20. ஒப்புயர்வற்ற குறள் நாள்!

ஏப்ரல் 12-ல் எங்கும் கொண்டாடுங்கள்!

இந்த மாதத்தில் சென்னையில் குறள் நாள் வெகு ஆடம்பரமாகக் கொண்டாடப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். பெரியார் திரு.வி.க. அவர்களையும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவரும் மகிழ்ச்சியோடு இசைந்தார். ஆனால் அதை இந்த மாதத்தில் நடத்த எனக்குப் போதிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது குறித்து வருந்துகிறேன்.

கோவை ஜில்லா சுற்றுப்பிரயாணமும், பிரசாரப்பள்ளியும் இம்மாதத்தைக் கவர்ந்து கொண்டன. அவற்றை மாற்ற முடியவில்லை. ஆதலால் சமீபத்தில் அடுத்த மாதத்தில் ஒரு நாள் தனிமையாய் சென்னையில் கொண்டாடக் கருதி இருக்கிறேன்.

ஆனாலும் இம்மாதம் 12-ம்தேதி நல்ல முழு நிலவு நாளாக இருக்கும். ஆதலால் 12-ம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் திராவிட கழகத்தார் உட்பட எல்லாத் தமிழ் மக்களும் அவசியம் தவறாமல் ஒவ்வொரு ஊரிலும் திருவள்ளுவர் நாள் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

தமிழர் பண்பு, திராவிடகழகக் கொள்கைகள் யாவற்றிற்கும் குறளில் ஆதாரங்கள் இருக்கின்றன. குறள் ஜாதிகள், மதங்கள், கடவுள்கள் ஆகியவற்றைக் கடந்த அறிவு நூல்; மூடநடம்பிக்கைக்கு ஆளாகாத பகுத்தறிவு நூல்; அன்பையும், ஒழுக்கத்தையும், உயர்ந்த பண்புகளையும் ஜாதியாகவும் மதமாகவும் கடவுளாகவும் கருதச் செய்யும் அரிய நூல். எதைக்கொண்டு இப்படிச் சொல்கிறேன் என்றால், மேற்குறிப்பிட்ட தன்மைகளுக்கு எல்லாம் வேண்டிய ஆதாரங்கள் குறளில் இருக்கின்றன. குறளுக்கு இதுவரை கண்ட உரைகள் பல அவரவர்கள் கருத்துக்கு ஏற்ப கண்டவைகளாகவே காணப்படுகின்றன.

ஆதலால் ஜாதிமத கடவுள் உணர்ச்சி கடந்து இயற்கை உணர்ச்சியோடு பகுத்தறிவைக்கொண்டு நடுநிலையில் நின்று உரை கண்டால் அவ்வுரை மூலம் திராவிடகழகம் விரும்பும் கருத்துக்களைக் காணலாம். ஆதலால் குறளைப் போற்றுங்கள்!! குறளைப் படியுங்கள்! குறள் உள்ளத்தைக் காணுங்கள்!!! எனவே, ஏப்ரல் 12-ம் தேதியை குறள் நாளாகக் கொண்டாடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். – ஈ.வெ.ரா.

குடி அரசு 09.04.1949

You may also like...