18. தோழர் அழகிரிசாமி!
தமிழரின் தன்மானப் போர்த் தளபதி ? அஞ்சா நெஞ்சன் ? பட்டுக்கோட்டை அழகிரிசாமியவர்கள் இயற்கை எய்தினார் என்ற சேதி எதிர் பார்த்தது எவரும் என்றாலும் செய்தியைக் கேட்டவுடன் பேரதிர்ச்சியைத் தராமலில்லை. சமுதாயத்தின் என்புருக்கியான ஆரியச் சழக்கரோடு தீவிரமாகப் போர்தொடுத்த அவரின் உடம்பை, என்புருக்கிநோய் இன்று இரையாகக் கொண்டுவிட்டது.
தோழர் அழகிரி ? ஆம்! தோழமை என்பதன் தத்துவத்தை நன்குணர்ந்த அழகிரியவர்கள், இறப்பை, இன்றோ நாளையோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்தான். அப்படி எதிர் பார்க்க வேண்டிய நிலையில், தன்னுடைய வாழ்வைப் பற்றிப் பெருங்கவலை கொள்ளாதவராய் இருந்துவர, தன்னை அவர் பழக்கிக் கொண்டவர் என்று கூறினால் அது தவறில்லை.
சானடோரியத்தில் இருப்பதைக் காட்டிலும் அவர் தன்னுடைய வீட்டுக்குச் சென்று ஓய்வு பெற்றுக்கொள்வது நல்லது இது, அவர் பெருந்துறை சானடோரியத்துக்குத், தோழர்களின் தூண்டுலால் போனபோது அங்குள்ள டாக்டரால் கூறப்பட்ட ஆலோசனை. சாவதை ஆஸ்பத்திரியில் சாவாதே, வீட்டுக்குப்போய் இறந்துவிடு என்பதுதான் இதன் கருத்து. இதை டாக்டர் கூறுவதற்கு முன்னாலேயே அழகிரி அறிவார்.
அதனால்தான் அய்ம்பதாயிரத்துக்கு மேற்பட்டுக் கூடும் தோழர்களை, நாம்வேறு எங்கு, எப்போது சந்திக்கப்போகிறோம்? என்கிற ஒரே ஏக்கத்தினால் அவர் ஈரோட்டு மாநாட்டுக்கு எப்படியும் வந்து சேர வேண்டும் என்கிற துடிப்போடு வந்து, மாநாட்டில், கலந்து கொண்டதாகும். ஈரோட்டு மாநாட்டைப் பெரியாரவர்கள், ஒருவர்க்கொருவர் விடை பெற்றுக் கொள்ளும் மாநாடு என்று குறிப்பிட்டார்கள்.
பார்ப்பனீய அடிமைகளான இந்துஸ்தான் தாங்கிகளால், எந்த நேரத்தில் எப்படி வேண்டு மானாலும் ஒடுக்கப்படலாம், ஒழிக்கப் படலாம், மறைக்கப்படலாம் என்ற துணிவினால் அதுபோலவே சில காட்சிகள் நடந்து முடிந்தன. அடுத்த சில பாகங்கள் எப்போதோ? ஆனால் அதே மாநாட்டில் தோழர் அழகிரி அவர்கள், உங்கள் அனைவரையும் மறுபடியும் காண்பேனோ? சொல்லமுடியாது. என் தலைவருக்கும் தோழர்களுக்கும் இறுதியாக என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளவே இப்போது வந்தேன் என்று அவர் கூறியது இன்று முற்றிலும் உண்மையாகிவிட்டது.
எதிரியாக வந்து உட்கார்ந்தாலும், சிரிக்கச் சிரிக்கவைத்துப் பின் இடித்து இடித்துக் கூறும் அவர்வாய்ச் சொற்கள், பண பலத்திற்கோ, திமிர் பலத்திற்கோ, பணிந்துவிடாத – தயவு தாட்சண்யம் பாராத அவர் அஞ்சா நெஞ்சம், ஆகிய இவற்றை ஈரோட்டு மாநாட்டில் தோழர்கள் கண்டிருக்க முடியாது. கம்பீரமான நீண்ட தோற்றம் ? கனல் வீசும் கண்கள் ? கொஞ்சும் தமிழ்ச் சொற்கள் அன்றில்லை ? மாய்ந்தொழிந்தன. உட்கார்ந்த நிலை ? ஒளி குன்றிய தோற்றம் ? உள்ளத்தை உருக்கிடும் சோகச் சொற்கள், இவைதான் அன்று கண்டவை.
பெருந்துறையும் ? தாம்பரமும், காலங்கடந்த முயற்சி என்பதையே அன்று ஈரோட்டில் அவர் சொற்கள் கூறியது அவர் உடலம் அதை ஆதரித்தது. மறைவு இன்று நிரூபித்தது. இன்று அவர் மறைந்தேபோனார்.
கல்லும், கட்டாந்தரையும், முள்ளும் புதருமாய் இருந்த புன்செய், பெரும் பகுதி இன்று நன்செய்யாக மாற்றப்பட்டு விட்டது. திருத்தி மாற்றப்பட்ட நன்செய்யில் சீரிய விதைகள் தூவப்பட்டு, அவை முளைவிட்டுப் பின் வளரவும் ஆரம்பித்து விட்டன. பயிர் வளர்ச்சியையே முதலில் பார்ப்பவன், நீர் பாய்ச்சும் துயரத்தையும் களை பிடுங்கும் தொல்லையையும் கண்டாலும் கூட, நன்செய்யின் ஆதி வரலாற்றை ? அது நன்செய்யாக உருமாற எத்தனை பேர், எத்தனை நாள், எவ்வளவு கஷ்டப்பட்டு, எப்படி நன்செய்யாக மாற்றினார்கள் என்பதை எப்படி அறிந்துகொண்டுவிட முடியும்?
கல்லும் முள்ளுமாயிருந்த புன்செய், ஆரிய நச்சுக் கருத்துகள் படர்ந்த திராவிடச் சமுதாயம். அதை நன்செய்யாக மாற்ற முயன்ற முயற்சியில் தோள்கொடுத்து, பெரியாரவர்கட்கு உதவி புரிந்த சிலருள் தோழர் அழகிரி ஒருவர்.
அந்தச் சிலருள், சிலர் ஏற்கனவே இயற்கை எய்திவிட, சிலர் களையாக மாறிப் பின்கையாலா காதவர்களாய்ப் போய்விட, எஞ்சி நின்ற ஒருவர் ? குறிக்கத்தகுந்த சிறப்புடைய உழுபடை வீரர், அவர். அன்றிருந்து இன்றுவரை சளையாமல், பெரியார் வழி பற்றிய பெரும்போர் மறவன் என்கிற பெருமை அவர் ஒருவருக்கே உண்டு. சென்ற இந்தி எதிர்ப்புப் போரில், 1938-ல், தமிழர் பெரும்படை நடத்தி, திருச்சியிலிருந்து சென்னைவரையுள்ள ஊர்தொறும், தமிழரின் தன்மானப்போர் முரசுகொட்டி, வெற்றிச்சங்கு ஊதி வீரர் பலரைப்பாசறையில் சேர்த்த வெற்றி வீரன், அதற்குப்பின் மிக விரைவிலேயே என்புருக்கியால் தாக்கப்பட்டு நேரில் வந்து அழைக்குமிடம் செல்லும் உற்சவ மூர்த்தியாக ஆகிவிட்டதால், இன்றைய இளைஞர் சிலர் அவரை – அவரின் உழைப்பைப் பூரணமாக அறிந்தவர்களா? என்பது சந்தேகம்தான்.
இயக்கத்தால் விளம்பரம் பெறவும், சிலர் வியாபாரம் நடத்தவுமான இன்றைய நிலையை, இந்த நாட்டில் இன்று காணுகிறோமென்றால், அதற்கு ? அந்த நிலையை உண்டாக்குவதற்கு அடிப்படைக் காரணஸ்தர்களாய் உழைத்த பெருமை, பெரியார் அவர்கட்கு அடுத்தபடி தோழர் அழகிரிக்கே உண்டு என்றால். அது வெறும் பெருமைக்குரிய பேச்சல்ல.
தோழர் அழகிரியின் மறைவு இயக்கத்திற்குப் பெரிய நஷ்டம். இந்த வீரருக்கு நாம் செய்யும் கடமை என்ன? அவர் செய்த தொண்டை – அவர்பின் பற்றிய பாதையைப் பின் பற்றுவதைக் காட்டிலும், உண்மையிலேயே அவருக்குச் செய்யும் மரியாதை ? நன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
அழகிரியின் பிரிவால் வருந்தும், அவர் குடும்பத்தினரோடு நாமும் பங்கு கொள்ளுகிறோம். தோழர்கள் அனைவர்க்கும் பெரும் பங்குண்டு!
குடி அரசு, தலையங்கம் 02.04.1949