21. மஞ்சள் கரைகிறது, கரைந்து கொண்டே வருகிறது
இந்தியாவில் கம்யூனிஸம் பரவிவருகிறதா? கம்யூனிஸம் என்றால் இரு விஷயங்களைக் குறிக்கும். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி; மற்றொன்று வறுமை காரணமாக ஏற்படும் அதிருப்தி. முன்னையதை இந்தியா சட்டை செய்யவில்லை. ஏனென்றால் பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற முடியாது. இது ஒரு கேள்வியும் பதிலும். கேள்வி கேட்டவர், லண்டன் டெயிலி மெயில் என்ற பத்திரிகையின் நிருபர். பதில் கூறியவர் இந்துஸ்தான் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்கள்.
இங்கு, நாம் இதை எடுத்துக்காட்ட எண்ணியது, இந்தியா என்ற பெரிய நிலப்பரப்பில் – உபகண்டத்தில், கம்யூனிஸம் எந்த அளவில் பரவியிருக்கிறது என்பதை எடை போட்டு நிறுத்த, எடுத்துக் காட்டவேண்டுமென்கிற எண்ணத்தோடல்ல. கேள்விக்குப்பதிலாக இந்துஸ்தானத்தின் முதல் மந்திரி கூறியிருக்கும் பதிலில், எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது; இந்த மஞ்சள் குளிக்கும் நிலைமை இன்னும் நீடிக்குமென்கிற ஒரு நினைப்புக்கு இடமுண்டா? என்பதை எடுத்துக்காட்ட வேண்டுமென்பதற்காகத்தான்.
கம்யூனிஸ்ட் கட்சியால், நாட்டில் பரப்பப்படும் கருத்துக்களால் உண்டாகும் கம்யூனிஸம்; சுரணடல்காரர்களின் ஆதிக்கம் நீடிப்பதால், தொடர்ந்து இருந்து வரும் வறுமை காரணமாக உண்டாகும் கம்யூனிஸம் என்பதாகக் கம்யூனிஸத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கிறார் நேரு அவர்கள்.
பொதுவுடைமை ஆக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடான பிரச்சாரம் ஒன்று; பொதுவுடைமை ஆகவேண்டும் என்கிற கட்டாய நிலை ஒன்று என்பது அவர் காணும் கருத்து. முந்தியது செயற்கை என்றால் பிந்தியது இயற்கை என்பதும் அவரின் நம்பிக்கை. நோயுள்ள நிலையில் தான் மருந்து தேவைப்படும்; மருந்துக்கு அவசியம்.
வழி தவறிய நிலையில்தான், வேறு வழி – நேர்வழி தேவைப்படும்; அந்த வழிக்கு அவசியம். தேவையில்லாத நிலையில், செய்யப்படும் பிரச்சாரத்தால், அந்தத் தேவையில்லாத நிலையை உண்டாக்கிவிடலாம் என்பது முடியாத ஒன்று; முடிந்தாலும் நீடித்து நில்லாது. ஆனால் தேவையான நிலையில், தேவைக்கு ஏற்றபடி சிந்தித்துச் செய்யப்படும் பிரச்சாரம் தீயில் எண்ணெயைக் கொட்டியது போலவல்லவா? வறுமையால் உண்டாகும் அதிருப்தி கம்யூனிஸத்திற்கு வழி வகுக்கும் என்றால், கம்யூனிஸத்தைப் பரப்ப வேண்டும் என்கிற பிரச்சாரம் எப்படி வெற்றி பெறாமல் போய்விட முடியும்?
நாட்டுக்கு ? நாட்டு மக்களுடைய நிலைக்கு ஏற்ற திட்டமில்லாமல் ரஷியாவின் ஏஜண்டு களாயிருந்து, கொண்டு கம்யூனிஸம் என்கிற தூய்மையான திட்டத்தைப் பழிக்க வைக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் வறுமையும் வாட்டமும், வேதனையும் விம்மலும் அதிகரிக்க அதிகரிக்க, மற்றொரு பக்கம் வளமும் வளப்பமும், இன்பமும் ஏக்களிப்பும் பெருக்கத் தக்கவகையில் இருக்கும் போது ? அந்த நிலையை நீடித்து நிலைத்திருக்க வைக்க வேண்டுமென்று அரசாங்கம் திட்டம் வகுக்கும் போது, உண்மையான கம்யூனிஸத்திற்கு எப்படித்தடை என்று சொல்லிவிட முடியும்? மேலும் உண்மையான கம்யூனிஸத்திற்குத் தடை விதிக்க வேண்டிய ? எதிர்க்க வேண்டிய அவசியந்தான் ஏன்? என்று கேட்கிறோம். கம்யூனிஸம் பரவுகிறதா என்கிற கேள்விக்கு, கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியா சட்டை செய்யவில்லை; ஏனென்றால் பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி பெற முடியாது என்று பதிலளிக்கிறார் நேரு.
இந்தப் பதிலைத்தான், மஞ்சள் குளிக்கலாம் என்கிற நினைப்பு இன்னும் மாறவில்லை என்று நாம் குறிப்பிடுவது. இங்கு, இந்துஸ்தான் பிரதமர், இந்தியா என்றால் காங்கிரஸ்தான் ? காங்கிரஸ் என்றால் இந்தியா தான் என்பதை மறைமுகமாக ? ஆனால் அழுத்தமாக வற்புறுத்துகிறார்.
முதலாளித்துவக் கொள்கையுடைய ? தனியுடைமைக்கு வாய்க்கால் வெட்டும் ஒரு அரசாங் கத்தில், பொதுவுடைமைக்கு வழிகோலும் யாருமே வெற்றி பெற்றுவிட முடியாது என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுவோம். ஆனால், இந்த நடப்பு என்றைக்குமே நீடித்திருந்துவிட முடியுமா?
ஒவ்வொரு மாகாணத்திலும் காங்கிரஸ் தோழர்களின் நடத்தை, சாக்கடை நாற்றத்தையும் தோற்கடித்துவிடவே, இதற்கு முன்னால் நடந்த அட்வைசர்களின் ஆட்சி எத்தனையோ ஆயிரமடங்கு நல்லது என்று மக்களால் போற்றப்படும் இந்த நிலைமையிலும் கூட, தேர்தல் என்று வந்தால் காங்கிரசுக்குத்தான் வெற்றி என்று பேசுகிறார்கள் காங்கிரஸ் பெருந்தலைவர்கள். உண்மையான நம்பிக்கையாக இருந்தாலும் இருக்கலாம், அல்லது அப்படியாவது பேசித்தான் தீரவேண்டுமென்று நினைக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கை நசித்துக் கொண்டு வருவதை ஏன் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்?
இந்த மாதம் 11 தேதி சென்னை அசெம்பிளிக்கு நடந்த ஒரு உபதேர்தலில், அதன் முடிவு வெளியிடப்பட்டது. காலஞ்சென்ற திராவிடராகிய முத்துரங்க முதலியாரின் இடத்துக்கு ஒருபார்ப்பனரும் ஒரு திராவிடரும் போட்டி போட்டார்கள். பார்ப்பனர், தோழர் சீனுவாசய்யர்; திராவிடர், தோழர் பாலகிருஷ்ண முதலியார். பார்ப்பனத் தோழர், காங்கிரஸ் தலைவர் காமராஜரால் அங்கீகரிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்றவர்; திராவிடத் தோழர் சுயேச்சையாக நின்றவர்.
பார்ப்பனத் தோழருக்காகத் திராவிடக் காமராஜர் பல இடங்கள் சுற்றி சுற்றி, அலைந்து பல முறைகளையும் கையாண்டு, பலநாட்கள் கழித்தார். திராவிடத் தோழருக்காக ? அவர் வெற்றி பெறவேண்டும் என்பதற்கு ஆக யாருமே அப்படிப் பாடுபடவில்லை. ஆனால் நிச்சயமாகச் சொல்லலாம் எந்த ஒரு பார்ப்பனர் கூட அந்தத் திராவிடர் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணியிருக்கவே மாட்டார்கள்.
மேலும், இந்தத் தேர்தலில் கலந்துகொண்டு ஒட்டுக் கொடுப்பவர்களோ, நூற்றுக்கு நூறு பார்ப்பனர்களும் பணக்காரர்களுமே ஆவார்கள் என்பதை மறந்துவிட முடியாது. இந்தத் தேர்தலில் வாக்குக்கொடுப்பதற்கு, மராமத்து பக்தவத்சலனாரும், மாஜி சுகாதார ருக்மணி அவர்களும் பறந்துவந்தார்கள் என்பது பத்திரிகைச் செய்தி. நிதி மந்திரி கோபால் ரெட்டியாரோ, ஜில்லா கலெக்டர் துணையோடு, வினாடி நேரத்தைக்கூட வீணாக்கிவிடாமல், ஒவ்வொரு ஒட்டுச் சாவடிக்கும் ஒட்டோட்டமாய் ஒடி நிலைமையைக் கவனித்திருக்கிறார். இதுவும் தேசீய ஏடுகளின் சேதி.
இப்படியாக மாஜி மந்திரி, சுமங்கலி மந்திரிகளின் பார்வையில்? அவர்களின் ஒத்துழைப்போடு நடந்த தேர்தலில் ? தமிழ்நாட்டு ராஷ்டிரபதி சண்டப்பிரசண்டமாய் பொய்ப் பித்தலாட்ட வார்த்தைகளால் பராக்குக் கூறிவந்து ? கம்யூனிஸ ஒழிப்பு வீரர்களான பணக்காரர்களும் பார்ப்பனர்களுமே வாக்குக் கொடுத்திருந்தும், காங்கிரஸ் வெற்றி பெற்றது எத்தனை வோட்டுகளால்?
காங்கிரஸ் அய்யருக்கு 297. சுயேச்தைத் திராவிடருக்கு 289. எட்டு ஒட்டுகள் வெற்றிக்குக் காரண மென்றாலும், உண்மையில் அய்ந்தே அய்ந்து வோட்டுகள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். இந்த எட்டில், அய்ந்து ஒட்டுகள் மாறி இருக்குமானால், காங்கிரசுக்குத் தோல்வி என்ற நிலை ஏற்பட்டிருக்கும். இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி என்றால், அது அய்ந்துபேருடைய தயவால் ஏற்பட்ட நிலையே தவிர? உண்மையில் மாபெரும் தோல்வியே தவிர? வேறென்ன?
இந்தத் தொகுதியில் இன்னும் இருநூறுபேர் வாக்களிக்கவில்லை என்று வேறு கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வளவு தூரம் அதிகாரமும், சிபார்சும் பயன்படுத்தப்பட்டதோ நாம் அறியோம். இருந்தும் 5-பேர்தான் காங்கிரசின் மானத்தைக்காக்க முன் வந்தார்கள் என்றால், இந்த நிலைமை எதைக் காட்டுகிறது? மஞ்சள் கரைகிறது; கரைந்து கொண்டே வருகிறது என்பதை வற்புறுத்த வில்லையா? ஆனால், குப்புறவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசுவதையே வீரமாகவும்? கிரமமாகவும் கருதிப் பேசிவரும் கரங்கிரஸ் பெந்தலைகள் இதை எப்படி ஒப்புக் கொண்டுவிடும்?
ஆனால் இந்தத் தேர்தலின் முடிவு, காந்தியாரின் கொலையை நியாயமானது என்று வற்புறுத்தியிருக்கிறது என்றால், அதை எந்தக் காங்கிரஸ் தோழர்தான் மறுக்கமுடியும்? எப்படியோ வெளிப் படையாகவும் ஒரு ஆர் எஸ்.எஸ் காரருக்குச் சட்ட சபையில் இடம் கிடைத்துவிட்டது என்றால் யார்தான் இல்லையென்று சொல்லிவிட முடியும்?
குடி அரசு 16.04.1949