9. இன்னும் எவ்வளவு நாள்?

நாடகம் முடிந்து விட்டது! ஆம் ஒண்ணேகால் வருஷத்திற்கு மேலாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திராவிட மாணவர்கள் மீது தொடரப்பெற்று நடந்து வந்த விசாரணை நாடகம் முடிந்து விட்டது!

மாணவர் தலைவர் தோழர் மதியழகனுக்கு 50ரூ.அபராதம்! இன்றேல் ஆறுவாரம் கடுங்காவல் தண்டணை! மாணவத் தோழர்களான திருச்சி கோவிந்தன், நாகை திருஞானம், மதுரை கன்னையன், தருமநல்லூர் திருநாவுக்கரசு ஆகியோருக்கு நூறு நூறு ரூபாய் அபராதம்! இன்றேல் 3-மாதம் கடுங்காவல் தண்டணை!  சிதம்பரம் திராவிடர்கழகத் தலைவர் தோழர் கு.கிருட்டிணசாமி அவர்களுக்கு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை!  இது, பறங்கிப்பேட்டை – சப்மாஜிஸ்திரேட்டால் தரப்பட்டிருக்கும் தீர்ப்பு!

எதற்கு? பார்ப்பனீயம் தான் நாட்டை ஆளுகிறது என்ற ஒரே தைரியத்தினால், பார்ப்பனீய வலையிற் சிக்கியவர்களான, மலையாளத் தொடர்புடைய மாணவத் தோழர்கள், பார்ப்பன ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டிருக்க, போலீஸ்வீரர்கள் பாதுகாப்புச் செய்ய, இருவர் மூவராய் இருந்த அறைக்குள் இருபது முப்பதுபேர் சென்று, தடியாலும் கத்தியாலும் தாக்கி, நடு ராத்திரியில், பச்சை ரத்தம் சிந்தச் செய்தும் பட்டு மடியாமல் உயிரோடு இருக்கிறார்களே அதற்காகவா?

சீரழிந்து கிடக்கும் திராவிடத்தைச்சீர்ப்படுத்த முனையும் இளைஞர்களுக்கு – திராவிட மாணவர்களுக்கு – இழிவு நிலையையுணர்ந்து இழிவைத் துடைக்கப் பாடுபடுவோம் எனத் துணியும் இளங்காளைகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாயிருக் கட்டும் என்பதற்காகவா? பார்ப்பனீய அடிமைகளான காங்கிரசாரின் ஆட்சியில், காங்கிரஸ் என்கிற போர்வையைப் போத்திக் கொண்டு, எந்தக் காலித்தனத்தையும் எப்படிப்பட்ட அட்டூழிய அக்கிரமங்களையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம், கேள்வி கேட்பாடே இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக்குவதற்காகவா? பின் எதற்காக இவர்களுக்குத் தண்டனை?

குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டணை விதிக்கப்பட்ட இந்த மாணவத் தோழர்கள், குற்ற நடவடிக்கைகளிலீடு பட்டவர்கள் என்றால், இவர்கள் அந்த குற்ற நடத்தையை யாரிடத்தில் செய்தார்கள்? வாயில்லாத பிராணிகளான மிருகங்களிடத்திலா? உயிரற்ற மரம் மட்டைகளிடத்திலா? அல்லது உயிருள்ள மனிதர்களிடத்திலா?  உயிருள்ள மனிதர்கள் – மற்றொரு கட்சியைச் சேர்ந்தவர்களான மாணவத் தோழர்கள் மீதுதான் இவர்கள் குற்ற நடத்தையைச் செய்தார்கள் என்றால், அந்த மாணவத் தோழர்கள் என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லையா? ஆனால் உண்மை நடப்பு எப்படி?

பல்கலைக் கழக மாணவர் விடுதியில் பறந்துகொண்டிருந்த திராவிட மாணவ கழகக் கொடியை இறக்கிவிட வேண்டுமென, பார்ப்பன ஆசிரியர்களால் தூண்டிவிடப்பெற்று, சில காங்கிரஸ் மாணவர் கழகத்தினர் தகாத வழியில் முயற்சிசெய்திருக்கின்றனர். இம்முயற்சியினால் பிறகு இருசாரரும் கைகலந்திருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டங்களும், காலித்தனமும் ஒரு பொறுப்புடைய பார்ப்பன ஆசிரியருக்கு முன்னால்தான் நடைபெற்றிருக்கின்றன.

இதற்குப் பிறகு அன்றிரவு நடுச்சாமத்தில், சில போலீஸ் வீரர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, சில பார்ப்பன ஆசிரியர்கள் தலைமையில் 40, 50 காங்கிரஸ் மாணவர்கள் என்பவர்கள் சேர்ந்து கொண்டு தனியாகவும், இருவராகவும், மூவராகவுமிருந்த திராவிட மாணவர்களைக் கதவுகளைத் திறக்கச்செய்து, ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, ஒருவருக்கு எட்டுப்பேர், பத்து பேர் என்ற கணக்கில் கைசலிக்க அடித்துத் தடிகளாலும் தாக்கியிருக்கிறார்கள். ஒரு சிலரைக் கத்தியாலும் தாக்கியிருக்கிறார்கள்.

இவற்றின் விளைவாக, இரண்டுதரப்பு மாணவர்களிலும் அடிபட்டுக் காயம்பட்டவர்களில், திராவிடக்கழக மாணவர்கள் என்பவர்கள் தான் எண்ணிக்கையிலும் அதிகமாகி, அபாயமான காயங்களுக்கும் ஆளானவர்கள் என்பதை ஆஸ்பத்திரி சொல்லுகிறது என்று நாம் அறிகின்றோம்.

மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்ட போலீசார், காங்கிரஸ் மாணவர்கள் 12-பேர் மீதும் திராவிட மாணவர்கள் 6-பேர் மீதுமாக நடவடிக்கையைத் தொடங்கினார்கள், இரண்டு தரப்பார் மீதும் வழக்கு நடைபெற்று வந்தது என்பதும், மேலே நாம் அறிகிறோம் என்பதை வற்புறுத்துவதாகும்.

இந்த நிலையில், சிதம்பரத்திலுள்ள சில காங்கிரஸ் தோழர்கள் தலையிட்டு, காங்கிரஸ் மாணவர்கள் 12-பேர் மீதுநடந்து வந்த வழக்கை வாபீஸ் வாங்கச் செய்ய வேண்டும்மென்று செய்த முயற்சிக்கு, இன்றைய அரசாங்கமும் இணங்கிவிட, மற்றொரு பிரிவினரான 6-பேர், ஒரு வருஷ அலைச்சலுக்கும், பொரும் பெருள் நஷ்டத்திற்கும், படிப்பைக் கெடுத்துக் கொண்ட நிலையில், மேலும் படிப்பைக் கைவிடத்தக்க வகையில் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த ஆறு பேருள் ஒருவரான சிதம்பரம் கழகத் தலைவர் தோழர் கிருட்டிணசாமி, அன்று தற்செயலாகத் தன்னுடைய சொந்தக்கார மாணவரைக் காணச்சென்றவர். இவரையும் சேர்த்துத் திராவிட மாணவர்கள் – திராவிட இயக்கத்தினர் என்பதற்காக ஏன் இந்தப் பட்சபாதகமான நடவடிக்கை?

இதனால் மாஜிஸ்திரேட்டின் தீர்ப்பைக் குற்றம் சொல்ல வேண்டுமென்பதோ, அதைச் சரியில்லை என்று இங்கு எடுத்துக்காட்ட வேண்டுமென்பதோ நம் நோக்கமல்ல. அந்த நோக்கத்தைச் செயல்படுத்துவதும் பத்திரிகையல்ல.

குற்றம் இழைத்தவர் இருசாரார் என்று குற்றஞ் சாட்டியவர்கள் கூற, அவர்களில் பெரும் பகுதியினரான ஒரு சாராருக்கு விலக்களித்துவிட்டு, மற்றொரு சாராருக்குத் தண்டனை வழங்கட்டும் என இன்றைய நிர்வாகம் விட்டிருக்கிறதே இதைத்தான் என்ன நியாயம்? என்ன நீதி? என்று நாம் மந்திரி சபையினரை?போலீஸ் மந்திரி ஓமந்துராரைக் கேட்கிறோம்.

காங்கிரஸ் ஆட்சியில், காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் காலித்தனம் செய்தால், அந்தக் காலித்தனத்தை ஆதரித்துக் காங்கிரஸ் பிரமுகர்கள் என்பவர்கள் சிபார்சுக்கு வந்தால், அவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்பது தான் ஆச்சாரியர் ஆட்சியிலிருந்து இன்று வரை, அதாவது எட்டயபுரத்திலிருந்து அண்ணாமலை நகர்வரை – ஏன் மேலும்கூட இந்த முறைதான் பின்பற்றப்படும் என்பதைக் காட்டி வந்திருக்கிறோமே, இதைவேறு எடுத்துக்கூறவா வேண்டும் என்பதைத் தவிர மந்திரியார் பதில் கூற வேறு மார்க்கமில்லை என்பதை அறிவோம். ஆகவே இதுசரிதானா? என்று நாட்டுமக்களைக் கேட்டுகிறோம்.

காந்தியாரைக் கொலை செய்த கோட்சே கும்பல்களைச் சேர்ந்த ரா.சு.சே.சங்கமாணவர்கள் இன்று – அதாவது காந்தியார் கொல்லப்பட்ட ஒரு வருஷத்திற்குப் பிறகு – மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட, அவர்களை இன்றைய நிர்வாகம் தண்டித்திருக்கிறது:

பலர் மீது வழக்கும் தொடரப் பட்டிருக்கிறது. இப்படித் தண்டிக்கப்பட்ட மாணவர்களுக் கெல்லாம் விடுதலை! நடந்துவரும் வழக்குகள் எல்லாம் வாபீஸ்! காரணம் இவர்களின் படிப்புக்கு இடையூறு இருக்கக்கூடாது என்று மத்திய அரசாங்கம் உத்திரவு போட்டுவிட்டதாம். மாகாண சர்க்கார்களும் அப்படியே செய்யப்போகிறார்களாம்.

மதவெறியைப் பெருக்கிக்கொலை வெறியை வளர்க்கும் ஸ்தாபனத்தைச் சேர்ந்த மாணவர் களுக்கெல்லாம், அவர்கள் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்ட பிறகும் விடுதலை! வழக்குகள் எல்லாம் வாபீஸ்! காங்கிரஸ் மாணவர்களும் திராவிட மாணவர்களும் கைகலந்தால், இருவரையும் குற்றவாளிகள் என்று போலீஸ் கூறினால், காங்கிரஸ் மாணவர்கள் யார் யாருண்டோ அவர்களுக் கெல்லாம் விடுதலை! திராவிட மாணவர்கள் – திராவிட இயக்கத்தினர் யார் யாரைச் சேர்க்க முடியுமோ அவர்களுக்கெல்லாம் தண்டனை! கடுங்காவல் தண்டனை!! என்றால் இந்த ஆட்சிக்கு என்ன பெயர்? என்று நாம் மக்களைக் கேட்கிறோம்.

தண்டனை பெற்றிருக்கும் நம் மாணவத்தோழர்களில், சிலர் இன்னும் படித்துக் கொண்டிருப் பவர்கள் என்பதையும் மனதில் நிறுத்திப் பார்த்தால் ஒரு குலத்துக் கொரு நீதி என்கிற பச்சை மனுதர்ம ஆட்சிதான் இன்று சற்று விரிவடைந்து, ஒரு குலத்துக்கு மட்டுமல்ல, ஒரு கட்சிக்குமொரு நீதி என்கிறமுறை தான் நாட்டை ஆளுகிறதா? அல்லவா? என்று கேட்கிறோம். இந்த மனு ஆட்சியின் வக்கிர நடத்தையை ? வர்ணாச்சிரமப் போக்கைமறைப்பதற்காகத்தானே இந்த விசாரணை நாடகம் இவ்வளவு நீண்ட நாட்களுக்கு நடைபெற்று வந்திருக்கிறது என்று கேட்கிறோம். இந்த மனு ஆட்சி ? அல்லது ராமராஜ்ஜிய ஆட்சி இன்னும் எவ்வளவு நாள்?

குடி அரசு 05.02.1949

You may also like...