சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

திராவிடர் விடுதலைக் கழக தலைமை குழு கூட்டம் ஜூன் 23 காலை 10:30 மணியளவில் பெருங்குடியில் கழகப் பொதுச் செயலாளர் இல்லத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர்கள் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ,அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, சூலூர் பன்னீர்செல்வம், விழுப்புரம் அய்யனார், காவலாண்டியூர் ஈஸ்வரன், சென்னை இரா.உமாபதி, அன்பு தனசேகர், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

தமிழ்நாட்டில் கிராமங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று பார்த்த அனுபவங்களை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட பட்டியல்களை தொகுத்து மாவட்ட காவல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம், மனித உரிமை ஆணையத்தில் நேரில் வழங்குவது என்றும் இம்மாத இறுதிக்குள் முதல் கட்ட பட்டியல் தயாரிப்பை இறுதி செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 

தமிழ்நாட்டில் நிகழும் சனாதனம் என்ற பார்ப்பனியத்துக்கும் திராவிடம் என்ற சமூக நீதி தத்துவத்துக்குமான போராட்டங்களை விளக்கி ஆயிரம் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என கழக செயலவையில் தீர்மானித்த முடிவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு இரண்டு தெருமுனை கூட்டங்களை நடத்துவது என்றும், பொதுமக்களிடம் வழங்க துண்டறிக்கைகள் ஒன்றிய பாஜக பார்ப்பனிய ஆட்சி தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நடத்தும் திராவிட மாடல் ஆட்சியை முடக்குவதற்கு ஆளுநர், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அதிகார அமைப்புகளை முறைகேடாக பயன்படுத்துதல் போன்றவை சனாதானத்தை திணிக்கும் முயற்சியே என்பதை மக்களிடம் விளக்குவது என்றும், இதுகுறித்தும் மோடி ஆட்சியில் மாநில உரிமைப் பறிப்புகளை விளக்கும் நூல்களையும் குறைந்த விலையில் சிறு வெளியீடுகளாக வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் பார்ப்பனிய சனாதன சக்திகள் தமிழ்நாட்டை மட்டும் குறி வைத்து தங்களது முழுமையான அதிகாரத்துடன் அடக்கி ஒடுக்கி பணிய வைத்து விடலாம் என்று மனப்பால் குடிப்பதை தமிழ்நாடு முறியடிக்கும் என்றும், இது திமுகவுக்கு எதிரான நடவடிக்கையாக சுருக்கி பார்க்க முடியாது, பெரியாரின் சமூகநீதி தமிழ்நாடு மீது நடத்தப்படும் படையெடுப்பாகக் கருதி களத்தில் பரப்புரையை தீவிரமாக முடுக்கி விட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. சேலம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 29062023 இதழ்

You may also like...