உற்சாக உணர்வலைகளோடு நடந்த கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் திருச்சியில் கரூர் புறவழிச் சாலையிலுள்ள இரவி ‘மினி ஹாலில்’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11 மணியளவில் தொடங்கியது திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி, கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். முடிவெய்திய கழகத் தோழர் மல்ல சமுத்திரம் கண்ணன், மூத்த பெரியார் தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம், ரோகித் வெமுலா ஆகியோர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, நிகழ்ச்சிகள் தொடங்கின.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக கடந்த ஜூலை மாதம் நடந்த தர்மபுரி செயலவைக்குப் பிறகு, கழக நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கழகக் கொள்கைகளை வெகு மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு உறுப்பினர் சேர்த்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல் மற்றும் கழக செயல்பாடுகள் குறித்து தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். கழக இணையதள முகநூல் செயல்பாடுகள் குறித்து அவற்றை பொறுப்பேற்று நடத்தி வரும் தோழர்கள் விஜய்குமார், பரிமளராசன் ஆகியோர் செயல்பாடுகளை விளக்கமாக எடுத்துரைத்தனர்.
மதிய உணவுக்காக 2 மணிக்கு நிறைவடைந்த பகல் நிகழ்வு மீண்டும் 3 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை நீடித்தது. செயலவைக் கூட்டத்தில் முதல்முறையாகப் பங்கேற்றுப் பேசிய மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், செயலவை நிகழ்வுகள் குறித்தும் கழகம் குறித்தும் முன் வைத்த கருத்துகள் நெகிழ்ச்சியாக இருந்தன. கழகத்தின் செயல்பாடுகள் அணுமுறைகளை தோழர்கள் உற்சாகமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பகிர்ந்து கொண்டனர்.
கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான உறுப்பினர் கட்டணமாக ஒரு இலட்சத்து 33 ஆயிரம் ரூபாயை முதல் கட்டமாக தோழர்கள் மேடையிலேயே கழகத் தலைவரிடம் வழங்கினர். ஈரோடு தெற்கு மாவட்டக் கழக சார்பில் சென்னிமலை செல்வரஜ் ரூ25,000/-, சேலம் (கிழக்கு) மாவட்டக் கழக சார்பில் இரா. டேவிட் ரூ.40,000/-, சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் ப. சூரியகுமார் ரூ.50,000/-, திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் பொருளாளர் துரைசாமி ரூ.15,000/-, தர்மபுரி மாவட்டம் சார்பில் வேணுகோபால ரூ.3,000/- ஆகியோர் மேடையிலேயே கழகத் தலைவரிடம் நிதியை வழங்கினர். கழகத்தின் கட்டமைப்பு நிதிக்கு நிதி திரட்டித் தருவதற்கு தோழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் பங்கினை வழங்கிட முன் வந்தனர். சில தோழர்கள் மேடையிலேயே நிதியை அறிவித்தபோது பலத்த கரவொலி எழுந்தது.
திருப்பூர் முகில்ராசு தனது குடும்பத்தின் சார்பில் ரூ.1,00,000, சென்னை அன்பு தனசேகர்ரூ.1,00,000, ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி ரூ.50,000 வழங்குவதாக மேடையில் அறிவித்தனர்.
குற்றாலத்திலே கழகம் பயிற்சி முகாம் நடத்துவது குறித்து தோழர்கள் கருத்து தெரிவித்தபோது, பயிற்சி முகாமுக்கான 5 நாள் உணவு செலவையும் குற்றாலத்திலுள்ள தனது மகள் ஏற்றுக் கொள்வார் என்று நாத்திக ஜோதி அறிவித்தார். சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் கட்டமைப்பு நிதி ரூ.5 இலட்சம் திரட்டித் தருவதாக மாவட்ட தலைவர் சூரியகுமார் அறிவித்தார். இளைஞர்களால் நிரம்பி வழிந்த செயலவைக் கூட்டத்தில் 85 வயது பெரியார் தொண்டர் திருவரங்கம் மருத்துவர் எஸ்.எஸ்.முத்து இளைஞர்களைக் கொண்ட இந்த கழகம், பெரியார் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்கும் என்று பெருமிதத்துடன் கூறினார்.
நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்து, கழகத் தோழர்கள் முன் வைத்த கருத்துகளுக்கு விளக்கமளித்து நிறைவுரையாற்றினார். தத்துவத்தை மட்டுமே பார்க்காமல் அந்த தத்துவமோ, கருத்தோ, சமூகத்தில் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே பெரியார் சிந்தித்தார். அதுவே பெரியார் அணுகுமுறை என்று கூறிய கழகத் தலைவர், கழகம் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அது குறித்து கருத்துகளைக் கூற ஜனநாயக உரிமைகள் உண்டு. முடிவெடுத்தப் பிறகு ஜனநாயகத்துக்கு இடமில்லை; சர்வாதிகாரமாகவே செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
உற்சாக உணர்வுகளோடு உறுதியான செயல் களத்துக்கும் வழிகாட்டுவதாக திருச்சி செயலவை அமைந்திருந்தது. பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த திருச்சி மாவட்டக் கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். மதிய உணவாக அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர் மனோகரன் நன்றி கூறி செயலவை நிறைவு பெற்றது. – நமது செய்தியாளர்

You may also like...