக்கவே முடியாது!

பெரியார் முழக்கம் 28012016 இதழ்

You may also like...