28. புதிய மந்திரிசபையும் இந்தியும்
இப்போது குமாரசாமி ராஜா அவர்களைப் பிரதமராகக் கொண்ட சென்னை மாகாணப் புதிய மந்திரிசபை, இந்த மாகாணத்தில், முக்கியமாகத் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலுமாவது, பழைய மந்திரிசபையின் இந்திக் கொள்கையிலிருந்து, ஒரளவு மாறுதலைச் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பதைக் கண்டு அந்த ஆசையைத் தமிழ் மக்கள் வரவேற்பார்கள். பழைய இந்திக் கொள்கையில் ஏதோ ஒரு தவறுதல் – திருத்தவேண்டிய பிழைபாடு இருக்கிறது என்பதை ஸ்துலமாகவாவது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மாத்திரமல்ல, பிழைபாட்டைத் திருத்திக் கொள்வதற்கும் முயற்சிக்கிறோம் என்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே, அந்த அளவுக்காவது வரவேற்கத்தானே வேண்டும். இந்தி நுழைப்பு ? கட்டாயமாகத் தமிழ்படிக்கும் நூத்துக்குப் பத்துபேரும் படித்தாக வேண்டும் என்கிற ஏதேச்சாதிகார ஆணை ? பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சாரியாரால் பிறப்பிக்கப்பட்டு, அவர் மந்திரிசபை ஓடிப்போக வேண்டிய நிலை ஏற்பட்டவுடன், அந்தத் திட்டமும் இந்த நாட்டை விட்டு ஒடிப்போன திட்டமாகும். மேலும் நூற்றுக்கணக்கான தாய்மார்களும், ஆயிரக்கணக்கான கட்டிளங் காளையரும் பச்சிளங் குழந்தைகளோடும், நாட்டுமக்களின் தந்தையோடும்,...