பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார்
பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார்
வாழ்வின் இறுதி வரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து காட்டிய ”தாதம்பட்டி இராஜூ”, தனது 94ஆவது வயதில் சென்னையில் 19.01.2016 அன்று காலை முடிவெய்தினார்..
தாதம்பட்டி இராஜூ, தந்தை பெரியாரின் மூத்த சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மருமகன் ஆவார்.
ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகள் செல்லா என்ற நாகலட்சுமியை திருமணம் செய்து கொண்டவர். செல்லா,மறைந்த ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி ஆவார்.
இளம் வயதில் கப்பற்படையில் பணியாற்றிய அவர், 1946இல் நடந்த கப்பற் படை எழுச்சிப் போராட்டத்தில்பங்கேற்றார். பிறகு, பெரியார் வாழ்ந்த காலத்தில் ‘விடுதலை’ நாளேட்டின் அலுவலக மேலாளராக 10 ஆண்டு காலம் பணிபுரிந்தார்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக வடமாநிலத் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிட தோழர் வே.ஆனைமுத்து அவர்கள், வடமாநிலங்களுக்கு சென்றபோது, அவருடன் சென்றவர்களில் ஒருவர் தாதம்பட்டி இராஜு.ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். வயதுமுதிர்ந்த நிலையிலும் இளைஞரைப்போல் தமிழகம் முழுதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவரது வழக்கம்.
2003ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம், முதன்முதலாக ‘குடிஅரசு’ முதல் தொகுப்பை‘வழிபாட்டு உரிமை மாநாட்டில்’வெளியிட்டபோது, விழாவில் பங்கேற்று முதல் தொகுதியைப் பெற்றுக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்.கடந்த சில மாதங்களாக அண்ணா நகரிலுள்ள அவரது மகள் இல்லத்தில்முதுமை காரணமாக தங்கிவிட்டார்.
சென்னையிலேயே அவரது உடல்அடக்கம் நடந்தது. பெரியார் இயக்கத்தின் தோழர்கள் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர்
பெரியார் முழக்கம் 21012016 இதழ்