3. விரைவில் உருவாக்குங்கள்!

நமது சென்னை சர்க்காரும், சில சமயங்களில் அறிந்தோ, அறியாமலோ ஒரு சில பயனுள்ள காரியங்களைச் செய்யப்போகின்றோம் என்று சொல்லி வைக்கிறார்கள். இதைக் கேட்கும் போது, நாம் அவர்களை அவசியம் பாராட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஏன்? அப்படியே நிறைவேற்றிவைத்து விடுவார்கள் என்கிற உறுதியினாலா? என்றால், நம்மைப் பொறுத்தவரை முழுமனதுடன் நம்புவதற்கில்லை யென்றாலும், ஏதோ இந்த அளவாவது செய்யப்போகிறோம் செய்வதாகத் திட்டமிருக்கிறது ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப் பத்திரிகைகளில் பார்க்கும்போது இப்படி வாயினாலாவது சொல்லுகிறார்களே என்பதை எண்ணித்தான் பாராட்டுகிறோம்.

இந்து மதக் கடவுளர்களின் வேஷங்களைப் போட்டுக்கொண்டு சினிமாப் படங்களில் நடிகர்கள் நடிப்பதென்பதைத் தடைவிதித்து ஒரு திட்டம் தயாரிக்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறது சென்னை சர்க்கார் என்கிற செய்தியை 2-வாரத்துக்கு முன்னால் படித்தபோது நாம் பெருமகிழ்ச்சியடைந்தோம். இதனை வரவேற்றுப் பாராட்டி, தஞ்சையில் கூடிய மத்திய திராவிடக்கழகக் காரியக் கமிட்டியும் நல்ல செயல்களை எந்த இடத்தில் கண்டாலும் நாங்கள் பாராட்டத் தயங்கமாட்டோம் என்பதுபோலத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நாட்டு மக்கள், இவ்வுலக வாழ்வில் கவலையற்றவர்களாய், சொல்லப் போனால் வாழ்விலேயே வெறுப்புற்றவர்களாய் நடித்துக் கொண்டு, எதற்கெடுத்தாலும் வெட்டி வேதாந்தம் பேசும் சாமர்த்தியசாலிகளாய், கையாலாகாத நடைப்பிணங்களாய்ப் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றால், அதற்குக்காரணம் இந்த நாட்டில் பரப்பப்ட்டிருக்கும் அர்த்தமற்ற இந்துமதமும், அதையொட்டி உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் ஆபாசக் கடவுளர்களும், அவர்கள் வண்டவாளத்தை வெளிப்படுத்தும் புராண இதிகாசங்களுமே.

வாழ்வில் பற்றுடையவர்களாய், செயலில் திறனுடைவர்களாய் எண்ணத்தில் எழுச்சி கொண்டு இந்த நாட்டவரும் மற்ற நாட்டவரைப்போல் முன்னேற்றத் துறைகளில், விஞ்ஞானப் பாதையில் நடந்து செல்லவேண்டுமானால், புராண இதிகாசங்கள் பொசுக்கப் பட்டாக வேண்டும். ஆபாசக் கடவுளர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். இந்துமதம் இறந்தொழிய வேண்டும். இவை இறந்தொழிந்து மறையாதவரை ? மறைக்கப் படாதவரை எந்த நிர்மாணத் திட்டங்களாலும், எவ்வளவு பெரிய ஆக்க வேலைகளாலும், எந்தமாதிரியான உபதேசங்களாலும் முன்னேற்றம் உண்டாகிவிடும் என்பது முயற்கொம்பே. இந்த உண்மையை, வரும் பொருள் உணரும் வன்மை யுடையோர் எவரும் உணரவே செய்கிறார்கள் என்றாலும், அவர்களின் இரட்டை வாழ்வு அதை வெளிப்படுத்தும் வலிமையைக் கொடுக்கவில்லை. மிகப்பலர் உணரவே மறுக் கின்றார்கள்.

இந்த நிலையில் நம் சென்னை சர்க்கார் ஆலோசனையிலிருக்கும் இந்தத் திட்டம், மக்கள் வாழ்வில் நஞ்சைக்கலக்கும் மதத்தையும், மனதை உருக்குலைக்கும் மாயா விநோதக் கடவுளர் களையும் மக்கள் மறந்து விட்டு, வாழ்வில் பிடிப்புடையவர்களாய், மனவுறுதி உடையவர்களாய், உண்மையான பரிபூரண விடுதலையோடு உயர் வாழ்வு வாழவேண்டும் என்கிற அடிப்படையில் இல்லை. படவுலகில் பரமாத்துமாக்களின் சஞ்சாரம் மிக மிக அதிகமாகி, அதனால் மக்களின் பக்தியுணர்ச்சி பாதிக்கப்பட்டு விட்டதாம், நாஸ்தீக உணர்வு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறதாம். ஆகவே இந்த நிலைமையை மாற்ற, பக்தியுணர்வு சுடர் விட்டு வீசு, படக்காட்சிகளில் பரமசிவன் வகையறாக்களை, வேஷம், போட்டுவேறு எவரும் நடிக்கக் கூடாது என்று விளக்கம் கூறுகிறது. இதற்கு ஆதாரமாக மற்ற மதங்களைத் துணைக்கழைத்திருக்கிறது சர்க்கார். கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஏசுவையும், மகமதிய மதத்தைச் சேர்ந்த மகமதுவையும், பௌத்த மத்தைச் சேர்ந்த புத்தரையும் எப்படி படக்காட்சிகளில் காண்பிக்கும் பழக்கமில்லையோ, அப்படியே இந்துமத விஷயத்திலும் ஏன் அனுசரிக்கக்கூடாது என்றுமத வாதிகளை நோக்கிக்கேட்கின்றனர்.

கடவுளைக் காப்பாற்றப் போகிறோம் என்கிற இந்தக் கடைகெட்ட போக்கு எப்படியிருந்தாலும், கடவுளர் வேஷங்களைப் போட்டு நடித்து அவற்றைத் திரையிடக்கூடாது என்று தடைப்படுத்தப் படுமேயானால், ஓரளவாவது மக்களின் அழிவுப்பாதை மூடப்படுகிறது என்கிற காரியத்தினாலேயே நாம் சர்க்காரின் இந்த ஆலோசனையை வரவேற்கிறோம்.

மேலைநாட்டு விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் எல்லாம், பூஜைக்குரியதாய், புனிதமென மதிக்கத்தக்க வகையில் கைக்கொள்ளப் பட்டு வருகிறது. அதாவது விஞ்ஞான விளைவுகள் எல்லாம் அஞ்ஞானக் கொட்டடியில் போட்டு அடைக்கப்படுகிறது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு சினிமா ஏன்?

மனிதனின் மதி நுட்பத்தால் விளைந்து சினிமா. மகேஸ்வரனின் திருவருளோ மகாத்மாக்களின் அற்புதமோ இதைக்கண்டு பிடிக்கவில்லை. ஆனால் மதியால் விளைந்த அது, மற்ற நாடுகளில் மதியை வளர்க்க, வலுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இங்கோ மதியை அழிக்க, மதியில் மடமையை நட்டு வைக்க அதுவே கருவியாகக் கையாளப்படுகிறது. அதிசயம்தான். ஆனால் உண்மை.

இதனை, இதுபோன்ற வேறு பல விஞ்ஞான விளைவுகளை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது இந்நாட்டுப் பார்ப்பனீயம். இன்று மட்டுமல்ல, இந்த நாட்டில் எந்த நாளில் ஆரிய இனம் அடி எடுத்து வைத்ததோ, அந்த நாளிலிருந்தே கலையைக் கொலைக் கருவியாகக் கைக்கொண்டு விட்டது. அதனால்தான் பள்ளிக்கூடமே பார்த்தறியாத பாமரன்கூட, வள்ளியை மணக்க மாறுவேஷம் பலபோட்ட சுப்பிரமணியனையும், ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு அம்மணமாய் நின்றுகும்பிடுங்கள் என்று கோபியரை நோக்கிக் கூறிய கோபால கிருஷ்ணனையும் அறிந்திருக்கிறான். அந்த அளவுக்கு, இந்த நாட்டில் எந்தெந்தக் கலைகளுண்டோ, அந்தக் கலைகளின் அஸ்திவாரமெல்லாம் இந்தக் கடவுளர்களைவைத்தே மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறது.

மேலும், மற்ற பல கலைகளைக் காட்டிலும் படக்கலைதான் இன்று பார்ப்பனீயத்தின் நச்சுக் கருத்துக்களுக்கு ஊற்றிடமாகவும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கு  பாதைகள் போட்டுத் தருவதாகவும் இருக்கிறது என்பதை எண்ணும் போது, சர்க்காரின் இந்தத்திட்டம் உருவாகுமா? அல்லது கருவிலேயே கருகிப் போய்விடுமா? என்றே நாம் சந்தேகிக்கிறோம்.

இப்போதே பல பார்ப்பனர்கள் சத்தம் போடத் தொடங்கிவிட்டார்கள். கலைக்கு ஆபத்து! கடவுள்களை விட்டு விட்டால் கலை எப்படி உயிர் வாழும்? என்று கதறுகிறார்கள். போகப்போக இந்தக் கதறல்  எப்படி எப்படிப் போகுமோ, சர்க்காரின் கருவிலிருக்கும் திட்டம் சிதையாதபடி பூரண உருவோடு பிரசவமாகுமோ? என்று சந்தேகப்படவேண்டிய நிலையிலிருந்தாலும்,

இதனை விரைவிலேயே சர்க்கார் சட்டமாகக் கொண்டு வரவேண்டுமென்பது நம் ஆவல். பார்ப்பனர்களின் பாய்ச்சலினால் இன்றைய மந்திரிசபையின் பல திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்டன என்பதை நாடறியும். இதுவும் அந்தப்பட்டியலில்தான் இடம் பெறுமா? அல்லது செயலுக்கு வருமா? என்பதை நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

இந்தத் திட்டம், ஒரு பிற்போக்கான கருத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டுவரப்படுகிற தென்றாலும், இதை விரைவில் உருவாக்குங்கள் என்பதே நாம் சர்க்காருக்குக்கூறும் ஆலோசனை. இன்றேல், எக்காரணத்திலாவது இது தடைப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தப்பட்ட திட்டம் விகாரப்படுத்தப் பட்டு விடுமானால், சர்க்காரின் அறிவிப்பால் உண்டான மகிழ்ச்சிக்கும், மலமுருட்டும் வண்டு மண்மேல் எழுதும் எழுத்தைக் கண்டு மகிழும் மகிழ்ச்சிக்கும் வித்தியாசமென்ன? என்றுதான் எவராலும் கேட்கப்படும்.

குடி அரசு 08.01.1949

 

 

You may also like...