10. அழுத பிள்ளை பால் குடித்தது! ஆனால்….?

இந்த மாதம் 9-ம் தேதி தூத்துக்குடித் துறைமுகத்தில் ஏர்ஸ்டீமர் அண்டு ஜெனரல் ஏஜன்ஸீஸ் லிமிடெட் கம்பெனியாரின் முதல் கப்பலுக்கு, கவர்னர் ஜெனரல் ஆச்சாரியாரால், மறத்தமிழன் வ.உ.சி.யின் பேர் சூட்டப் பட்டிருக்கிறதே, இதை எண்ணும் போதுதான் அழுத பிள்ளை பால்குடித்தது என்று சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். ஆனால் பிள்ளைக்கு வயிறு நிரம்பிவிடுமா? வளர்ச்சியடையப் போதுமானதுதானா? பிள்ளை செழித்து வளரவேண்டுமென்கிற நல்ல நோக்கத்தோடு, பூரிப்போடு பீறிட்டெழுந்த நற்றாயின் பால் ஆகிவிடுமா? என்றும் உடனேயே கேட்கவேண்டியவர்களாயும் இருக்கிறோம்.

வேதியர்களின் கூட்டுறவால் இந்த நாட்டு வேந்தர்களின் பரம்பரை, ஒருவரோடு ஒருவர் பகைத்து ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நிலைகுலைந்து, சிதறுண்டு சீரழிந்துகிடந்த நிலையைப் பற்றுக் கோடாகக் கொண்டு, அதே வேதியர்கள் கைநீட்டி வரவேற்க ஆறாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள வெள்ளையர், அசைத்துவிட முடியாது என்கிற உறுதியோடு அரிய தொரு சாம்ராஜ்ஜியக் கோட்டையை நிறுவினார்கள் என்றாலும், அதன் ஆணிவேர் வெள்ளை வியாபார வேந்தர்களே. இந்தக் கோட்டையை இடித்துத் தகர்க்க வேண்டுமென்றால், இவ்வணிகத் துறைக்கு மூலபலமாயிருக்கும் கப்பல் தொழிலை நாம் கைப்பற்ற வேண்டும். இதை இந்நாட்டுக் குணர்த்தியவர் ? இந்தியா முழுமைக்கு பறை சாற்றியவர் ? ஒரே ஒரு திராவிடர்! அவர் மறத் தமிழர் சிதம்பரனார்!

உத்தமர் காந்தியாரால், பரதேசப் பொருள்களைப் பகிஷ்காரஞ் செய்யுங்கள்! என்று உரைக்கப்பட்டதற்கு முன்னாலேயே வெள்ளையனின் வியாபாரத்தை விட்டொழியுங்கள்! என்று வேண்டியவர் வீரர் சிதம்பரனார்! விட்டு விட்டால் வேறுவழி என்ன? என்று ஏங்காதீர்! சுதேசி ஸ்டீம்சர்வீசை ஆரம்பித்திருக்கிறேன்! சுயமரியாதையுடன் ஒத்துழைப்பீர்! என்று சொல்லால் மட்டுமல்ல, செயலால் 1906-ல் செய்து காட்டிய தீரர் அவர்!

சுதந்தரப் போரில், வெள்ளை வணிகரோடு போட்டியிட வேண்டும்; வெள்ளையரின் கடலாதிக்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்கிற சிந்தனை, வீரர் சிதம்பரனாரைத் தவிர வேறு எவருக்கும் ஏன் உண்டாகவில்லை? சுதந்தர வெறிக்குப் பேர்போனவர்கள், வங்காளியரும் மற்ற வடநாட்டினரும்தான் என்று, இன்றைக்கும் ஒப்புக்கொண்டு பேசும் நம் ஏமாந்த காங்கிரஸ் திராவிடர்கள், இதை எண்ணிப் பார்க்கவேண்டும்!

கடலாதிக்கத்தைக் கைப்பற்றவேண்டும் என்கிற எண்ணம் – அதற்கான. நெஞ்சுரம் – திராவிடனுக்கு இயற்கையாய் அமைந்தது. ஏன்? அது அவன் உரிமை!

மூன்று புறங்களிலும் கடலால் சூழப்பெற்ற நாடு திராவிட நாடு! பரம்பரையாக மூவேந்தர்களும் கடலாணை செலுத்திய நாடு நம்தென்னாடு! கடல்கள், மன்னர்களின் கால்களை வணங்கிய நாடு என்று, கவிவாணர்களால் புகழ்ந்தேத்தப்பட்ட நாடு இது! திரை கடலோடியும் திரவியம் தேடு! என்னும் முதுமொழியைச் சிறப்பாகக் கைக்கொண்ட நாடு நம் நாடு! இந்த நாட்டுக் கப்பல்கள், இக்காலத்திய இயந்திர சாதனங்கள் அமையப் பெற்றவை என்றில்லாவிட்டாலும், ரோமரும் யவனரும் வியக்க, நடுக் கடலில், பாய்மரக் கப்பலைக் கொண்டு, நீர்கிழியப் பாய்ந்து சென்றவர் நம் தென்னாட்டார்! ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, அலை கடலை ஏவல் கொண்ட பரம்பரை திராவிட இனம்! நான்கு நிலத்தில், கடலை நெய்தல் நிலமாகப் பிரித்து, நானிலத்தோர் கொண்டாடும்வண்ணம் வாழ்ந்தவன் திராவிடன்! இதனை நெஞ்சில் நிறுத்தினால், இந்தக் கப்பலோட்டும் கருத்து வீரர் சிதம்பரனார்க்கு மட்டும் ஏன் உண்டானது? மற்ற வடநாட்டுச் சுதந்தர வெறியர்களுக்கு ஏன் உண்டாகவில்லை? என்கிற கேள்வி எழாது!

தமிழ்ப் பற்றும், தமிழினப் பற்றும் கொண்ட அறிஞர் சிதம்பரனார் – நாவன்மை படைத்த நாவலர் எனப் பேர்பெற்றிருந்தும், வருவாயைப் பெருக்கும் வழக்கறிஞர் வேலையைக் கைவிட்டு, படைபலமும் பணபலமும் மிகுந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தோடு போட்டியிடத் துணிந்தார் என்றால், அது, பிறகு உண்டான சிந்தியா கம்பெனியாரைப் போன்ற வியாபார நோக்கத்தோடு என்று யார்தான் கூறிவிடமுடியும்? பரம்பரையான நம்முரிமை, வெள்ளையனால் பறிக்கப்பட்டு விட்டதே என்கிற உரிமை வேட்கையும், சுயமரியாதையுமல்லவா இவ்வெழுச்சிக்குக் காரணம்?

இந்த உரிமை வேட்கையினால் – சுயமரியாதை உணர்ச்சியினால் நெஞ்சுரத்தோடு இதில் ஈடுபட்டார் என்றாலும் அவரடைந்த பலன் என்ன? நன்றி கெட்ட நாட்டிற்காகவா, நான் இந்த முயற்சியில் ஈடுபட்டேன் என்று சிறையிலுழன்று செக்கிழுத்தபோது எண்ணாவிட்டாலும், சிறையினின்றும் வெளியேறியபின் தேசீயத் தோழர்கள் – தேசீய முன்னணி வீரர்களான பார்ப்பனர்கள் கைவிட்டபோது, உள்ளம் நைந்து நைந்தல்லவா, இறந்தொழிந்தார்? அந்த வீரனுக்கு, அந்த வீரனைப் போன்ற எண்ணற்ற பலர் ஈந்த உயிர்த்தியாகத்தினால் விளைந்த சுயராஜ்ஜியம் என்று சொல்லப்படும் இக்காலத்தில் செய்ய வேண்டிய நன்றி யென்ன? காட்டவேண்டிய மரியாதை என்ன?

நன்றியும் மரியாதையும் தான் நாளது மாதம் 9-ந்தேதி நடந்த பெயர் சூட்டல் என்கின்றனர். அதைத்தான் அழுத பிள்ளை பால் குடித்தது என்கிறோம் நாம். ஏன்? சுதந்தர நாட்டில், பிற நாட்டுக் கப்பல்களை விலைக்கு வாங்கி, அதன் பழைய விலாசத்தை மாற்றிப் புதுவிலாசம் கொடுப்பது என்கிற சடங்கு, ஒன்று; இரண்டு, மூன்று எனப் பல நடந்து விட்டன. தியாகத்திற்கு மதிப்பு வைக்கும் போக்கு இந்நாட்டுத் தேசீய சர்க்காருக்கு உண்டு என்றால், தேசீயம் வியாபாரம் செய்யப்படுகிறது என்பது உண்மையில்லை என்றால், இந்த நாட்டின் முதல் கப்பலுக்குச் சிதம்பரனார் பெயரல்லவா சூட்டப்படவேண்டும்? ஜல உஷாக்களும் ஜல பிரபாக்களும், தில்லிகளுமா செய்ந் நன்றியைக் காட்டும் முறை, என்னும் திராவிடனின் ஏக்கமல்லவா? உள்ளக்கு முறலல்லவா? இந்த எஸ்.எஸ்.வ.உ.சிதம்பரம்? ஆகவேதான் அழுத பிள்ளை பால் குடித்தது என்கிறோம், மேலும் அதை அன்புப் பால், இல்லை என்றும் கூறுகிறோம். ஏன்? பெயர் சூட்டிய ஆச்சாரியாரே பேசுகிறார், அதை முதலில் கேளுங்கள்.

தூத்துக்குடிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இப்போது பரிகாரம் ஏற்பட்டு விட்டது. இது ஆச்சாரியார் மனவேததனையோடு, மறைக்க முடியாது என்கிற நிலையில் கூறியிருப்பதாகும். மேலும் வெள்ளையர் இழைத்த அநீதியா? வடவர் இழைத்த அநீதியா? என்கிற உண்மையை, உணர்ந்து கொள்ளுகிறவர் உணர்ந்து கொள்ளட்டும் என்கிற மனதைரியத்தோடு, மறைத்துக் கூறப்பட்டிருப்பது மாகும்.

வெள்ளையன் அநீதி இழைத்தான் என்றால், அது தூத்துக்குடிக்கு மட்டும் இழைத்த அநீதியல்ல, இந்தியாவுக்கே இழைத்த அநீதியாகும். இதை ஆச்சாரியார் நன்குணர்வார். அவர் கூறுகிறார் தூத்துக்குடிக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று.

வடவர்களின் ஏகாதிபத்தியத்திற்குக் கண்காணியாய் இருந்து தீரவேண்டிய நிலையிலிருக்கும் ஆச்சாரியார், எப்படி வடவர்கள் செய்த அநீதி என்று வாய்விட்டுக் கூறிவிட முடியும்? ஆகவேதான் குல்லூகப் பட்டர் என்பதும் பொய்த்துவிடக் கூடாதே என்கிற எண்ணத்தோடு, தூத்துக்குடிக்கு இழைக்கப் பட்ட அநீதி என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்.

எப்படியோ, காலங்கடந்த இந்தச் செயலை – திராவிடர்களின் மனக் கொதிப்புக்காகச் செய்த செயலை, சிதம்பரனார்க்கு இழைக்கப்பட்ட ? தேசீய வீரனுக்குச் செய்யப்பட்ட பெரும் அநீதி என்று, மறைமுகமாகவாவது ஒப்புக்கொள்கிறாரே, அதைக் கண்டு நாம் அவரைப் பாராட்டுகிறோம். ஆனால் இப்போது பரிகாரம் ஏற்பட்டுவிட்டது! என்கிறாரே, இது உண்மையான பரிகாரந்தானா? என்று நாம் அவரைக் கேட்கிறோம். அநீதி என்பதை உணர்ந்த ஆச்சாரியார் – திராவிடத்தின் ஆத்திரத்தை அறிந்த கவர்னர் ஜெனரல், மேலும் வேண்டிக்கொள்கிறார் திராவிடர்களை நோக்கி, சென்று போன காலத்திய மாற்சரியமும், அறியாமையும், துவேஷமும் ஒழிந்து போகட்டும் என்று. இந்த இதோபதேசத்தைத்தவிர இந்திய யூனியன் கவர்னர் ஜெனரலிடத்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஆனால் இதோப தேசங்களால், திராவிடரின் உரிமை வேட்கைத் தீயைத் தணித்து விடலாம் என்று, உண்மையாகவே நம்புகிறாரா? என்றுதான் நாம் கேட்கிறோம்.

இப்போது வ.உ.சியின் பேர் கப்பலுக்குச் சூட்டப் பட்டிருக்கின்றதென்றால், அதாவது மத்திய அரசாங்கம் என்கிற தாயினால், மாகாண அரசாங்கக் குடிகள் என்கிற பிள்ளைக்குப் பெருமை தரக்கூடிய வகையில் பெயர் சூட்டுதல் என்கிற பால் கொடுக்கப் பட்டிருக்கிறதென்றால், இந்தப் பாலானது மாகாண மக்கள் அழுத அழுக்கைக்குப் பிறகுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது! அதுவும் குழந்தையின் வளர்ச்சிக்கு, காலமறிந்து, பாலூட்டவேண்டிய நேரத்தை எண்ணிக் கொடுக்கப்பட்ட உத்தமத் தாயின் போக்கோடு அல்ல! அழுதவுடனேயே பால் கொடுக்கும் மத்திமத் தாயின் போக்கும் இதுவல்ல! அழுதழுது ஒய்ந்த பிறகு (அடுத்த வரவிருக்கும் தேர்தலை எண்ணி) அந்நியத்தாய் என்று பிறர் கருதிவிடுவார்களோ என்று கொடுத்த, ஒரு அதமமான தாய் என்றே திராவிடன் தெளிவாக உணர்ந்து விட்டான் என்பதை, நாம் ஆச்சாரியாருக்கு வற்புறுத்திக் கூறுகிறோம்.

குடி அரசு 12.02.1949

You may also like...