7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்
உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்டுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். முதலில் 7 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும். இராஜீவ் கொலையில் நேரடி தொடர்பில்லாத மறைமுக உதவி செய்ததார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் என்ற ஏழு தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்கள். இதில் 3 பேர் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக தண்டனைக் குறைப்புக்கு உள்ளானோர். இப்போது அனைவருமே தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள். சிறைவாசிகளை தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யும் உரிமையை அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு 161ஆவது விதியின் கீழ் வழங்கியுள்ளது. இவர்கள் சி.பி.அய். என்ற மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உள்ளானவர்கள் என்பதால் மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய காங்கிரஸ் ஆட்சி கூறி வந்தது....
