16. ஸ்தல சுயாட்சி
இந்த மாதம் 12 தேதி திராவிடத் தந்தை பெரியாரவர்களுக்குத் திருச்சி நகரசபை அளித்த சிறப்பு மிக்க வரவேற்பு, நம் காங்கிரஸ் தோழர்களுக்கு ? மந்திரிமார்களுக்குப் பெரும் மனக்கசப்பைத் தருமென்று கூறப்படுமானால், அங்கு பெரியார் கூறிய கருத்துக்கள், எத்தனையோ மடங்கு அதிகமான மனக்கசப்பை அவர்களுக்கு நிச்சயமாகத் தந்திருக்க வேண்டும்.
பெரியாரவர்கள் அந்த வரவேற்புக்குப் பதில் கூறும்போது, இன்றைய ஸ்தல ஸ்தாபனங்கள் சுயேச்சையாகச் செய்யக்கூடிய செயல்கள் இரண்டு; ஒன்று வரவேற்பு வழங்குவது, மற்றொன்று திருவுருவப்படம் திறந்து வைப்பது என்று கூறியிருப்பது வெறும் வேடிக்கைக்காகக் கூறிய விஷயமல்ல. இன்றைய ஸ்தலஸ்தாபனங்களின் உண்மையான யோக்கியதை அவ்வளவுதான். ஸ்தல ஸ்தாபனங்களில் முக்கியமாக முனிசிபாலிட்டிகள், பஞ்சாயத்துப் போர்டுகள் என்பவைகளில் அங்கம் வகிக்கும் எவரும் அந்த ஸ்தாபனங்களால் அந்த நகருக்கோ, ஊருக்கோ எந்த ஒரு பொது நன்மையையும் செய்ய முடியாத அளவில்தான் அவர்களுடை அதிகாரம் பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது.
பறிமுதல் என்று ஏன் கூறுகிறோமென்றால், ஸ்தல ஸ்தாபன அமைப்பு முறையே அந்த ஸ்தலத்திற்கு வேண்டிய பொது நன்மை எது? எதுவுண்டோ அது எல்லாவற்றையும் செய்வதற்குப் பூரணசுயாட்சியுடையதாய் இருக்க வேண்டுமென்பதே. வெளியாரின், முக்கியமாக அரசாங்கத்தாரின் தலையீட்டுக்கு நிர்வாகத்தில் இடமில்லாமல் இருக்கவேண்டும் மென்பதே. ஆனால் இன்றைய ஸ்தல ஸ்தாபனங்களில் நடைமுறை எப்படி? மாடல் குடி அரசாக விளங்கவேண்டிய ஸ்தல ஸ்தாபனங்கள், படிப் படியாகத் தன் எல்லைக்குட்பட்ட எல்லா நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று நடத்தவேண்டிய ஸ்தல ஸ்தாபனங்கள், நம் நாட்டில் படிப்படியாக, நாளுக்கு நாள் எல்லா அதிகாரங்களையும் இழந்தே வந்திருக்கிறது. இவற்றின் வரலாற்றை யறிந்தவர்கள் இதை மறுக்கமுடியாது.
20 வருஷங்களுக்கு முன்னால் எல்லாம், ஸ்தல ஸ்தாபனங்கள் பணக்காரர்கள் கையில் சிக்கிக் காண்ட்ராக்டர்கள் ராஜ்யமாக விளங்குகிறது என்று அன்றைக்குக் காங்கிரஸ்காரர்களால் சித்திரிக்கப் பட்டு குறை கூறப்பட்டது என்றாலும், அந்த நிலைமையை உண்டாக்கியவர்களும் அவர்கள்தான். நாட்டில் பெரிய அரசியல் கட்சியாய் ? வயதில் மூத்ததாய் ? மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டியாய் இருக்கவேண்டிய காங்கிரஸ், ஸ்தல ஸ்தாபனங்களைக் கட்சியின் பெயர் கூறிக் கைப்பற்றுவதில் தீவிரத் திட்டம் வகுத்தது. பணக்காரர்களோ பணத்தால் அடித்தடித்து அதை வீழச் செய்தார்கள். பிறகு வீசிய பணத்தை யெல்லாம் அவர்கள் திரட்ட ஆரம்பித்தார்கள். ஆகவே இந்தக் காரியத்தில், காண்ராக்ட் ராஜ்யம் நடத்திய பணக்காரர்கள் எப்படிக் குற்றவாளிகளாகிவிட முடியும்?
பெரியாரவர்கள் காங்கரசிலிருந்த போதே, 1920-ம் வருஷத்திலேயே, அரசியல் கட்சியின் பெயரால் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றக் கூடாது என்று கூறினார்கள் என்றால், அதை அன்றைக் காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதற்கு உண்மையான அர்த்தம் என்ன? ஸ்தலசுயாட்சி என்பதன் அர்த்தத்தைத் தெளிவாக உணர்ந்து கொண்டதும், உணர்ந்து கொள்ள மறுத்ததும் தானே காரணமாகும்.
நகரசபை வேலைகளில் அரசியல் கட்சிப் போட்டிகளைப் புகுத்துவது, அதன் வேலையைக் கெடுப்பதென்பது மட்டுமல்லாமல், நகரசபையால்மக்களுக்கு எதைச் சாதிக்க வேண்டுமோ அதைமறந்து, கட்சிச் சண்டைகளே பெரிதும் வளருவதற்கு இடமேற்பட்டு விடுகிறது. என்று, பெரியாரவர்கள் அன்று திருச்சியில் கூறிய கருத்தானது; அனுபவத்தின் மீது கூறியது என்பது மாத்திரமல்ல, அவர்கள் பொது வாழ்வில் ஈடுபட்ட காலந்தொட்டே கூறிவரும் கருத்தாகும்.
இந்த உண்மையைக் கண்ணாரக் கண்டு வருகிற காங்கிரஸ்காரர்கள் பல வருஷங்களுக்குப் பிறகு இன்றைக்காவது இதை ஒப்புக்கொள்ளுகிறார்களா? கட்சிப் போட்டாபோட்டி கண்டிக்கப்பட வேண்டியது என்கிறார்களா? என்றால் என்ன பதில் சொல்ல முடியும்? 47ம் வருஷம் நடந்த ஸ்தலஸ்தாபனத் தேர்தலிலேகூட யார் யாருக்கு பதிவிக் கொடுப்பது யார் யாருக்குஇல்லை என்று கூறுவது என்கிற தகராறைக் காரணமாகக் கூறித்தானே, நம் காங்கிரஸ் தியாகிகள் ? ஊழியர்கள் காங்கரசானது தேர்தலில் கலந்து கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தது. அப்படித் தீர்மானித்தும் அதைக் கிழித்தெறிந்துவிட்டுப் பின் எங்கெங்கு செல்வாக்குண்டோ, அங்கெல்லாம் கட்சியின் பேரால் ? மங்களகரமான மஞ்சளின்பேரால் நபர்களைக் காங்கிரஸ் நிறுத்தி வைத்தது. ஆகவே இந்த நடத்தையிலிருந்து அவர்கள் உணர்ந்து கொண்டு விட்டார்கள் என்று எப்படிச்சொல்ல முடியும்?
ஸ்தலஸ்தாபனங்களுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் என்று, 47லேயே (பிரகாசம் மந்திரி சபையிலேயே) கூறப்பட்டது என்றாலும், அது இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றால், அதற்குக் காரணம், ஆளவந்தவர்கள் கண்ட கனவின்படி அநேக இடங்கள் அவர்கள் கைக்கு சிக்கவில்லை என்பதுதானே! ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அதிகாரம் போதாது, கூட்டப்படவேண்டும் என்பதையுணர்ந்தும்; அதைநடை முறைக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று கூறியும், பின்னால் இன்று வரை அதைச் செய்யவில்லை என்பதைப் பார்க்கும் போது, ஸ்தலஸ்தாபனங்களுக்குக் கொடுக்கும் அதிகாரம் தங்கள் கட்சிக்குவேலி அமைப்பதாய் இருக்க வேண்டும் என்கிற ஒரு நோக்கத்தைத் தவிர வேறு என்ன கருத்துக் கூறிவிட முடியுமா?
சென்ற சூலை மாதத்தில் ஜில்லா போர்டுகளை மாற்றியமைப்பதற்காக ஒரு திருத்த மசோதா என்றுகூறி, பெரும் பொருள் சேர்க்க முடியாத எம்.எல்.ஏக்களுக்கெல்லாம் ஜில்லாப் போர்டை வேட்டைக் காடு ஆக்கப்போகிறோம் இன்று இப்போதைய மந்திரிசபை கூறியதிலிருந்தே, ஸ்தல ஸ்தாபனங்களைப் பற்றி இன்றைக்கும் நம் காங்கிரஸ்ரார்கள் கொண் டிருக்கும் கருத்தென்ன என்பது விளங்கவில்லையா?
மந்திரிசபை என்கிற கட்டிடத்திற்கு ஸ்தல ஸ்தாபனம் என்கிற அஸ்திவாரம் என்றெண்ணிக் கொண்டிருக்கும் வரையிலும், அதற்கேற்றபடி காரியங்கள் செய்யப்படும் வரையிலும் ஸ்தல ஸ்தாபனங்களால், அந்த ஸ்தல மக்களுக்கு என்ன நன்மை உண்டாகிவிட முடியும்?
நகரசபைகளில் திராவிடக் கழகத்தார் இருந்தால், விளக்கு வெளிச்சம் தராதா? அல்லது காங்கிரஸ்காரர்கள் மட்டுமிருந்தால் விளக்கு எரியாமலே வெளிச்சம் உண்டாக்கிவிடமுடியுமா? கழகத் தோழர்கள் நகரசபைக்குச் சென்றால் ரோடெல்லாம் பொன்மயமாகி விடுமா? அல்லது காங்கிரஸ் காரரேயிருந்தால் ரோடுகள் எல்லாம் இடிந்துவிடுமா?
இதைக் காங்கிரஸ்காரர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனால் ஸ்தல ஸ்தாபனங்கள் என்பதற்கு அவர்கள் அகராதியில் வேறு அர்த்தமல்லவா எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்தலத்தின் மக்கள் நன்மைக்கு ஆட்சி புரியும் ஸ்தாபனங்கள் என்று பெரியார் அர்த்தம் கூறினால், ஸ்தலத்தின் மக்களை எங்களுக்குச் சேர்த்துத்தரும் ஸ்தாபனம் என்றல்லவா, அவர்கள் செயலால் சொல்லு கிறார்கள்? இப்படிச் சொல்லும் வரையிலும் ஸ்தல ஸ்தாபனங்கள் ? சுயாட்சி என்பது எப்படி உருப்பட முடியும்?
தமிழ் நாட்டிலே சென்னைக்கு அடுத்தபடியில் 2வது இடத்தைப் பெற்றிருக்கும் பெரிய நகரம் திருச்சி. இதற்கு வருமானம் இந்தப் பணவீக்க காலத்தில் 31 லட்சம்தான் என்பதையும், அதுசெய்ய வேண்டிய செலவுகளுக்கு அரசாங்கத்தை எதிர்பார்க்க வேண்டியதாய் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டு, ஆனால் அதே நேரத்தில் தனிப்பட்ட எத்தனையோ பேர் கோடியாய்ச் சம்பாதிப் பதில்லையா? என்றும் பெரியாரவர்கள் கேட்கிறார்கள். கேட்பதோடு மட்டுமல்ல; அதற்கு மார்க்கமும் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு நகரசபையும் சோவியத் நாட்டிலுள்ள சுயேட்சை பெற்ற சிறு சிறு யூனிட்கள் போன்றிருக்க வேண்டும். அந்தந்த நகர மக்களின் பெரும்பாலான காரியங்களும் அந்நகர சபையினராலேயே நிர்வகிக்கப்பட வேண்டும். அந்த அதிகாரம் அளிக்கப்படுவதோடு, இதன் தேர்தலில் எவரும் கட்சியின் பேரால் நிற்பதை அரசியலார் தடைப்படுத்தும் வகையில் சட்டம் விதிக்க வேண்டும் என்று கூறுகிற இருமுறைகளையும் பொதுமக்கள் எண்ணத்திற்கு ? பரிசீலனைக்கு விட்டுவிடுகிறோம்.
இயற்கைச் செல்வத்தை ? மக்கள் உழைப்பைத் தேசீய உடைமையாக்குவதுதான் எங்கள் திட்டம்; ஆனால் முதல் இல்லையே, அதற்கேற்றபடி திறமையான நபருமில்லையே என்று கண்ணீர்விடும் காங்கிரஸ் சோஷியலிஸ்டுகள், முதலைக் கண்ணீராய் இல்லாதிருந்தால், முதலில் இந்த வேலையை ஏன் தொடங்கக்கூடாது? நாட்டின் முழுப் பகுதியிலும், உடனடியாக இந்தத் திட்டத்தை நடத்திச் செல்லும் மனவுரம் இன்றைய ஆளவந்தார்களுக்கில்லை என்றாலும் குறிப்பிட்ட சில பகுதிகளிலாவது ? ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தின் கீழ் ஸ்தலத் தொழில்களை ? பெரும் வியாபாரத்தை ஏன் கொண்டுவரக் கூடாது? என்கிற எண்ணந்தான், நேரு சர்க்காரின் அநுதாபி என்று கூறிக்கொள்ளும் எவனுக்கும், பெரியார் அவர்களின் இந்தத் திட்டத்தைச் சிந்திக்கும்போது உண்டாகும் என்பது நிச்சயம்.
சிந்தனைக்குத் தெளிவாக, செயலுக்கு ஏற்றதாக, செய்வதற்கும் எளிதாக உள்ள இப்பேர்ப்பட்ட திட்டங்களை, நம் தேசீயசர்க்கார் எப்போதும் சிரித்துப் பேசிக் கிண்டல் பண்ணி வருவதுதான், அதன் வாடிக்கை என்பதை நாம் உணர்வோம். ஆனால் அந்தப் பருப்பு இனியும்வேகுமா? என்பதை இப்போது அவர்களே நினைக்கும் போதுதான், இந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சுயரூபத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாயிருக்கிறதே என்பதைப் பார்க்கும் போதுதான், இது அவர்களுக்கு எவ்வளவு பெரிய மனக் கசப்பை யுண்டாக்கியிருக்க வேண்டும் என்பது தெரியும்.
இதை மறைக்க எத்தனையோ திட்டங்களை அவர்கள் வெளியாக்கலாம். எங்கள் நேரு சர்க்காருக்கிணை இவ்வுலகிலுண்டோ என்று பலமாக முழங்கலாம். சோஷலிஸ நேருசர்க்கார்! சோஷலிஸ நேருசர்க்கார்!! என்று வாய்வலிக்கப் பெருமையாகச் சொல்லலாம், துந்துபி பாடலாம். ஆனால் சோஷலிஸம் சோரம் போனபிறகு, தனிப்பட்ட முதலாளித்துவத்திற்குத் தூவப்பட்டிருக்கும் விதை எத்தனை நாளைக்கு வெளியாகாமல் இருந்துவிடபபோகிறது? வயிறு பெருப்பதை மறைத்துக் கட்டிவிடலாம்! மாத முடிவில் வெளிப்பட்டுத்தானே தீரவேண்டும்?
தலையங்கம், குடி அரசு 19.03.1949