19. பொறுத்துப் பார்ப்போம்
உண்மை தோற்றது, பொய்ம்மை வெற்றி பெற்றது. நாணயம் நலிந்தது, நம்பிக்கைத் துரோகம் செழித்தது. யோக்கியதைக்குமதிப்பு இல்லை, அயோக்கியத்தனத்திற்கு ஆடம்பர வரவேற்பு ? இவை இன்று இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் பேச்சு. ஆம்! ஓமந்தூரார் என்றைக்கு, தான் ராஜினாமாச் செய்யப்போவதாகச் சொன்னாரோ, அன்று முதல் சென்ற 10- நாளாக எங்கும் இதே பேச்சுத்தான்.
இவ்வளவுக்கும் ஒமந்தூரார் ஆட்சியில், இந்த நாட்டு மக்களின் குறைபாடுகள் எல்லாம் போக்கடிக்கப்பட்டன, வயிறார மக்கள் பசி தீரவுண்டனர், அறியாமை அழிக்கப்பட்டு மக்கள் அறிவில் உயர்ந்து விளங்கினர் என்று சொல்லக்கூடிய நிலையில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓமந்தூரார் ஆட்சியில்தான் இந்த நாட்டுத் தொழிலாளிகள் ஈவு இரக்கமற்ற முறையில் ஒடுக்கப் பட்டார்கள். மொழிப்பற்று உடைய இளங்காளையரும், தாய்மாரும் மூர்க்கத்தனமான வழிகளால் – காட்டுமிராண்டிப் போக்கோடு தாக்கப் பட்டனர். இன்னும் எத்தனை எத்தனையோ தொல்லை! இருந்தாலும் ஒமந்தூராரின் ராஜினாமா, உண்மைக்கும் நாணயத்திற்கும் யோக்கியதைக்கும் ராஜினாமாவாகக் கருதப்படுகிறது என்றால், இதிலுள்ள உண்மை என்ன என்பதை, ஓமந்தூராரை வெற்றி கொண்டதாக மனப்பால் குடிக்கும் தோழர் காமராஜர் எண்ணிப் பார்க்கவேண்டும்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பார்ப்பனீயத்துக்கும், பனியாக்களுக்கும் அடிமை யாக்கப்பட்டிருக்கும் ஒரு அரசியல் அமைப்பில், அங்கம் வகிக்கின்ற யாராயிருந்தாலும், இந்த நாட்டு மக்களின் நலத்திற்காக என்றோ, பெருமைக்காக என்றோ, உரிமைக்காக என்றோ ஒரு சிறு காரியத் தையும் செய்ய இயலாது என்பதை பெரும்பாலான மக்கள் நன்றாகப்புரிந்து கொண்டுவிட்டார்கள். இந்த அமைப்பையுடைய ஆட்சியில், ஒமந்தூராருக்குப் பதிலாக வேறுயார் வந்தாலும் (இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாயிருக்கும் தோழர்களுக்குள்) அவரால் நாட்டுக்கோ ? நாட்டு மக்களுக்கோ ஒரு பயனையும் எதிர்பார்க்க முடியாது என்று தீர்க்கமாக முடிவு கட்டிவிட்டார்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு என்ன காரணத்தைக் கூறமுடியும் என்று நாம்தோழர் காமராஜரைக் கேட்கிறோம்.
ஓமந்தூரார், தன் ஊருக்குச் சென்று ஓய்வு பெற்றுக்கொள்ள, மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டேன், மக்களுக்கு நான் பிரதிநிதியல்ல; ஆதலால் என்ராஜினாமாவை ஏற்றுக்கொள்க! என்ற ராஜபாளையத்தார் நாட்டையாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றாலும், ஒமந்தூராரின் இன்றைய ஒய்வுக்குக் காரணம் 1. பொதுநலத்தின் பேரால் சுயநல வாழ்வையே போற்ற வேண்டியது என்ற முடிவுக்கு வந்த எம்.எல்.ஏக்கள்சிலர், 2. அதை ஆதரித்துத் தூபம் போட்டு வளர்த்து, அந்த நிலையைத் தான் ஏன் அடையக்கூடாது என்று கருதிய மந்திரிகள் சிலர், 3. ஓமந்தூரார் கையாண்ட வகுப்பு நீதிக்கு எதிராக எழுந்த பார்ப்பனீய நயவஞ்சக வேலை ஆகிய இந்த மூன்று கருவிகளையும், பார்ப்பனீயப் பாதம் வருடும் தனக்கு, ஒன்றாக்கி உபயோகிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுதான் என்பதைத் தோழர்காமராஜர் அறியாதவரல்ல. ஆனால் இதைத் தன்னுடைய வெற்றி என்று நினைப்பாரேயானால், அது அவருடைய அழிவுக்கு அறிகுறியேயாகும்.
நிற்க, ஓமந்தூரார் ஒதுங்கியதாலோ, ராஜபாளையத்தார் பிடித்து வைக்கப்பட்டதாலோ, நம்மைப் பொறுத்தவரை அனுகூலமோ, பிரதிகூலமோ ஒன்றும் இல்லை. எப்படியும் திராவிடர்தான் பிரதமராகமுடியும் என்பதுதான், இந்தச் சூழ்ச்சி வேலைப் பாட்டாலும் கூட மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மந்திரிகளின் எண்ணிக்கை பெருகினாலும்கூட, பார்ப்பனர்களுக்கு ஒன்றா? இரண்டா? என்றுதான் முடிவுகட்ட வேண்டியிருக்கிறது. வேண்டுமானால் பார்லிமெண்டரி செக்கரட்டரியாக எத்தனைபேரை அதிகப்பட்சமாக நுழைக்கலாம் என்று ஆலோசனை செய்து தீரவேண்டியதாகத்தானிருக்கிறது. இந்த அளவுக்காவது தங்களுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார்கள் எம்.எல்.ஏக்கள் என்றுதான் கூறவேண்டும்.
ஆசை வார்த்தை பேசினால்தான், அக்கிரம நடத்தைக்கெல்லாம் அனுகூலமாக நடந்து கொண்டால்தான் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கண்டுகொண்டு, பதவியை உதறித் தள்ளிய ஓமந்தூராரை – அவரின் நேர்மைக்காக நாம் பாராட்டுகிறோம்.
மானத்தை விற்றேனும் வாழ்வதே மேல் என்று பழகியிருக்கும் சில திராவிடர், ஓமந்தூரர் மந்திரிசபையில் ஒட்டிக் கொள்ளத் தூண்டியும் கூட, அதை அற்பர்களின் இழி செயல் என்று தெளிந்து, அகமலர்ச்சியோடு கை கழுவிவிட்ட அவரின் மனவுறுதியைப் பெரிதும் போற்றுகிறோம்.
பார்ப்பனீயச் சதிச் செயல் வெற்றி பெற்றது என்றாலும், அது ஒரு திராவிடரின் உருவில்தான் என்பதை எண்ணும்போது கட்சித் தலைவராய் – பிரதமராய் வைக்கப்பட்டிருக்கும் தோழர் குமாரசாமி ராஜா அவர்களையும் வரவேற்கிறோம். ஆனால் இன்றையப் புதுப் பிரதமரான ராஜபாளையத்தார், எந்த அளவுக்கு வெற்றியாகத்தான் நிர்வாகத்தை நடத்திக் கொண்டுபோக முடியும் என்பதில், நாம் உண்மையாகவே ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் தானிருக்கிறோம்.
ஓமந்தூரார் ஏன் ராஜினாமாச் செய்தார்? என்பதை ராஜா அவர்கள் எண்ணுவாரேயானால், அவரை ராஜினாமச் செய்யச் செய்த எம்.எல்.ஏக்களும், மந்திரிகளும், பார்ப்பனீயப் பாவையான காமராஜரும் அவர் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. அந்த நல்லோர்களின் ஆதரவுதான் தனக்கு என்று அவர் அடுத்தபடியாக நினைப்பாரேயானால், அவர் நிச்சயமாகப் பெருங் கலக்கத்திற்குத் தானே ஆளாக வேண்டிருக்கும்.
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், இன்றைய புதுப்பிரதமர், ஓமந்தூராரின் துரோகிகள் என்று சொல்லப் படவேண்டிய ஏழுபேரைத் தன் சகாவாகக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட முடியாது. அதுபோலவே ராஜபாளையம் தன்னுடைய எந்தச் செயலுக்கும் நன்றி விசுவாசந்தான் காட்டவேண்டும் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு இனத் துரோகியின் முழு ஆதரவில்தான் இருக்கிறோ மென்பதையும் மறக்கமுடியாது.
இந்த நிலையில் சிக்கிக்கொண்டிருக்கும் தோழர் ராஜா அவர்கள், இனி எப்படி நடந்கொள்வாரோ? பொறுத்துப் பார்ப்போம்.
குடி அரசு, தலையங்கம் 09.04.1949