பார்வதி ‘மேனன்’ பார்வதியாகிறார்!

தமிழ்த் திரைப்பட உலகை இப்போது பல மலையாள நடிகைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ‘பார்வதி மேனன்’ என்ற ஜாதி அடையாளத்தோடு வந்தார். அண்மையில் ஒரு தமிழ் நாளேடு, இது குறித்து அவரிடம் கேட்டது. “தமிழ் நடிகைகள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவது இல்லை. இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் மட்டும் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைப் பயன்படுத்துகிறார்களே? என்பது கேள்வி. அதற்கு அந்த நடிகை இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்:
“ஜாதி ஒரு பெருமையான விஷயம் கிடையாது. அதனால் எந்த மதிப்பும் வரப்போவது இல்லை. ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் என் பெயரிலிருந்து ஜாதி பெயரை நீக்கி விட்டேன். என் பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களில் மேனன் என்ற வார்த்தை கிடையாது. படங்களின் ‘டைட்டில்’களில் (பெயர் அறிவிப்புகளில்) பார்வதி என்றே குறிப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். எதிர் காலத்தில் என் குழந்தைகளுக்குக்கூட பள்ளிக்கூட விண்ணப்பத்தில் ஜாதி பெயரை குறிப்பிட மாட்டேன்” என்று பதிலளித்திருக்கிறார். (‘தினத்தந்தி’ 9.1.2016) பார்வதியைப் பாராட்ட வேண்டும்.

பெரியார் முழக்கம் 21012016 இதழ்

You may also like...